231-240

231. நெய்தல்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல,
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
5
துறை புலம்பு உடைத்தே-தோழி!-பண்டும்,
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.

சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது.-இளநாகனார்

232. குறிஞ்சி
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முணைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
5
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும்
மா மலை நாட!-காமம் நல்கென
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.

பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்

233. குறிஞ்சி
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
5
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று
கூறுவென் வாழி-தோழி!-முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே.

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.-அஞ்சில் ஆந்தையார்

234. குறிஞ்சி
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
5
அஃது ஆன்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.

செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.

235. நெய்தல்
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்
5
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும்,
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,
கண்டனம் வருகம் சென்மோ-தோழி!-
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படு மணிக் கலி மாக் கடைஇ,
10
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே.

வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.

236. குறிஞ்சி
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே-
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், ''பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது'' என,
5
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை, இனி-வாழி, தோழி!-புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
10
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே.

தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.-நம்பி குட்டுவன்

237. பாலை
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,
பனி மலி கண்ணும் பண்டு போலா;
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
5
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?-மடந்தை!-
உவக்காண் தோன்றுவ, ஓங்கி-வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப, ஓது அரும்
10
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே!

தோழி உரை மாறுபட்டது.-காரிக்கண்ணனார்

238. முல்லை
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
5
பருவம் செய்த கருவி மா மழை!
''அவர் நிலை அறியுமோ, ஈங்கு'' என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
10
கனியா நெஞ்சத்தானும்,
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.

தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.-கந்தரத்தனார்

239. நெய்தல்
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
5
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்,
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; ''முன்கை
10
வார் கோல் எல் வளை உடைய வாங்கி,
முயங்கு'' எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?

தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்

240. பாலை
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே-
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
5
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும்,
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும்
10
கானம் திண்ணிய மலை போன்றிசினே.

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.-நப்பாலத்தனார்