151 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | மிதிப்ப, நக்க கண் போல் நெய்தல் | | கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு | 5 | நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே. | |
| வாயில் வேண்டிய தோழிக்கு தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது. 1 | | |
|
|
152 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | கையறுபு இரற்று கானல்அம் புலம்பந் | | துறைவன் வரையும் என்ப; | 5 | அறவன் போலும்; அருளுமார் அதுவே. | |
| தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையான்; ஆதலால் நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி, வாயில் நேர்விக்கும் தோழிக்கு அவள் சொல்லியது. 2 | | |
|
|
153 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | உளர, ஒழிந்த தூவி குவவு மணல் | | போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை | 5 | நல்நெடுங் கூந்தல் நாடுமோ மற்றே? | |
| பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றால் வாயிலாய்ப் புகுந்தாற்குத் தோழி கூறியது. 3 | | |
|
|
154 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | கானல் சேக்கும் துறைவனோடு | | யான் எவன் செய்கோ? பொய்க்கும் இவ் ஊரே? | |
| தோழி வாயில் வேண்டி நெருங்கியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4 | | |
|
|
155 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | பதைப்ப, ததைந்த நெய்தல் கழிய | | ஓதமொடு பெயரும் துறைவற்குப் | 5 | பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென், யானே! | |
| பல வழியானும் வாயில் நேராளாகிய தலைமகள், 'மகப் பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. 5 | | |
|
|
156 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | பதைப்ப, ஒழிந்த செம் மறுத் தூவி | | தெண் கழிப் பரக்கும் துறைவன் | 5 | எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே! | |
| பரத்தையிடத்து வாயில் விட்டு ஒழுகுகின்ற தலைமகனது வாயிலாய் வந்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது. 6 | | |
|
|
157 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | காலை இருந்து மாலைச் சேக்கும் | | தெண் கடற் சேர்ப்பனொடு வாரான், | 5 | தான் வந்தனன், எம் காதலோனே! | |
| பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டி ஒழுகுகின்ற தலைமகன், 'புதல்வன் வாயிலாக வரும்' எனக் கேட்டு, அஞ்சிய தலைமகள் புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது. 7 | | |
|
|
158 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | கானல்அம் பெருந் துறைத் துணையொடு கொட்கும் | | தண்ணம் துறைவ! கண்டிகும், | 5 | அம் மா மேனி எம் தோழியது துயரே. | |
| பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய், அஃது இடமாக வந்தமை அறிந்த தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. 8 | | |
|
|
159 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | பசி தின, அல்கும் பனி நீர்ச் சேர்ப்ப! | | நின் ஒன்று இரக்குவென் அல்லேன்; | 5 | தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே? | |
| மறாமற்பொருட்டு உண்டிக் காலத்து வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 9 | | |
|
|
160 | | வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென, | | காணிய சென்ற மட நடை நாரை | | நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ! | | பண்டையின் மிகப் பெரிது இனைஇ, | 5 | முயங்குமதி, பெரும! மயங்கினள் பெரிதே! | |
| புலந்த காதல் பரத்தை புலவி தீராது தலைமகன் வாயில் வேண்டி வந்தான் என்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது. 10 | | |
|
|