(பரத்தையிற் பிரிந்து மீண்ட தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவிடத்துத்தோழி, "தலைவனது பரத்தைமையாகிய கொடுமையால் துன்புறுபவளாயினும்தலைவி அவன் செய்த குற்றத்திற்குத் தான் நாணி எமக்கும் அறிவியாமல் மறைத்துக் கற்பொழுக்கத்திற் சிறப்புற்றிருக்கின்றாள்; ஆதலின் சினந்திலள்” என்று கூறுமுகத்தால் தலைவியைக் கண்டு மகிழ்தல் இயலும் என்பதைத் தலைவனுக்குப் புலப்படுத்தியது.).
 9.   
யாயா கியளே மாஅ யோளே 
    
மடைமாண் செப்பிற் றமிய வைகிய 
    
பெய்யாப் பூவின் மெய்சா யினளே 
    
பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் 
5
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும் 
    
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் 
    
தண்ணந் துறைவன் கொடுமை 
    
நம்மு னாணிக் கரப்பா டும்மே. 

என்பது தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

கயமனார்.

     (பி-ம்.) 1.‘யாயாகியளோ’ 2. ‘றமியள்’ 3. ‘மெய்சாயுநளே’ 4. ‘நம்முணாணிக் கரப்பா டுதுமே’

     (ப-ரை.) மாஅயோள் - இயல்பாகவே மாமை நிறத்தை உடையவளாகிய தலைவி, மடைமாண் செப்பில் - இப்பொழுது மூட்டு வாயால் மாட்சிமைப் பட்ட செப்பினுள், தமிய வைகிய - இட்டு அடைப்பத் தனித்தனவாகிவைகிய, பெய்யா பூவின்-சூடப்படாத பூக்களைப் போல, மெய்சாயினள் -உடல் மெலிந்தாள்; பசு அடை நிவந்த - பசுமையாகிய இலைக்கு மேலேஉயர்ந்து தோன்றும், கணைகால் நெய்தல் - திரட்சியை உடைய காம்பைஉடைய நெய்தல் பூவானது, இனம் மீன் இரு கழி - கூட்டமாகிய மீன்களைஉடைய கரிய கழியின்கண், ஒதம் மல்கு தொறும் - வெள்ளம் அதிகரிக்குந்தோறும், கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் - ஆழமான குளத்தில்முழுகும் மகளிரது கண்ணை ஒத்தற்கு இடமாகிய, தண்ணந்துறைவன்கொடுமை-தண்ணிய துறையை உடைய தலைவனது கொடுமையை, நம்முன் நாணி- நம் முன்னே சொல்லுதற்கு நாணமுற்று, கரப்பு ஆடும் -மறைத்தலை உடைய சொற்களைச் சொல்லுகின்றாள்; ஆதலின், யாய்ஆகியள்- கற்புக்கடம் பூண்டவளானாள்.

    (முடிபு) மாயோள் மெய் சாயினள்; துறைவன் கொடுமை நாணிக் கரப்பாடும்; ஆதலின் அவள் யாயாகியள்.

    (கருத்து) தலைவனது கொடுமையைத் தலைவி மறந்து அவனைஏற்றுக் கொள்வாள்.

    (வி-ரை.) தலைவியை யாயென்றது, புலத்தற்குக் காரணமான பரத்தைமை தலைவன்பால் உளதாகவும் அதை மனங்கொள்ளாத கற்பின் சிறப்பை நோக்கி (ஐங்.1,உரை.) மாயோள்- மாமை நிறத்தைஉடையவள்; மாமை நிறம் என்பது மாந்தளிர் போன்ற அழகிய நிறம்; அஃது இலாவணியம் எனப்படும். தமிய வைகிய பூ, பெய்யாப் பூவென்க.நெய்தற் பூவிற்குப் பல கால் மூழ்கி எழும் மகளிர்கண் உவமை. இவள் நாணி மறைத்தாலும் அவன் கொடுமையால் இவள் துன்புறுதலை இவளதுஉடல் மெலிவால் யாமறிந்தேம் என்பதைப் புலப்படுத்துவாள்,`மெய்சாயினள்’ என்றாள். கரப்பாடும்மே; செய்யுளோசை நோக்கி மகரஒற்று விரிந்தது.

    சிறப்பில்லாத நெய்தல் பூக்கள் சிறப்புடைய மகளிர் கண்களைமானுமென்றமையால், சிறப்பில்லாத பரத்தையர் தலைவனுக்குச்சிறப்புடைய தலைவியை ஒத்தனர் என்னும் குறிப்புப் பெறப்படும்;(ஐங். 2, உரை.)

    மேற்கோளாட்சி4. கருப் பொருள்களுள் நெய்தல் பூச் சிறத்தலால் கடலைச்சார்ந்த நிலம் நெய்தல் என்னும் பெயர் பெற்றது (இ. வி. 379.)

    6. இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு உவம உருபோடுவந்தது (தொல். உவம. 11, பேர்.); மான என்பது வினை உவமத்தின்கண் வந்தது (தொல். உவம. 12, பேர்.) 4-6. நெய்தல் நிலம் நெய்தற் பூச்சிறத்தலால் பெற்ற பெயர் (தொல். அகத். 5, இளம்.); ‘பொருட்கு அடுத்த அடையும் உவம அடைக்கு ஏற்றது, உணரப்படாதன களையப்படு மென்பது; பாசடை நிவந்த கணைக்காலென நெய்தலாகிய பொருட்குவந்த அடையிரண்டும் உவமத்திற்கு ஏற்ப வாராமையான் அவை தெளிமருங்கிலஎன்று களைந்து கொள்க’ (தொல். உவம. 20, பேர்.)

    7. தண்ணந்துறைவன்: விரிக்கும்வழி விரித்தலென்னும் செய்யுள் விகாரம் (தொல். எச்ச. 7, ந.)7-8. தலைவியைச் சுட்டி ஒருவர் ஒருவருக்குஉரைப்பார் போல வாயில்கள் தம்முள் கூறவும் பெறும்; அவையும்தலைவி கேட்பன; இது பாடினி பாணற்கு உரைத்தது (தொல். செய். 201, பேர்; 199, ந.)

    மு. தலைமகனைப் பேணாத ஒழுக்கத்தினால் தலைமகள் நாணியபொருண்மைக் கண்ணும் தோழிக்குக் கூற்று நிகழும் (தொல். கற்பு. 7,இளம், 8, ந.); தலைவியின் தன்மைகளை அகம் புகல் மரபின் வாயில்கள்தலைவற்கு உணர்த்துதல் (தொல். கற்பு. 11, இளம்.); பாங்கி தலைவியைப் புகழ்தல் (நம்பி. 207, உரை.)

     ஒப்புமைப் பகுதி 1. வருதல்: மாஅயோள்: குறுந். 132:6, 199:5; அகநா. 62: 16.

    3. பெய்யாப் பூவைப்போல மெலிதல்: “பெய்யாது வைகிய கோதை போல, மெய்சாயினை’’ (நற். 11:1-2); “பெய்யா மலரிற் பிறிதாயினாளே” (சீவக. 1960.) 2-3. செப்பிலே பூவை வைத்தல்: “புடையமை பொலிந்த வகையமை செப்பிற் ..... கமழ் நறும்பூ” (மதுரைக். 421-3); “முதிரா வேனி லெதிரிய வதிரல், பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர், நறுமோ ரோடமொ டுடனெறிந் தடைச்சிய, செப்பு” (நற். 337:3-6); “செப்புவா யவிழ்ந்த தெம்பொதி நறுவிரை, நறுமலர்” (சிலப். 22:121-2); “பித்தி்கக் கோதை செப்புவாய் மலரவும்”, “பூத்தகைச் செப்பும்’’, (பெருங். 1.33:76, 3.5:78); “காம விலேகையுங் கற்பக மாலையும், சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு” (சூளா. மந்திர. 56.) செப்பிற் பூவைப் போல மெலிதல்: “வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம்” (கலி.68:15); “வகைவரிச்செப்பினுள் வைகிய மலர்போற், றகைநலம் வாடி” (மணி. 4:65-6.)

    4. நிவந்த நெய்தல்: “நீணறு நெய்தல்” (குறிஞ்சிப். 79.) கணைக்கால் நெய்தல்: பெரும்பாண.் 213; நற். 138:6: அகநா. 360:4 4-5. கழிநெய்தல்: குறுந். 336:5: நற். 117:2-3, 382: 1-2; ஐங். 183:5 4-6. நெய்தற் பூவிற்குக் கண் உவமை: “கண்போ னெய்தல்”, “கழிசேர் மருங்கிற் கணைக்கா னீடிக், கண்போற் பூத்தமை கண்டு நுண்பல, சிறுபா சடைய நெய்தல்”, “ஒண்ணுதன் மகளி ரோங்குகழிக் குற்ற, கண்ணே ரொப்பிற் கமழ்நறு நெய்தல்” (நற். 8:8, 27:9-11, 283: 1-2); “கண்போனெய்தல்” (ஐங். 151:4); “இருங்கழி மலர்ந்த கண்போனெய்தல்” (அகநா. 170:4); ‘‘கண்ணவிழ் நெய்தலும்’’(சிலப். 14:77.)

    7. தலைவனது கொடுமை: குறுந். 145: 2, 224: 2, 245: 5: ஐங். 11:2, 12: 2: இறை. 45. 7-8. தலைவி தலைவனது கொடுமையை மறைத்தல்: “தன்னெவ்வங் கூரினு நீ செய்த வருளின்மை, என்னையு மறைத்தாளென் றோழியது கேட்டு, நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூற றானாணி; கூரு நோய் சிறப்பவு நீசெய்த வருளின்மை, சேரியு மறைத்தாளென் றோழியது கேட்டாங், கோருநீ நிலையலை யெனக்கூற றானாணி; நோயட வருந்தியுநீசெய்த வருளின்மை, ஆயமு மறைத்தாளென் றோழியது கேட்டு, மாயநின் பண்பின்மை பிறர்கூற றானாணி’’, ‘‘இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலின், நின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன்’’(கலி. 44:8-16, 124:13-4).

     மு. (குறுந். 10): ‘‘வேயாது செப்பி னடைத்துத் தமிவைகும் வீயினன்ன, தீயாடி சிற்றம் பலமனை யாடில்லை யூரனுக்கின், றேயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள், யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே’’ (திருச்சிற்.74.)

(9)