தொடக்கம்   முகப்பு
221 - 230 அம்ம வாழிப்பத்து
221
அம்ம வாழி, தோழி! காதலர்
பாவை அன்ன என் ஆய்கவின் தொலைய,
நல் மா மேனி பசப்ப,
செல்வல்' என்ப தம் மலை கெழு நாட்டே.
'ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல்' என்று தலைமகன் கூறக்கேட்ட தலைமகள் அவன் சிறைப்புறத்தானாய்க் கேட்ப, தோழிக்குச்சொல்லியது. 1
 
222
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன்
இன்னினி வாராமாறுகொல்
சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே?
குறி இரண்டன்கண்ணும் வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வந்து, சிறைப்புறத்து நின்றுழி, 'நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2
 
223
அம்ம வாழி, தோழி! நம் மலை
வரை ஆம் இழிய, கோடல் நீட,
காதலர்ப் பிரிந்தோர் கையற, நலியும்
தண் பனி வடந்தை அற்சிரம்
5
முந்து வந்தனர் நம் காதலோரே.
வரைவிடை வைத்துப்பிரிந்த தலைமகன் குறித்த பருவத்திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது. 3
 
224
அம்ம வாழி, தோழி! நம் மலை
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில்
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்னால், அவர்க்கு; இனி,
5
அரிய ஆகுதல் மருண்டனென், யானே,
இற்செறிப்பு உணர்ந்த தலைமகள் ஆற்றாளாய், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 4
 
225
அம்ம வாழி, தோழி! பைஞ் சுனைப்
பாசடை நிவந்த பனி மலர்க் குவளை
உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல்
ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல்
5
ஓரார்கொல் நம் காதலோரே?
மெலிவு கூறி வரைவு கடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 5
 
226
அம்ம வாழி,தோழி!நம் மலை
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
5
அன்பிலாளன் வந்தனன், இனியே.
வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
227
அம்ம வாழி! தோழி! நாளும்,
நல் நுதல் பசப்பவும், நறுந் தோள் ஞெகிழவும்,
'ஆற்றலம் யாம்' என மதிப்பக் கூறி,
நப் பிரிந்து உறைந்தோர் மன்ற; நீ
5
விட்டனையோ அவர் உற்ற சூளே?
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 7
 
228
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறையுறாஅன் பெயரின்,
என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே?
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8
229
அம்ம வாழி, தோழி! நாம் அழப்
பல் நாள் பிரிந்த அறனிலாளன்
வந்தனனோ, மற்று இரவில்?
பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டு, தலைமகட்கு எய்திய கவினைத் தோழி, தான் அறியாதாள் போன்று, அவளை வினாவியது. 9
 
230
அம்ம வாழி, தோழி! நம்மொடு
சிறு தினைக் காவலன் ஆகி, பெரிதும் நின்
மென் தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும்,
பொன் போல் விறல் கவின் தொலைத்த
5
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே.
தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி, மறுப்பர்கொல்லோ? என்று அச்சம் உறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. 10
 
மேல்