(பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனுக்குத் தூதாக வந்து, “நீ சினவற்க; அவர் அன்புடையார்” என்ற தோழிக்கு, “அவர் நம்மால் உபசரித்து வழிபடற்குரியவரே யன்றி அளவளாவி மகிழ்தற்குரியரல்லர்” என்று தலைவி கூறியது.)
 93.    
நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்  
    
இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக் 
    
கன்னையு மத்தனு மல்லரோ தோழி  
    
புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே. 

என்பது வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது.

அள்ளூர் நன்முல்லையார்.

    (பி-ம்) 1. ‘தொலைந்து’ 3.’மல்லரோ’, ‘புலவி’

    (ப-ரை.) தோழி-----, நல் நலம் தொலைய - நல்ல பெண்மை நலம் கெடவும், நலம் மிக சாஅய் - மேனியழகு மிக மெலியவும், இன் உயிர் கழியினும் - எல்லாவற்றினும் இனிய உயிர் நீங்கினாலும், உரையல் - அவர்பாற் பரிவு கூர்ந்த சொற்களைச் சொல்லற்க; அவர் - தலைவர்; நமக்கு-----, அன்னையும் அத்தனும் அல்லரோ - தாயும் தந்தையும் அல்லரோ? அன்பிலங்கடை - தலைவன் தலைவி யர்பாலுள்ள அன்பு இல்லாவிடத்து; புலவி எவன் - ஊடல் உண்டாவது எதன்பொருட்டு?

    (முடிபு) தோழி, உரையல்; அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ? அன்பிலங்கடை, புலவி எவன்?

    (கருத்து) தலைவன் என்பால் மனைவியென்னும் கருத்துடன் அன்பு புரிந்தானல்லன்.

    (வி-ரை.) நலம் இரண்டனுள் முன்னது பெண்மை நலம்; இரண்டாவது அழகு.

     “நீ அவர் மாட்டுப் புலத்தல் தகாது; அவரை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்” என்று தோழி கூறினாளாக, “என்னுடைய நலமும் உயிரும் தொலையுமேனும் பொறுத்துக்கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளல் என் கடன்; அவர் அன்னையையும் அத்தனையும் போல உபசரிக்கத்தக்கவர்; ஆயினும் தலைவராகக் கருதி அளவளாவுவதற்குரிய அன்பு அவர்பால் இல்லை; அவ்வன்பில்லார் மாட்டுப் புலவியும் அது தீர்தலும் என்ன பயனை உடையன? நான் புலந்தே னல்லன்” என்று அயன்மை தோன்றத் தலைவி கூறினாள். இவ்வயன்மைக் குறிப்பினால் வாயில் மறுத்தாளாயிற்று.

     அன்னையென்றாள் பிரிதற்கரிய தொடர்புடைமைபற்றி; அத்தனென்றாள் அவன் ஆணைக்கடங்கி ஒழுகுதல்பற்றி. “ஊடுதல் காமத்துக்கின்ப மதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்” (குறள, 1330, என்பன வாகலின் காமமுள்ளார்க்கே புலவியும் அதனாற் பெறப்படும் பயனும் உளவாகும்; அன்னையும் அத்தனும் போன்ற அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பெற்றோர்க்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பேயாதலின் காமமில்லை; ஆதலின் புலவி உண்டாவதற்கு ஏதுமில்லையென்றபடி. அன்பிலங்கடை புலவியாற் பயனில்லை யென்றமையின், அன்புள்ள விடத்துப் புலவி பயன்பெறுமென்பதாயிற்று.

     எவனோ: ஓகாரம் அசைநிலை: கடையே: ஏ, அசைநிலை. அஃது: பகுதிப்பொருள் விகுதி.

    (மேற்கோளாட்சி) 2-4. செறலின்கட் பால் மயங்கியது (நன். 378, மயிலை.)

    மு. தலைவனைத் தலைவி காய்தற்கண் வந்தது (தொல். கற்பு. 6. இளம், ந.); 1. தோழி, தலைவனை அன்பிலை கொடியையெனக் கேட்ட

தலைவன் முனிந்த உள்ளத்தினாங் கொல்லோவென ஐயுற்று அவனது குறிப்பை அறிதல் வேண்டியும், தனது நெஞ்சில் நிறைந்து நின்ற ஊடல் கையிகந்து துனியாகிய வழி இஃது அவற்கு எவனாங் கொல்லென அஞ்சிய வழியும் தலைவி தலைவனோடு அயன்மையுடைய சொல்லைத் தோற்றுவிக்கவும் பெறும்; ‘நன்னலம்... கடையே’ என்பதனுள், அவரை அன்பிலை கொடியை யென்னாதி, அன்பில்வழி நின்புலவி அவரை என்செய்யும்? அவர் நமக்கு இன்றியமையாத எமரல்லரோ வென இருவகையானும் அயன்மை கூறியவாறு காண்க’ (தொல். கற்பு. 18, ந.)

 (ஒப்பு)
“நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியும்  
  
 காதல ரில்லா வழி” 
  
        “நீரு நிழல தினிதே புலவியும் 
  
         வீழுநர் கண்ணே யினிது”                         (குறள். 1308-9)  
(93)
 1.  
இக்கருத்து சிறப்புடையது.