தொடக்கம்   முகப்பு
21 - 30 களவன்பத்து
21
முள்ளி நீடிய முது நீர் அடைகரைப்
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்
தண் துறை ஊரன் தெளிப்பவும்,
உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!'
'புறத்தொழுக்கம் எனக்கு இனி இல்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி சொல்லியது. 1
22
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து, 'இனி
நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!'
களவினில் புணர்ந்து. பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்றதலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகியதலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2
23
முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டி,
பூக் குற்று, எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித்
தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்? அன்னாய்!
இதுவும் அது. 3
24
தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்
பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
5
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்!
'பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான்' என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்ப, தலைமகட்குச் சொல்லியது. 4
25
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங் காய்
வயலைச் செங் கொடி களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்!
இதுவும் அது. 5
26
கரந்தைஅம் செறுவில் துணை துறந்து, களவன்
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்
எம்மும், பிறரும், அறியான்;
இன்னன் ஆவது எவன்கொல்? அன்னாய்!
தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிற்கு அவன்பொருந்தாநின்றான்' என்றவழி, தலைமகட்குத் தோழி, 'அவன்பாடு அஃது இல்லை' என்பதுபடச் சொல்லியது. 6
27
செந்நெல்அம் செறுவில் கதிர் கொண்டு, களவன்
தண்ணக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழச் சாஅய்,
அல்லல் உழப்பது எவன்கொல்? அன்னாய்!
தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று' எனக் கருதி வருந்தும் தலைமகட்குத் தோழி சொல்லியது7.
28
உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின்,
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழச் சாஅய்,
மென் தோள் பசப்பது எவன்கொல்? அன்னாய்!
இற்செறிவித்த இடத்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று, தமர் வெறி எடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8
29
மாரி கடி கொள, காவலர் கடுக,
வித்திய வெண் முளை களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு உற மரீஇ,
திதலை அல்குல் நின் மகள்
5
பசலை கொள்வது எவன்கொல்? அன்னாய்!
வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தோடு நின்றது. 9
30
வேப்பு நனை அன்ன நெடுங் கண் களவன்
தண்ணக மண் அளை நிறைய, நெல்லின்
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள்
பெருங் கவின் இழப்பது எவன்கொல்? அன்னாய்!
இதுவும் அது. 10
மேல்