ஒளவையார். (பி-ம்) 1.’அரிப்பவர்ப் பரம்பின்’ 2.’ரிலைஞ்சி’
(ப-ரை.) நெஞ்சே, அரில் - ஒன்றோடொன்று பிணங்கு தலையுடைய, பவர் பிரம்பின் - பிரப்பங்கொடியின், வரி புற விளைகனி - புறத்தே வரிகளையுடைய விளைந்த பழத்தை, குண்டு நீர் இலஞ்சி கெண்டை - ஆழமாகிய நீரையுடைய குளத்திலுள்ள கெண்டைமீன், கதூஉம் - கவ்வுதற் கிடமாகிய, தண் துறை ஊரன் - தண்ணிய நீர்த் துறைகளையுடைய ஊர்த் தலைவனுக்குரிய, பெண்டினை ஆயின் - மனைவியாக நீ இருப்பின், நின் நெஞ்சில் படர் பல ஆகுக - நின் உள்ளத்தில் துன்பம் பலவாக ஆகுக! ஓவாது ஈயும் - காலமும் இடமும் பெறுவார் தகுதியும் நோக்கி யொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும், மாரி வண்கை - மேகம் போன்று கைம்மாறு கருதாத வண்மை யையுடைய கையினையும், கடு பகடு யானை - விரைந்த செலவையுடைய ஆண் யானைகளையும், நெடு தேர் - உயர்ந்த தேர்களையும் உடைய, அஞ்சி - அதியமான் அஞ்சியென்னும் உபகாரியினது, கொன் முனை - அச்சத்தைச் செய்யும் போர்க்களத்தில் உள்ள, இரவு ஊர் போல - இரவையுடைய ஊரிலுள்ளார் போல, நீ துஞ்சும் நாள் - நீ துயிலும் நாட்கள், சில ஆகுக - சிலவே ஆகுக!
(முடிபு) நெஞ்சே, ஊரன் பெண்டினையாயின், நின் நெஞ்சிற்படர் பலவாகுக; நீ துஞ்சும் நாள் சில ஆகுக!
(கருத்து) தலைவன்பால் இரங்கி இப்பொழுது உடம்பட்டாலும் பின்னும் தன் ஒழுக்கத்தினின்றும் அவன் மாறுபடான்.
(வி-ரை.) நெஞ்சே என்னும் விளி முன்னத்தால் வருவிக்கப் பட்டது. அரில் - கொடிப்பிணக்கு (மலைபடு. 379, ந.) நெஞ்சினை உணர்வுடையது போலக் கூறியது இது (தொல். பொருள். 2)
‘தலைவனுக்கு உடம்பட்டு அளவளாவுவையேல் மீண்டும் அவன் பிரிய அதனால் உண்டாகும் துன்பம் பலவாகும்; அதனால் நீ துயில்கின்ற நாட்களோ சிலவாகும்’ என்றாள். பெண்டினையாயினென்றது கற்புக்கடம் நோக்கித் தலைவன் கொடுமையை மறந்து உடம்பட்டு ஒழுகும் தன்மையை யுடையையாயினென்றவாறு. நெஞ்சிற்கு நெஞ்சு கூறுதல் மரபு.
அஞ்சி: அதியமான் நெடுமான் அஞ்சி; இவன் ஏழு வள்ளல்களுள் ஒருவன்; இவனுக்குரியது தகடூர்.
“யானையுடைய படை” (இனியது. 5) என்று படைப்பெருமைக்கு யானையைக் கூறுபவாதலின், அதனை முன்னர்க் கூறினாள். கொன்: அச்சப்பொருளைத் தரும் இடைச்சொல்; கொல் முனை - பகைவர்களைக் கொல்லுகின்ற போர்முனை யெனலுமாம்.
போர்க்களமுள்ள ஊரினர் அச்சத்தால் இரவில் தூங்காராதலின் அவரை உவமை கூறினாள்.
பிரம்பினிடத்தே காய்த்துப் பழுத்து முதிர்ந்த கனியை எளிதிற் கெண்டை பெறும் ஊரனென்றது, தன்னுடைய சிறப்பால் அன்பும் செல்வமும் முதிர்ந்த தலைவனைப் பரத்தையர் எளிதிற் கவர்ந்து கொள்வரென்னும் குறிப்பினது.
ஏகாரங்கள் அசைநிலை: இரண்டாவது கருத்து: தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து வாயில் வேண்டியவழித் தலைமகள் அவனை எதிர்கொள்ளும் குறிப்பினளாதலை அறிந்த தோழி, “அவன் இத்துணைக் கொடுமையுடையவனாக இருந்தும் அதனை மறந்து நின் கற்பொழுக்கத்துக்கியைய ஒழுகுவாயாயின், மீண்டும் அவன் கொடுமைக்கு ஆளாகித் துன்புறுவாய்” என்று கூறியது. இந்தக் கருத்து முன்னையதினும் சிறப்புடையதாகத் தோற்றுகின்றது. வேறுபட்ட - ஊடலினின்றும் வேறுபட்ட; “காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற், காணேன் றவறல் லவை” (குறள்,1286.)
(மேற்கோளாட்சி) 7. கொன்னென்னும் இடைச்சொல் முனையை விசேடித்து நின்றது (தொல். எச்ச. 60, ந.)
7-8. கொன்னென்னும் இடைச்சொல் அச்சப் பொருளில் வந்தது (தொல். இடை. 6, இளம், சே, தெய்வச், கல், ந; இ.வி.265.)
மு. தான் மனையாளை ஒத்தலால் தன்போல்வார் தலைவனுக்கு மிகையெனக் குறித்த கோளின்கண் காமக்கிழத்தி கூறியது (தொல். கற்பு. 10, இளம்.); அகப்பாட்டினுள் பாட்டுடைத் தலைவன் பெயரும் (அஞ்சி யென்பதும்), கிளவித் தலைவன் பெயரும் (ஊரன் என்பதும்) வந்தன (நம்பி. 249.)
ஒப்புமைப் பகுதி 1. அரிற்பவர்ப் பிரம்பு: குறுந்.364:1; அகநா.6:19.
2. கதூஉம்: குறுந். 8:2, ஒப்பு.
1-2. பிரம்பும் கெண்டையும்: பெரும்பாண்.287-8; அகநா.156:6.
3. ஊரன்பெண்டு: “நின், பெண்டெனப் பிறர் கூறும்” (கலி. 77: 10-11)
5. மாரி வண்கை: “பெயன்மழைத் தடக்கை” (சிறுபாண். 125); “வான வண்கை” (மதுரைக்.442); “வான நாண வரையாது சென்றோர்க், கானா தீயுங் கவிகை வண்மை” (புறநா. 54:6-7); “மழையொன்று வண்டடக்கை” (தொல். உவம. 11, பேர். மேற்.); “எழிலிவான மெள்ளினன் றரூஉங், கவிகை வண்கை”, “மழைவிழை தடக்கை” (தொல். உவம. 14, பேர். மேற்.); “மழைதழீஇய கையாய்” (சீவக. 2779 )
6. நெடுந்தேரஞ்சி: “கடும்பரிப் புரவி நெடுந்தே ரஞ்சி” (அகநா. 352:12)
7-8. கொன்முனை இரவூர் துஞ்சாமை: “பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே” (குறுந். 292:8); “துஞ்சாக் கண்ண வடபுலத்தரசே” (புறநா. 31:17); “மறங்கால்வே லண்ணல் வரும்வருமென்றேங்கி, உறங்கா வடவேந்த ரூர்” (சிலாசாஸனப் பாடல்)
(91)
1. | கழறியதென்பது சிறப்புடையது. |