தொடக்கம்   முகப்பு
191 - 200 வளைப்பத்து
191
கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை,
கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல்,
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள்.
வரையர மகளிரின் அரியள் என்
5
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.
'நின்னால் காணப்பட்டவள் எவ்விடத்து எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது. 1
192
கோடு புலம் கொட்ப, கடல் எழுந்து முழங்க,
பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன,
வீங்கின மாதோ தோழி! என் வளையே!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குத் சொல்லியது. 2
193
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்
துறை கெழு கொண்க! நீ தந்த
அறைபுனல் வால் வளை நல்லவோ தாமே?
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் தலைமகட்கு வளைகொண்டு வந்து கொடுத்துழி, 'பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலன் உடையவோ இவை?' எனத் தலைமகள் மெலிவு சொல்லித் தோழி வரைவுகடாயது. 3
194
கடற் கோடு அறுத்த, அரம் போழ் அவ் வளை
ஒண் தொடி மடவரல் கண்டிகும்; கொண்க!
நல் நுதல் இன்று மால் செய்தென,
கொன் ஒன்று கடுத்தனள், அன்னையது நிலையே.
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு மனைக்கண் நிகழ்ந்தது கூறி, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. 4
195
வளை படு முத்தம் பரதவர் பகரும்
கடல் கெழு கொண்கன் காதல் மட மகள்
கெடல் அருந் துயரம் நல்கி,
படல் இன் பாயல் வௌவியோளே.
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் தனித்து உறைய ஆற்றானாய்ச் சொல்லியது. 5
196
கோடு ஈர் எல் வளை, கொழும் பல் கூந்தல்,
ஆய் தொடி, மடவரல் வேண்டுதிஆயின்
தெண் கழிச் சேயிறாப் படூஉம்
தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ.
குறை மறுக்கப்பட்ட தலைமகன் பின்னும் குறைவேண்டியவழித் தோழி சொல்லியது. 6
197
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி,
முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே
புலம்பு கொள் மாலை மறைய
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது. 7
198
வளை அணி முன்கை, வால் எயிற்று அமர் நகை,
இளையர் ஆடும் தளை அவிழ் கானல்,
குறுந் துறை வினவி நின்ற
நெடுந் தோள் அண்ணல் கண்டிகும், யாமே.
பரத்தையர் மனைக்கண் பல் நாள் தங்கி, பின்பு ஆற்றாமையே வாயிலாக வந்த தலைமகனை எதிர்ப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியது. 8
199
கானல்அம் பெருந் துறைக் கலிதிரை திளைக்கும்
வான் உயர் நெடு மணல் ஏறி, ஆனாது,
காண்கம் வம்மோ தோழி!
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே!
தலைமகன் ஒருவழித் தணந்துழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியது. 9
200
இலங்கு வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவின,
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே;
விலங்கு அரி நெடுங் கண் ஞெகிழ்மதி;
நலம் கவர் பசலையை நகுகம் நாமே!
உடன்போக்குத் துணிந்தவழி, அதற்கு இரவின்கண் தலைமகன் வந்தது அறிந்த தோழி தலைமகளைப் பாயல் உணர்த்திச் சொல்லியது. 10
மேல்