(தனது வேறுபாடு கண்டு வினாவிய பாங்கனுக்கு, “ஒரு குறமகள்பாற் கொண்ட காமத்தால் என்கண் இஃது உண்டாயிற்று” என்று தலைவன் கூறியது.)
 95.    
மால்வரை யிழிதருந் தூவெள்ளருவி  
    
கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற் 
    
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் 
    
நீரோ ரன்ன சாயல் 
5
தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே. 

என்பது தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

கபிலர்.

    (பி-ம்) 2. ‘கண்முகைத்,; 3,’குறமகள்’.

    (ப-ரை.) தோழ-----, மால் வரை இழிதரும் -பெரிய மலையினிடத்து வீழும், அருவி-----, கல் முகை ததும்பும் - பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கும், பல் மலர் சாரல் - பலமலரையுடைய சாரலில் உள்ள, சிறு குடி குறவன் - சிற்றூரிலுள்ள குறவனுடைய, பெரு தோள் குறுமகள் - பெரிய தோளையுடைய சிறிய மகளினது, நீர் ஓரன்ன சாயல் - நீரைப் போன்ற மென்மை, தீ ஓரன்ன என் உரன் அவித்தன்று - தீயை ஒத்த என் வலியைக் கெடச் செய்தது.

    (முடிபு) குறுமகளது சாயல் என் உரனை அவித்தன்று.

    (கருத்து) நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்.

    (வி-ரை.) தோழவென்னும் விளி முன்னத்தாற் பெறப்பட்டது. கல்முகை - மலைமுழைஞ்சுமாம். ததும்புதல் - ஒலித்தல். பன்மலர்ச் சாரலென்றான், இயற்கைப் புணர்ச்சி பெற்றவிடம் அதுவாதலால். பெருந்தோள்: மகளிருக்குத் தோள் பெருத்தல் அழகு; குறுந். 71, வி-ரை. ஓரன்ன - ஒரு தன்மையையுடைய (தொல். நூன். 2, இளம்.); ஒத்த (கலி. 23:9) தீயை வலிக்கு உவமை கூறும் மரபு, “தீயெழுந் தன்ன திறலினர்” (முருகு. 171) என்பதனாலும் புலப்படும். எதிர்ப்பட்ட பொருளை அழிக்கும் தன்மையதாகலின் தீயை எதிர்ப்படு பகையை அழிக்கும் வலிக்கு உவமை கூறுவர்;

  
“வளித்தலைஇய தீயும்... போல... தெறலும் ... உடையோய்”    (புறநா. 2:4-8)  

என்பதையும் அதன் உரையையும் பார்க்க.

     பகையையழிக்கும் தீயன்ன என் வலியைத் தீயை யழிக்கும் நீரன்ன குறமகளது மென்மை அழித்ததென்றான்;

  
“ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள், 
  
 நண்ணாரு முட்குமென் பீடு”    (குறள். 1088) 

என்பதில் இக்கருத்து விளங்குதல் காண்க.

     பெருந்தோட்குறுமகளென்றது, குறிப்பால் என் உரன் அவிதற்கு அத்தோளும் காரணமாயதென்பதை உணர்த்தியது. குறுமகளென்றான், பெருந்தலைமையையுடைய என் உரனவியச் செய்தாளென்னும் வியப்புத் தோன்ற.

     தலைவன்பாற் சோர்வுகண்ட பாங்கன், “நினக்கு இவ்வாட்டம் எற்றினானாயிற்று?” என்று வினாயினனாக, தலைவன், “குறுமகள் சாயலினாயிற்று” என்றான்.

     ஏகாரம் அசைநிலை.

    (மேற்கோளாட்சி) 4-5. பொருளும் பொருளும் முரணின (தொல். செய். 95, ந. பேர்.); கட்டளையடியும் சீர்வகையடியும் முரணின (தொல். செய். 95, ந.)

    ஒப்புமைப் பகுதி 1-2. அருவி கன்முகையில் ஒலித்தல்: (குறுந். 42:2-3, ஒப்பு.); “கன்முகை யருவி” (புறநா. 147:1, பி-ம்)

    3. குறவன் மகள்: ஐங். 255-60.

     பெருந்தோள் குறுந். 71:3,ஒப்பு.

     குறுமகள்: குறுந். 89:7,ஒப்பு.

     நீரை ஒத்த சாயல்: “புதுநிறை வந்த புனலஞ் சாயல்” (மலைபடு. 61); “வானி நீரினும், தீந்தண் சாயலன்” (பதிற். 86:12-3); “நீரினுஞ் சாய லுடையன்”, “வேனிற் புனலன்ன நுந்தை”, “நீருணிழற்போ னுடங்கிய மென்சாயல்”(கலி. 42:20, 84:38, 94:2); “நீரனு மினிய சாயற், பாரி வேள்” (புறநா. 105:7-8)

(95)