(பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருளீட்டி மீண்டு வந்த காலத்து “நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ?” என்று வினாவிய தோழிக்கு, “நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன்” என்று அவன் கூறியது.)
 99.   
உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி 
    
நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து 
    
மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே 
    
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை 
5
இறைத்துணச் சென்றற் றாஅங் 
    
கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே. 

என்பது பொருள் முற்றிப் புகுந்த தலைமகன், ‘எம்மை நினைத்தும் அறிதிரோ?’ (பி-ம். ‘நினைத்துமறியிரோ’) என்ற தோழிக்குச் சொல்லியது.

    (முற்றி - நிறையப் பெற்று. புகுந்த - மீண்டுவந்த.)

ஒளவையார்.

    (பி-ம்) 1, 2, 3. ‘னல்லனோ’; 2. ‘நினைந்தனென்’, ‘நினைந்து’; 4.’மாத்த’, ‘மராஅத்த’, ‘மராத்தொடுதோய்’, ‘கோடுகொய்’, ‘மலிர்சிறை’, ‘மலிர்சிமை’; 5. ‘இறைத்துணைச்’; 6. ‘கொளலே’.

    (ப-ரை.) நீடிய மரத்த - உயர்ந்த மரத்தினது, கோடு தோய் மலிர்நிறை - கிளையைத் தொட்டுப் பெருகும் மிக்க வெள்ளம், இறைத்து உண சென்று அற்றாங்கு -பிறகு கையால் இறைத்துண்ணும் அளவு சிறுகிச் சென்று அற்றது போல, அனை பெருகாமம் - வெள்ளத்தைப் போன்ற அவ்வளவு பெரிய காம நோய், ஈண்டு கடைக்கொள - இங்கே யான் வருதலால் முடிவடையும்படி யான்----, உள்ளினென் அல்லெனோ - ஆழ்ந்து எண்ணினேனல்லேனோ? உள்ளி - அங்ஙனம் எண்ணி, பெரிது நினைத்தனென் அல்லெனோ - மீட்டும் மீட்டும் மிகநினைவு கூர்ந்தேனல் லேனோ? நினைத்து - அங்ஙனம் நினைவு கூர்ந்து, உலகத்து பண்பு மருண்டனென் அல்லெனோ - என் நினைவு நிறைவேறுதற்கு மாறாக இருக்கும் உலகத்தியல்பை எண்ணி மயங்கினேன் அல்லேனோ?

    (முடிபு) காமம் கடைக்கொள யான் உள்ளினென் அல்லெனோ? நினைத்தனென் அல்லெனோ? மருண்டனென் அல்லெனோ?

    (கருத்து) யான் எப்பொழுதும் உங்களை நினைத்திருந்தேன்.

    (வி-ரை.) உள்ளுதல் - உள்ளத்துள் எண்ணுதல். நினைத்தல் - மீட்டும் மீட்டும் எண்ணுதல். அல்லெனோவெனவரும் மூன்றும் வினா வெதிர் வினாவும் விடைகளாக அமைந்து முறையே உள்ளினென், நினைத்த னென், மருண்டனெனென்னும் பொருளைப் பயந்தன.

    உலகத்துப் பண்பென்றது இல்லறம் நடத்துபவன் அதற்குக் கருவியாம் பொருளுக்குப் பிரிந்தால் அப்பொருள் பெற்றே மீண்டு வரவேண்டு மென்னும் மரபை; “எள்ளனோனாப் பொருடரல் விருப்பொடு, நாணுத் தளை யாக வைகி’ (அகநா. 29:20:21) என்பது இதனைப் புலப் படுத்தும்.

    மரத்தின் கிளையைத் தொட்டுச் சென்ற வெள்ளம் நெடுந்தூரம் வந்து, இறைத்துண்ணும்படி சிறுகிப் பின்பு அற்றது போல, காம வெள்ளமானது மிகப் பெரிதாயிருந்து, நான் இங்கு மீண்டுவரும்போது வரவரக் குறைந்து, தலைவியோடு அளவளாவியவுடன் அறுமென்று உவமையை விரித்துக்கொள்க.

     தோழி, “நீவிர் இவ்வளவுகாலம் பாணித்தீர்; ஆண்டுள்ள போது எம்மை நினைத்திலீர் போலும்!” என்றாட்கு, “நான் எப்பொழுதும் இங்கு மீண்டுவருதலை நினைத்திருந் தேனாயினும் உலக இயல்பை அஞ்சி இத்துணை நாள் நின்றேன்” என்று கூறினான். “இயல்பாகப் பொருள் தேடுதலில் ஊக்கம் பெற்றிருப்பின் இன்னும் நெடுநாள் கழியும்; நும்பாலுள்ள நினைவு என்னை விரைவில் மீளச் செய்தது” என்பது அவன் கூற்றினாற் புலப்பட்டது.

     ஓகாரங்கள் வினா; ஏகாரங்கள் அசைநிலைகள்.

     மேற்கோளாட்சி மு. இளமையும் காமமும் நோக்காது பெயர்ந்தீரென்று கூறி இதற்குக் காரணம் என்னையெனத் தலைவன் வந்துழிக் கேளிர் நிகழ்த்தும் நிகழ்ச்சிக்கண் தலைவற்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு, 5, இளம்.); மீண்டுவந்த தலைவனை இடைச்சுரத்து மறந்தீரோவெனத் தலைவி வினாவிய வழி அவனுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 5, ந.)

    ஒப்புமை பகுதி 1. உள்ளினெனல்லெனோ யானே: நற். 3:7.

    4. மலிர்நிறை: ஐங். 15:1, 42:3, 72:4.

    கோடுதோய் மலிர்நிறை: அகநா. 166:15, 341:4.

    கோடு - பக்கம்; அகநா. 39:21.

    மு. அகநா. 29.

(99)