மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன். (பி-ம்) 3. ‘மருங்குன்’ 4.’பலவுக்கனியினைவரை’ 5.’யுண்டுறை’ 7.’சால்பின் றன்றே’
(ப-ரை.) தோழி-----, முற்றுபு - சூல் முற்றி, கறி வளர் அடுக்கத்து - மிளகுகொடி வளர்கின்ற மலைப்பக்கத்தில், இரவில் முழங்கிய - இராக்காலத்தில் முழக்கத்தைச் செய்த, மங்குல் மா மழை - மேகத்தினது பெரிய மழைக்கால், வீழ்ந்தென - வீழ்ந்தனவாக, பொங்கு மயிர் கலை - மிக்க மயிரையுடைய ஆண்குரங்கு, தொட - தீண்டியதனால், இழுக்கிய - நழுவிய, பூ நாறு பலவு கனி - மலர்மணத்தை வீசும் பலாப்பழத்தை, வரை இழி அருவி - மலைப்பக்கத்தில் வீழும் அருவியானது, உண் துறை தரூஉம் - நீருண்ணுந் துறையின்கண் கொண்டு வருகின்ற, குன்றம் நாடன் கேண்மை - குன்றுகளுள்ள நாட்டையுடைய தலைவனது நட்பு, மெல் தோள் சாய்த்தும் - நின் மெல்லிய தோள்களை மெலியச் செய்தும், சால்பு ஈன்றன்று - அமைதியைத் தந்தது, இஃது, எற்று - எத்தகையது!
(முடிபு) தோழி, குன்றநாடன் கேண்மை தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்று; இஃது எற்றோ!
(கருத்து) நீ மெலிந்தாயாயினும் இயல்பு வேறுபட்டாயல்லை.
(வி-ரை.) எற்று - எத்தகையது; என்ன வியப்பைத் தருவதென்பது நினைவு; மெலிவைத் தருவதற்கும் அமைதியைத் தருவதற்கும் ஒருங்கே காரணமாயிருப்பது வியப்பாதலின் ‘எற்றோ’ என்றாள். முற்றுபு - சூழ்ந் தெனலுமாம். அடுக்கம் - பக்கமலை (முருகு. 42, ந.) இரவில் முழங்கிப் பெய்த மழையினால் அருவிஉண்டாகி அது காலையில் பலாப் பழத்தை உண்டுறையினிடத்தே தந்தது. பூ நாறு - பூவைப் போன்ற மணத்தை வீசும்; மலர்களே மணம் வீசுதலிற் சிறப்புடையவை; பலவின் பழம் நெடுந்தூரத்திலுள்ளாரும் அறிதற்குரிய மணத்தை வீசுதலால் பூ நாறு பலவுக்கனி யென்றார்.
உண்துறை - ஊரினர் நீர் உண்ணுகின்ற துறை. இயல்பாகவே மென்மையையுடைய தோள் மெலிந்ததென்பாள் மென்றோள் சாய்த்து மென்றாள். சால்பாவது, தலைவன் வரைந்து கொள்வானென்னும் உறுதியோடு அமைதல்.
ஓ, வாழி, ஏ: அசை நிலைகள்.
இதனால் தலைவின் மெலிவையும் அவளது அன்பின் உறுதியையும் தோழி தலைவனுக்கு அறிவித்து விரைவில் மணம் புரிந்துகொள்ள வேண்டியதன் இன்றியமை யாமையைப் புலப்படுத்தினாளாயிற்று.
மலையுச்சியிலே கலையால் விரும்பப்பட்ட பழத்தை அதன் கைப்படாதபடி அருவியானது பலரும் அறியத்தான் பயன்படும் துறையின் கண் சேர்த்து அப்பழத்தையும் பயன்பட வைத்ததுபோல, பிறரால் வரைந்து கோடற்கு உரிய நிலையிலுள்ள தலைவியை அவர் பெறாமற் செய்து தான் மணந்து தான் பிறர்க்குதவி செய்து வாழும் தனது இல்லத்தின்கண் அவளையும் விருந்தோம்பல் முதலிய அறம்புரியச் செய்வித்தற்குரியனென்பது குறிப்பு.
(மேற்கோளாட்சி) மு. ‘கேண்மை தோளை மெலிவித்ததாயினும் எனக்கு அமைதியைத் தந்தது; யான் ஆற்றவும், தான் மெலிதல் பொருந்தாதது எத்தன்மைத்தெனத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க; கலைதீண்ட வழுக்கி வீழ்ந்த பழத்தை அருவி பின்னும் பயன்படுத்தும் நாடன் என்ற தனானே அலரால் நம் சுற்றத்திற் பிரிந்தேமாயினும் அவன் நம்மை வரைந்து கொண்டு இல்லறம் செய்வித்துப் பயன்படுத்துவனென்பதாம்’ (தொல். பொருள். 9, ந.)
(கு-பு.) இதனால் நச்சினார்க்கினியர் இச்செய்யுளைத் தலைவி கூற்றாகக் கொண்டாரென்று தெரிகிறது; அது சிறப்புடையது.
ஒப்புமைப் பகுதி 2. கறிவளர் அடுக்கம்: குறுந். 288:1, நற்.151:7. கலி. 52:17
4. மழைவீழ்தல்: பெரும்பாண். 363; அகநா.182:9-10, 323:13, 64:1-2.
கலைதொட்ட பலவுக்கனி: குறுந்.342:1, 373:4-6.
4-5. அருவி பலாப்பழத்தைக் கொணர்தல்: “ஆசினி முதுசுளை கலாவ.... இழுமென விழிதரு மருவி” (முருகு.301-16); “அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்” (மலைபடு. 174)
2-5. இரவில் மழைபெய்தலால் அருவி உண்டாதல்: குறுந். 42:1- 3, ஒப்பு.
7. தோள் மெலிதல்: குறுந். 87:5, ஒப்பு.
6-7. தலைவன் கேண்மை மெலிவித்தும் சால்புடையதாதல்: குறுந். 264:4-5; நற். 136:7-9.
(90)