131-140

131. நெய்தல்
ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப!
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
5
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய,
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ், பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?

மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், ''வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்'' என்றாற்குத் தோழி சொல்லியது.-உலோச்சனார்

132. நெய்தல்
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி
போர் அமை கதவப் புரை தொறும் தூவ,
5
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப்
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை,
''காப்புடை வாயில் போற்று, ஓ'' என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
10
ஒன்று எறி பாணியின் இரட்டும்;
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?

காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

133. குறிஞ்சி
''தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே;
நுதலும் பசலை பாயின்று-திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
5
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு'' என்று,
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்-
காமுறு தோழி!-காதல்அம் கிளவி,
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த
10
தோய் மடற் சில் நீர் போல,
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.

வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது.-நற்றமனார்

134. குறிஞ்சி
''இனிதின் இனிது தலைப்படும்'' என்பது
இதுகொல்?-வாழி, தோழி!-காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், ''கொடிச்சி!
5
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!'' என,
ஏயள்மன் யாயும்; நுந்தை, ''வாழியர்,
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்!
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு'' என,
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது
10
ஒல்லேன் போல உரையாடுவலே!

''இற்செறிப்பார்'' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.

135. நெய்தல்
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்,
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
5
இனிது மன்றம்ம தானே-பனி படு
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய,
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்,
வால் உளைப் பொலிந்த, புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.

''வரைவு நீட்டிப்ப அலர்ஆம்'' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது.-கதப்பிள்ளையார்

136. குறிஞ்சி
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என்னை-வாழிய, பலவே!-பன்னிய
5
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து,
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே.

சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது.-நற்றங் கொற்றனார்

137. பாலை
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்,
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்தினை, வாழிய-நெஞ்சே!-செவ் வரை
5
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை,
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்,
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்'' ஆகும்
குன்ற வைப்பின் கானம்
10
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே!

தலைவன் செலவு அழுங்கியது.-பெருங்கண்ணனார்

138. நெய்தல்
உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை,
கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும்
5
தண்ணம் துறைவன், முன் நாள், நம்மொடு
பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ,
கண் அறிவுடைமை அல்லது, நுண் வினை
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
10
முழங்கு திரை இன் சீர் தூங்கும்
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.

''அலர் ஆயிற்று'' என ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-அம்மூவனார்

139. முல்லை
உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ,
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை, உரைஇயரோ!-பெருங் கலி எழிலி!
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
5
எழீஇயன்ன உறையினை! முழவின்
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்-
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்,
விரவு மலர் உதிர வீசி-
10
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே!

தலைவன் வினைமுற்றி வந்து பள்ளியிடத்தானாக, பெய்த மழையை வாழ்த்தியது.-பெருங்கௌசிகனார்

140. குறிஞ்சி
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி,
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
5
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து,
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே!-என்னதூஉம்
10
அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.-பூதங்கண்ணனார்