கந்தக் கண்ணன் (பி-ம். கதக் கண்ணன்) (பி-ம்) 4.’கேட்டிற்’; 6. ‘மலைத்தக்க’.
(ப-ரை.) தோழி-----, பெரு தண் மாரி - பெரிய தண்மை யையுடைய மழைக்காலத்துக்குரிய, பேதை பித்திகத்து அரும்பு - அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள், முன்னும் மிக சிவந்தன - தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகச் சிவந்தன; யானே மருள்வேன் - அவற்றைக் கண்டு இது கார்ப் பருவமென்று நானா மயங்குவேன்? மயங்கேன்; ஆயினும், பிரிந்திசினோர் - என்னைப் பிரிந்திருப்பவராகிய, இன்னும் தமியர் - இன்னும் என்பால்வந்து சேராமல் தனித்து இருக்கும் தலைவர், அருவி மாமலை தத்த - அருவியானது பெரிய மலையிலே தத்தி வீழும்படி, கருவி மா மழை - தொகுதியாகிய பெரிய மேகத்தினது, சிலைதரும் குரல் - முழங்கும் ஓசையை, பானாள் - நடு இரவில், கேட்பின் - கேட்டால், பெயர்த்தும் என் ஆகுவர் - தாம் முன்னரே பிரிவினால் வருந்துவதன்றி மீட்டும் எந்த நிலையை உடையவராவரோ!
(முடிபு) தோழி, பித்திகத் தரும்பு மிகச் சிவந்தன; யானே மருள்வேன்? பிரிந்திசினோர், இன்னுந் தமியர் மழைக்குரலைக் கேட்பின் என்னாகுவர்!
(கருத்து) தலைவர் இம்மேக முழக்கத்தைக் கேட்டு வினைக்குறை முடியாமல் மீள்வாரோ?
(வி-ரை.) பெருந்தண் மாரிக்காலத்தில் சிவக்கவேண் டியவை மேகம் முழங்கிய மாத்திரத்தில் சிவந்தனவாதலின் இவை பேதைமையுடையன வென்னும் நினைவால், ‘பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத் தரும்பு’ என்றாள். பித்திகம் - பிச்சி; இது மழைக்காலத்து அரும்பி மலருமென்பது, “மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை” (குறுந். 168:1, 222:5) என்பத னால் விளங்கும். பருவத்தைத் தெரிவிக்கும் பொருள்களின்மேல் அறியா மையை ஏற்றிக் கூறும் மரபு இந்நூல் 66 ஆம் செய்யுளின் விசேடவுரையால் விளங்கும். பானாள் = பால் + நாள்; பால் - பகுதி; என்றது நடுவைக் குறித்தது; பானாள் - நடுயாமம் (கலி. 30:9, ந.); நடு நாளென வருதலையுங் காண்க (குறுந். 69:5) யானே: ஏகாரம் எதிர்மறைப்பொருளது.
தலைவன் தன்னை நினைந்து வினையை முடிவு போக்காது மீள்வனோ வென்று தலைவி கூறுதல் மரபாதலை, “புணர்ந்துடன் போகிய” (தொல். கற்பு, 7, ந.)என்பதன் உரையினால் உணரலாகும்.
பிரிந்திசினோர் - தலைவரைப் பிரிந்தோராகிய பிறமகளிரென்றலும் ஒன்று; பிறர் ஆற்றற்கரியரென்றெண்ணி வருந்துவேனாயினே னென்றதாகக் கொள்க.
இசின் படர்க்கைக்கண் வந்தது. என்னாகுவர் கொலென்றது மீண்டு வருவாரோ வென்னும் நினைவிற்று. மழை பெய்தலினால் மலையில் அருவி உண்டாதலின், ‘அருவிமாமலைத் தத்த’ என்றாள்; இந்நூல் 42- ஆம் செய்யுளைப் பார்க்க. சிலைதரும்: ஒரு சொல். யானே என்பதி லுள்ளதையன்றி ஏனைய ஏகாரங்களும், கொல்லும் அசைநிலைகள்.
யானே மருள்வேனென்றமையின் ஆற்றுவலென்பது படவும், என்னாகுவர்கொல் பிரிந்திசினோரே யென்றமையின் தான் கவன்றமைக்குக் காரணந் தோன்றவும் தலைவி கூறினாளாயிற்று.
ஒப்புமைப் பகுதி 1. மாரிப் பித்திகம்: குறுந். 168:1; நற். 314:3; அகநா. 295:19.
1-2. பித்திகத்தின் அரும்பு சிவந்திருத்தல்: (குறுந். 222:5-6); “செவ்வரி யரும்பின் பைங்காற் பித்திகம்” (நெடுநல். 40, பா-ம்.)
பித்திகத்தின் அரும்பு மாரிக்காலத்துக்கு உரித்தாதலும் சிவந் திருத்தலும்: “மலிபெயற் கலித்த மாரிப் பித்திகத்துக், கொயலரு நிலைய பெயலேர் மணமுகைச், செவ்வெரிந்” (அகநா. 42: 1-3.)
3. பானாள்: குறுந்.142:3, 145:3, 301:4, 311:4, 355:4, 375:5, கலி. 30:9.
6. அருவி தத்தல்: “தத்துற்று... இழுமென விழிதரு மருவி” (முருகு. 305-16.) தத்த - தாவ; தஞ்சை.26.
கருவி மாமழை: குறுந். 42:2, ஒப்பு; நைடதம், நாட்டு, 1.
மழைக் குரல்: “மழைமுழங்கு கடுங்குரல்” (குறுந். 396:6)
(94)