வெண்கொற்றன். (பி-ம்) 5. ‘புழம்புதொ றுலம்பும்’.
(ப-ரை.) தோழி , உறை சிறந்து - மழைத்துளி மிக்கு, ஊதை தூற்றும் - வாடைக்காற்று வீசித் தூவுகின்ற, கூதிர் யாமத்து - கூதிர்ப் பருவத்தின் நள்ளிரவில், ஆன் - எருதானது, நுளம்பு உலம்புதொறு உளம்பும் - ஈ ஒலிக்குந்தோறும் அலைகின்ற, நா நவில் கொடுமணி - நாவினால் முழங்குகின்ற கொடிய மணியின், நல்கூர் குரல் - மெல்லிய ஓசையை, சிறை பனி உடைந்த - தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளித் துளியாக விழுகின்ற, செ அரி மழை கண் - செம்மையான அரிகளையும் குளிர்ச்சியையுமுடைய கண்ணோடும், பொறை அரு நோயொடு - பொறுத்தற்கரிய காமநோயோடும், புலம்பு அலைக் கலங்கி - தனிமை வருத்துதலாற் கலங்கி, கேட்குநர் - கேட்டு வருந்துவார், பிறரும் உளர்கொல் - என்னையன்றிப் பிறமகளிரும் உள்ளாரோ?
(முடிபு) கூதிர்யாமத்து ஆன் உளம்பும் மணியின் குரலைக் கேட்குநர் பிறகும் உளர் கொல்?
(கருத்து) தலைவர் உடனிருத்தற்குரிய இப்பருவத்தில் யானொருத் தியே தனிமைத் துன்பத்தை உடையேன் ஆயினேன்.
(வி-ரை.) நோய் என்பது பிரிவு ஆற்றாமையால் உளதாகுந் துன்பத்தை. புலம்பு அலைக்கலங்கி - புலம்பு அலைத்தலினாற் கலங்கி; ‘நீரலைக் கலாவ - நீரலைத்தலாலே கலக்க மெய்த’ (நெடுநல். 6, ந.) ஒடுவைக் கண்ணுக்குங் கூட்டுக. பிறரும்: உம்மை இறந்தது தழீஇயது. கூதிர்யாமத்தின்கண் தலைவிக்குப் பிரிவின் துன்பம் மிக்குக் காமம் பெருகு மாதலின் அவள் வருந்தினாள்; “யாமங் கொளவரிற் காமங், கடலினு முரைஇக் கரை பொழியும்மே” (அகநா. 128: 3-4.) தலைவனோடு இருந்து இன்புறுதற்குரியவை கூதிராகிய பெரும்பொழுதும் யாமமாகிய சிறு பொழுதும்; இவை குறிஞ்சி யொழுக்கத்துக்குரியன. அக்காலத்திலும் தலைவர் வாராராயினரென்று தலைவி கவன்றாள். நுளம்பு - ஈ; இங்கே மாட்டு ஈ; “நின்னருள், ஆணை வைப்பிற் காணொணா வணுவும், வானுற நிமிர்ந்து காட்டுங், கானிலான் உளம்புங் கருடன் ஆதலினே” (கோயினான் மணிமாலை, 4:23-6) தன்னைத் துன்புறுத்தும் அவ்வீயின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் அதனால் முன்னர்த் துன்புற்றறிந்த ஆன் அதனை யோட்டும் பொருட்டுத் தலையை அசைக்க அப்பொழுது அவ்வானின் கழுத்திலுள்ள மணி யசைந்து ஒலித்தது. உளம்புதல் - அலைத்தல் (கலி. 23:1, ந.) தான் கேட்பதற் கின்னாமையின் கொடுமணி என்றாள். யாவரும் துயிலும் யாமமாதலின் அம்மணியின் மெல்லிய குரலும் இவளுக்குக் கேட்டது. அவ்வொலி, யாமத்தையும் தன் தனிமையையும் மிகுதியாகக் காட்டித் தலைவியைத் துன்புறுத்தியது. குரலே:ஏ, அசை நிலை.
தலைவர் இருத்தற்குரிய கூதிர் யாமத்தில் அவரைப் பிரிந்து இருப்பது எவ்வாறு என்று தலைவி இரங்கினாள்.
(மேற்கோளாட்சி) 1. சிறை யென்பது தடுத்துக் காத்தலை யுணர்த்தும் (சீவக. 2890, ந.) மு. தனித்துழி இறைவி துனித்தழுதிரங்கல் (நம்பி. 205.)
ஒப்புமைப் பகுதி 2. சேயரிக்கண்: ஐந். ஐம். 15. தலைவன் பிரிவினால் தலைவி அழுதல்: குறுந். 38: 4-5, ஒப்பு.
2. பொறையருநோய்: “பொறைநில்லா நோயோடு” (கலி. 3:4) புலம்பலைக்கலங்கி: “நோயலைக் கலங்கிய” (நற். 94:1); நற். 44:2, ஐங்.77:2, 471:2. 3.பிறர்: குறுந். 246:5. தலைவி என்னைப் போலப் பிறரும் உளரோவென்றல்: நற். 104:8-12; அகநா. 202:9-15.
4. ஊதை தூற்றும் யாமம்: “ஊதைகூட்டுண்ணு முகுபனியாமத்து” (நன்.349, சங். மேற்.) 3-4. உறையும் ஊதையும்: குறுந். 55:2-3, ஒப்பு.
5-6. ஆன்மணி: மலைபடு. 573. 4-6.தலைவி யாமத்தில் ஆன்மணி யோசை கேட்டுத் துன்புறுதல்: குறுந். 190: 5-7, 279: 1-4.
(86)