கபிலர். (பி-ம்) 5. ‘ஞெகிழிய’.
(ப-ரை.) மன்றம் மராத்த - பொதுவிடத்திலுள்ள மராத் தின்கண் தங்கும், பேஎம் முதிர் கடவுள் - பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம், கொடியோர் - கொடுமை யுடையாரை, தெறூஉம் என்ப - வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்; எம் குன்று கெழு நாடர் - குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய எம் தலைவர், யாவதும் கொடியர் அல்லர் - சிறிதும் அத்தெய்வத்தால் ஒறுத்தற்குரிய கொடுமையை யுடையரல்லர்; நுதல் பசைஇ பசந்தன்று - என்நெற்றி நான் அவரை விரும்பியதனால் பசலை பெற்றது; ஞெகிழ - என் மனம் அவர் திறத்து ஞெகிழ்ந்தமையால், தட மெல் தோள் - பரந்த மெல்லிய என் தோள், ஞெகிழ்ந்தன்று - மெலிவுற்றது.
(முடிபு) கடவுள் கொடியோரைத் தெறூஉம் என்ப; எம் நாடர் கொடியர் அல்லர்; என்நுதுல் பசைஇப் பசந்தன்று; ஞெகிழத் தோள் ஞெகிழ்ந்தன்று.
(கருத்து) என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் காரணரல்லர்.
(வி-ரை.) மன்றமென்பது பலர் கூடியிருக்கும் மரத்தினடி. மராம் - செங்கடம்பு. இதன்கண் தெய்வம் இருத்தல், “நல்லரைமரா அத்த, கடவுள்” (மலைபடு. 395-6) என்பதனாலும் பெறப்படும். கொடியோரை வருத்துவதாதலின் ‘பேஎமுதிர் கடவுள்’ என்றாள். பேஎம் - அச்சம்; குறுந். 89:4.
தலைவன் தலைவியோடு அளவளாவிய பொழுது கடம்ப மரத்திலு றையும் கடவுள்மேல் ஆணையிட்டு, “நின்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்” என்று தெளித்தான்; பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள். தன்னுடைய வேறுபாடு களுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின், அக் கொடுமை கருதி அவனாற் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒறுக்கு மென்று அவள் கவன்றனள். ஆதலின் தலைவன் கொடுமையுடைய வனல்லனென்று கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டுமென்று தெய்வத்தைப் பரவினாள்.
குன்றுகெழுநாடரென்றது தலைவரென்னுந் துணையாய் நின்றது. பசைதல் - விரும்புதல்; “பசைஇய கேள்வனை” (பெருங். 5.1:229.).தலைவன் பிரிவினால் நுதல் பசந்தது.
நுதற்பசலையும் தோள்ஞெகிழ்வும் தலைவன் கொடுமையினால் உண்டானவையல்ல; என்னுடைய மனநிலையினாலேயே அவை உண்டாயினவென்று தலைவி கூறினாளாயிற்று. அவர்பாற் குற்றமில்லை யாதலின் அத்தெய்வம் அவரைப் பாதுகாக்க வேண்டுமென்பதும் குறிப்பு.
நுதலே, தோளே: ஏகாரங்கள் அசைநிலை.
(மேற்கோளாட்சி) 5-6. பேமென்னும் உரிச்சொல் அச்சமாகிய குறிப்புணர்த்தி நின்றது (தொல். உரி. 68, இளம், 69, சே, தெய்வச், 67, ந.); மன்றமரா அத்த பேஎமுதிர் கடவுளென்பது மரா அத்துக் கடவுளென நிற்கும (தொல். எச்ச. 65, ந.) மரா அத்த கடவுளென்பது பகுதிப்பொருள் விகுதிபெற்று நின்றது (இ.வி.300.) 1-2. தெய்வமஞ்சல் என்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 24, இளம்.) மு. தலைவன் செய்த சூளுறவு பொய்த்தற்காகத் தெய்வம் அவனை வருத்துமென்று தலைவி அஞ்சியபொழுதும் தாவில் நன்மொழி கூறும் பொழுதும் தலைவிக்குக் கூற்று நிகழும் (தொல். களவு. 21, 23, இளம்.); தலைவன் தெய்வத்தை நோக்கிச் சூளுற்றுப் பொய்த்தானாக, தெய்வம் அச்சூளுறவிற்கு அவனை வருத்துமென்று அச்சம் நீட்டிப்பின் லைவிக்குக் கூற்று நிகழும் (தொல். களவு, 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. மன்றமராஅம்: தஞ்சை. 307. மராமரத்திலுள்ள கடவுள்: கலி. 101:14-5; தஞ்சை. 132. 1-2.கடவுள் கொடியோரைத் தெறுதல்: பரி.8: 65-8; சிலப்.5: 128-34.
4. நுதல் பசத்தல்: குறுந்: 48:5, 205:7, நற்.73:10, 108:8, 133:3, 167:11. 247:7-8, 288:5, 322:9, 368:7, 388:1-3; ஐங்.55:4, 67:5, 105:4, 107:2, 219:4, 222:4; கலி. 28:15; அகநா.102:19, 235:17, 376:13.
5. தோள் நெகிழ்தல்: குறுந். 77:6, 90:7, 111:1, 210:5, 239:1, 357:2, 377:2, 381:1, நற்.130:7, 131:9, 237:1; ஐங்.39:3, 133:3; அகநா. 1:8, 41:1-2, 169:13, 270:4, 4-5.நுதல் பசத்தலும் தோள் நெகிழ்தலும்: குறுந். 185:1-2; நற். 151:1, 197:1-2. அகநா.85:1, 171:1-3, 307:1.
(87)