(தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாளாக, அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றுதலைத் தோழி தலைவன் சிறைப்புறத்திலிருக்கும் பொழுது புலப்படுத்தி, விரைவில் வரைதல் நலமென்பதை உணர்த்தியது.)
 89.    
பாவடி யுரல பகுவாய் வள்ளை  
    
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப 
    
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே 
    
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் 
5
கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய 
    
நல்லியற் பாவை யன்னவிம் 
    
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே. 

என்பது (1) தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.

     (தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி வள்ளைப் பாட்டைப் பற்றிக் கூறுதல்: கலி.40-42.)

(2) தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி வாயின் மறுத்ததுமாம்.

பரணர்.

    (பி-ம்) 1. ‘பாவடிபுழல’ 2. ‘நுவறல்’ 6. ‘யன்னவென்’ 7. ‘பாடிநன் குறினே’.

    (ப-ரை.) பெரு பூண் பொறையன் - பெரிய அணிகலத் தையுடைய சேரனுக்குரிய, பேஎம் முதிர் கொல்லி கரு கண் தெய்வம் - அச்சந்தருதல் மிக்க கொல்லிமலையிலுள்ள கரிய கண்களையுடைய தெய்வம், குடவரை எழுதிய - அம் மலையின் மேற்குப் பக்கத்தில் எழுதிய, நல் இயல் பாவை அன்ன - நல்ல இயலையுடைய பாவையை ஒத்த, இ மெல் இயல் குறுமகள் - இந்த மெல்லிய இயல்பையுடைய தலைவி, பாடினள் குறின் - தலைவனுடைய பெயரைப் பாடி இடிப் பாளாயின், பா அடி உரலபகுவாய் வள்ளை - அங்ஙனம் அவள் பரந்த அடியினையுடைய உரலினது பகுவாயிடத்துத் தானியம் இடிக்கும் பொழுது பாடும் வள்ளைப் பாட்டைக் குறித்து, ஏதில் மாக்கள் - அயலார்கள், நுவறலும் நுவல்ப - குறை கூறுதலையும் செய்வார்கள்; இ பேதை ஊர்க்கு - இத்தகைய அறிவின்மையையுடைய ஊரினர் கூறும் சொற்களின் பொருட்டு, அழிவது எவன் - வருந்துதலாற் பயன் யாது?

    (முடிபு) குறுமகள் பாடினள் குறின், மாக்கள் நுவல்ப; இப்பேதை யூர்க்கு அழிவது எவன்கொல்?

    (கருத்து) ஊரினர், தலைவி ஒரு தலைவன்பால் நட்புடையளென்பதை அறிந்துகொண்டனர்.

    (வி-ரை.) பா அடி - பரந்த அடி (புறநா. 233:2) பகுவாய் வள்ளை - மகளிரது பகுவாயிலிருந்து வெளிப்படும் வள்ளைப் பாட்டுமாம்.

    வள்ளை உரற்பாட்டு (தொல். புறத்திணை. 8, ந.) மகளிர் உரலில் நெல் முதலியவற்றை இடிக்கும்போது அதனால் உண்டாகும் அயர்வு தோற்றாதிருக்கும் பொருட்டுப் பாட்டுப்பாடுதல் இயல்பு; இங்ஙனம் பாடும் பாட்டு வள்ளைப் பாட்டெனப்படும். இவ்வகைப் பாட்டையும் செயலையும் பல்வரிக் கூத்துள் அடக்குவர் “உந்தி யவலிடி யூராளி யோகினிச்சி” (சிலப். 3:13, அடியார். மேற்.) அவலிடி யென்றும் அம்மனை வள்ளை யென்றும், உலக்கைப் பாட்டென்றும் இது கூறப்படும்.

    இப்பாட்டு, இடிப்பவர்களுடைய அன்புக்குரியாரைத் தலைவர்களாகப் பெற்றிருத்தல் மரபு; மகளிர், தெய்வத்தையும் (திருவா. திருப்பொற் சுண்ணம்), அரசர்களையும் (சிலப். 29), தமையன்மாரையும் (பெருங்.2.14: 50-52), தலைவனையும் (கலி. 40-42) வள்ளைப்பாட்டிற் பாடுவர்.

     பேய்கள் போர்க்களத்தில் ஒரு தலைவன் வெற்றி பெற்ற காலத்திற் கூழ் சமைப்பதற்குமுன் அங்குள்ள பொருள்களை உரலிலிட்டு இடிக்கும் போது தலைவனை வாழ்த்துதல் மரபென்று பரணி நூல்களால் தெரிய வருகின்றது. ‘சும்மேலோ சும்முலக்காய்’ என்னும் ஈற்றையுடைய செய்யுட்கள் வள்ளைப் பாட்டுக்களாக அந்நூல்களிற் காணப்படுகின்றன; அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப்பரணி, பாசவதைப் பரணியென்பவற்றைப் பார்க்க.

     ஏதின்மாக்கள் - அயற்றன்மையையுடையார்; மாக்களென்றாள், தலைவியின் நிலையை அறிந்து இரங்கும் தன்மை இன்மையின். நுவறலும் நுவல்ப: “நல்கலும் நல்குவர்” (குறுந். 37:1) என்பதன் விசேடவுரையைப் பார்க்க.

     பெரும்பூண் - பேரணிகலம்; இது மார்பில் அணியப்படுவது.

     பொறையன் கொல்லி: கொல்லிமலை வல்வில் ஓரிக்குரியது; அவ்வோரியைப் பொருது வென்ற காரி அம்மலையைச் சேரனுக்கு ஈந்தானாதலின் அஃது அச்சேரனுக்குரியதாயிற்று (அகநா. 209.)

     கொல்லிப்பாவை: இது கொல்லிமலையின் மேல்புறத்திலே தெய்வத் தால் அமைக்கப்பட்டது; இது கண்டோர் நெஞ்சங் கலங்கி மயங்கி வீழ்ந்து உயிர்விடச் செய்வது. தலைவிக்கு உவமையாக இப்பாவை இந்நூல் 100-ஆம் செய்யுளிலும் கூறப்பட்டுள்ளது. இது நகைத்துத் தன் முன் வந்தாரைக் கொல்லுமென்பர் (சித்திர மடல்.)

     தலைவன் வரையாமல் வந்து ஒழுகினானாக, அதனை ஆற்றாது வருந்திய தலைவி ஏனையோருடன் உரலில் தானியத்தை இடிப்பாளாய்த் தலைவனைப் பாடி ஆற்றினாள்; அங்ஙனம் அவள் பாடியதையறிந்து உடனிருந்த மகளிர், தலைவி ஒரு தலைவன் பாற் காதலுடையா ளென்றுணர்ந்து அலர் கூறினர். தலைவன் வேலிப் புறத்தில் இருக்கும்போது தோழி இச்செய்தியைத் தன்னுள்ளே கூறுவாள்போன்று சொல்லித் தலைவியின் நிலையைப் புலப்படுத்தி விரைவில் வரைந்துகொள்ள வேண்டுமென்னும் குறிப்பைத் தலைவனுக்கு உணர்த்தினாள். இங்ஙனம் உணர்த்தியதனால் அவன் ஆராய்ந்து விரைவில் மணத்திற்குரியன செய்தல் பயன். இவை கலித்தொகை 43-ஆம் செய்யுளாலும், அதன் கருத்தாகிய,

     ‘இது வரைவு நீட ஆற்றாளாயினவிடத்துத் தோழி தானுந் தலைவியும் வள்ளைப்பாடலுள் முருகனைப் பாடுவார்போல இருவர்க்கும் ஏற்பத் தலைவனைப் பாடத் தலைவி ஆற்றினமை தோழி தன்னுள்ளே கூறுவாளாய்த் தலைவன் சிறைப்புறமாகக் கூறியது’.

என்பதனாலும், அச்செய்யுளின் விசேடவுரையில் நச்சினார்க்கினியர்,

     ‘எனத் தன்னுள்ளே கூறுவாளாய்த் தலைவன் சிறைப்புறமாகக் கூறினாள், அவன் கடிதாக வரைதற்கு. இதனால் தலைவற்குச் சூழ்ச்சி பிறந்தது’

என்றெழுதியவற்றாலும் விளங்கும்.

    தலைமகள் தன் நெஞ்சுமிக்கது வாய்சோர்ந்து தலைவனைப் பாடினாள்:

  
“பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர்  
  
 உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கன்னோ 
  
 மனனொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப் 
  
 புனனாடன் பேரே வரும்”                    (யா-கா. 9, மேற்.) 

என்பதனைக் காண்க.

     ‘அழிவ தெவன்கொல்’ என்றது, இப்பேதையூரினர் நுவலுதலால் நன்மையே யுண்டாமாதலின் இதற்கு வருந்தல் வேண்டாவென்னும் குறிப்பினது.

     கொல், ஏகாரங்கள்: அசைநிலைகள்.

    இம்மெல்லியற் குறுமகளென்றமையின் தலைவியும் அருகிலிருந்தமை பெறப்படும.்

    ‘வள்ளைப் பாட்டைத் தலைவனோடு தொடர்பில்லா அயலார்களும் பாடுகின்றார்கள்; அங்ஙனம் இருப்ப இவள் பாடியதால் வரும் ஏதம்யாது?’ என்று நின்றவாறே பொருள் செய்தலும் ஒன்று. தலைவி தன் நலன் இழந்தமையால் வள்ளைப் பாட்டைப் பாடினள்; அதைப்பற்றி ஊரவர் பழிமொழி கூறுகின்றனர். அவ்வாறு கூறுவதற்கு அவர்க்கு வந்த கேடு யாதெனப் பொருள் கூறலும் ஒன்று; “கல்லக வெற்பன் சொல்லிற் றேறி, யாமெந் நலனிழந் தனமே யாமத், தலர்வாய்ப் பெண்டி ரம்பலொடொன்றிப், புரையி றீமொழி பயிற்றிய வுரையெடுத், தானாக்கௌவைத் தாகத், தானென் னிழந்ததிவ் வழுங்க லூரே” (நற். 36: 4-9)

     இரண்டாவது கருத்துக்கு இயைபு வருமாறு: பாடினள் - தலைவனது கொடுமையைப் பாடினளாய்; ஏதின் மாக்கள் - தலைவியோடு உறவில்லாத பரத்தையர். தலைவி, தலைவன் பரத்தையர்பால் அமைந்திருக்கும் கொடுமையையும், பரத்தையர் அவனை விடாது பற்றியிருக்கும் தன்மை யையும் பாடிக் குற்றினாளாக, அது கேட்டுப் பரத்தையர் தலைவியை இழித்துரைத்தனளென்று கேட்ட தோழி, “தலைவி பாடிக் குற்றினால் பரத்தையர் குறை கூறுதல் என்? அவர்கள் கூறுவது கூறுக. யாம் அஞ்சேம்” என்று வாயில்கள் கேட்கும்படி கூறி வாயில் மறுத்தாள்.

     இக்கருத்து முன்னையதினும் சிறப்புடையதன்று.

    (மேற்கோளாட்சி) மு. தலைவன் ஒழுகலாறு புறத்தார்க்கும் புலனாகி அவர் தூற்றப்பட்ட இடத்துத் தோழியைச் செவிலி வினாவியது (தொல். களவு. 25, இளம்.); செவிலி தானே கூறியது (தொல். உவம. 25, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. பாவடி: குறுந். 180:1: புறநா. 233. வள்ளைப் பாட்டு: “தினைகுறு மகளி ரிசைபடு வள்ளையும்” (மலைபடு. 342); “கொல் யானைக் கோட்டால் வெதிர்நெற் குறுவாநாம், வள்ளை யகவுவம் வா” (கலி. 42:7-8); “அறையுர னிறைய வைவனப் பாசவல், இசையொடு தன்னைய ரியல்புபுகழ்ந் திடிக்கும், அம்மனை வள்ளை” (பெருங். 2.14: 50-52); “பைம்பொன் னறைமேற் பவழ முரலாக, வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி, அம்பொன் மலைசிலம்ப வம்மனை வள்ளையுடன், கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார்” (சூளா. சுயம்வரச். 106); “மனையளகு, வள்ளைக் குறங்கும் வளநாட” (திருவள்ளுவ. 5); “வள்ளை வெள்ளை நகையார்” (திருச்சிற். 221.); மலைபடு. 360; கல்.42.

    2. மாக்கள்: குறுந். 6:2, ஒப்பு. ஏதின் மாக்கள்: புறநா.58:27. நுவறலு நுவல்ப: குறுந்.37:1, ஒப்பு.

    3. பேதையூர்: குறுந். 159:7, 276:7-8.

    4-6. கொல்லிமலையில் தெய்வம் எழுதிய பாவை: “பொறையன், உரைசா, லுயர்வரைக் கொல்லிக் குடவயின், .... நெடுவரைத் தெய்வ மெழுதிய, வினைமாண் பாவை யன்னோள்”, “பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப், பூதம் புணர்த்த புதிதியல் பாவை, விரிகதிரிளவெயிற் றோன்றி யன்னநின்” (நற். 185:6-11, 192: 8-10); “பொறையன் கொல்லி, ஒளிறுநீ ரடுக்கத்து வியலகம் பொற்பக், கடவு ளெழுதிய பாவையின், மடவது மாண்ட மாஅ யோளே”, “கொல்லி, நிலைபெறு கடவுளாக்கிய, பலர்புகழ் பாவை யன்னநின் னலனே” (அகநா. v62:13-6, 209:15-7); ‘தெய்வப்பாவை - தெய்வத்தாற் செய்த கொல்லிப் பாவை’ (சீவக. 657, ந.):கொல்லிப்பாவை: நற். 201:5-11; கலி.56:7, ந. சிலப்.6:61, அடியார்.சீவக.197, 667, ந.

    7. மெல்லியல்: குறுந். 70:5, 137:1. தலைவியைக் குறுமகள் என்றல்: குறுந். 70:1, 95:3, 101:5, 189:6, 267:5, 276:1, 280:3, 295:5.

(89)