தொடக்கம்   முகப்பு
231 - 240 தெய்யோப்பத்து
231
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப!
இரும் பல் கூந்தல் திருந்துஇழை அரிவை
திதலை மாமை தேயப்
பசலை பாயப் பிரிவு? தெய்யோ!
ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 1
 
232
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க
ஏதிலாட்டியை நீ பிரிந்ததற்கே,
அழல் அவிர் மணிப்பூண் நனையப்
பெயல்ஆனா, என் கண்ணே தெய்யோ!
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் 'நான் பிரிந்த நாட்கண் நீர் என் செய்தீர்?' எனக் கேட்க, தோழி அவற்குச் சொல்லியது. 2
 
233
வருவைஅல்லை; வாடை நனி கொடிதே
அரு வரை மருங்கின் ஆய்மணி வரன்றி,
ஒல்லென இழிதரும் அருவி நின்
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ!
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 3
 
234
'மின் அவிர் வயங்குஇழை ஞெகிழச் சாஅய்,
நன்னுதல் பசத்தல் யாவது?' துன்னிக்
கனவில் காணும் இவளே
நனவில் காணாள், நின் மார்பே தெய்யோ!'
இடைவிடாது வந்தொழுகாநின்றே களவு நீடாமல் வரைதற்கு முயல்கின்ற தலைமகன் தலைமகள் வேறுபாடு கண்டு, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவியவழி, 'நின்னைக் கனவில் கண்டு, விழித்துக் காணாளாய் வந்தது' எனத் தோழி சொல்லி வரைவு முடுக்
 
235
கையற வீழ்ந்த மை இல் வானமொடு
அரிது காதலர்ப் பொழுதே; அதனால்,
தெரிஇழை தெளிர்ப்ப முயங்கி,
பிரியலம் என்கமோ? எழுகமோ? தெய்யோ!
உடன்போக்கு நேர்வித்த பின்பு தலைமகன் உடன்கொண்டு போவான் இடை யாமத்து வந்துழி, தலைமகட்குத் தோழி சொல்லியது. 5
 
236
அன்னையும் அறிந்தனள்; அலரும் ஆயின்று;
நல் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும்,
இன்னா வாடையும் மலையும்;
நும் ஊர்ச் செல்கம்; எழுகமோ? தெய்யோ!
களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும் உணர்த்தி, தோழி உடன்போக்கு நயந்தாள் போன்று, வரைவு கடாயது. 6
 
237
காமம் கடவ, உள்ளம் இனைப்ப,
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்,
ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு
யாங்கு எனப்படுவது, நும் ஊர்? தெய்யோ!
அல்லகுறிப்பட்டு நீங்கிய தலைமகனை வந்திலனாகக் கொண்டு, அவன் பின்பு வந்துழி, அவற்குத் தோழி சொல்லியது. 7
 
238
வார் கோட்டு வயத் தகர் வாராது மாறினும்,
குரு மயிர்ப் புருவை நசையின் அல்கும்
மாஅல் அருவித் தண் பெருஞ் சிலம்ப!
நீ இவண் வரூஉம்காலை,
5
மேவரும் மாதோ, இவள் நலனே தெய்யோ!
வரையாது வந்தொழுகும் தலைமகனுக்கு, 'இவள் கவின் நீ வந்த காலத்து வருதலால், நீ போன காலத்து அதன் தொலைவு உனக்கு அறியப்படாது' எனத் தோழி சொல்லி, வரைவு கடாயது. 8
 
239
சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம்
இரு பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் நின்
குன்று கெழு நல் நாட்டுச் சென்ற பின்றை,
நேர் இறைப் பணைத் தோள் ஞெகிழ,
5
வாராய்ஆயின், வாழேம் தெய்யோ!
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 9
 
240
அறியேமஅல்லேம்; அறிந்தனம் மாதோ
பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள்
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ!
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதானமை அறிந்து தலைமகள் புலந்துவழி, அவன் அதனை 'இல்லை' என்று மறைத்தானாக, தோழி சொல்லியது. 10
 
மேல்