தொடக்கம்   முகப்பு
321 - 330 இடைச்சுரப்பத்து
321
உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப்
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து,
மொழிபெயர் பல் மலை இறப்பினும்,
5
ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே.
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது. 1
322
நெடுங் கழை முளிய வேனில் நீடி,
கடுங் கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின்,
வெய்ய ஆயின, முன்னே; இனியே,
ஒள் நுதல் அரிவையை உள்ளுதொறும்
5
தண்ணிய ஆயின, சுரத்திடை ஆறே!
இடைச் சுரத்துக்கண் தலைமகன் தலைமகள் குணம் நினைத்தலில் தனக்கு உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது. 2
323
வள் எயிற்றுச் செந்நாய் வயவு உறு பிணவிற்குக்
கள்ளிஅம் கடத்திடைக் கேழல் பார்க்கும்
வெஞ் சுரக் கவலை நீந்தி,
வந்த நெஞ்சம்! நீ நயந்தோள் பண்பே.
இடைச் சுரத்துத் தலைமகள் குணம் நினைந்த தலைமகன், 'அவள் பண்பு வந்தன' என உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 3
324
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச்
சிறிது கண்படுப்பினும், காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல், நளி மனை நெடு நகர்,
வேங்கை வென்ற சுணங்கின்
5
தேம் பாய் கூந்தல் மாஅயோளே.
பிரிந்து வந்த தலைமகன் தலைமகளை நலம் பாராட்டக் கண்ட தோழி, 'இவள் குணத்தினை மறந்து அமைந்தவாறு யாது?' என வினாவினாட்கு அவன் சொல்லியது. 4
325
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ,
போகில் புகா உண்ணாது, பிறிது புலம் படரும்
வெம்பு அலை அருஞ் சுரம் நலியாது
எம் வெங் காதலி பண்பு துணைப் பெற்றே.
பிரிந்துவந்த தலைமகன், 'சுரத்தின் வெம்மை எங்ஙனம் ஆற்றினீர்?' என்ற தோழிக்குச் சொல்லியது. 5
326
அழல் அவிர் நனந் தலை நிழல் இடம் பெறாது,
மட மான் அம் பிணை மறியொடு திரங்க,
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற, சுரமே;
5
இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே!
இடைச்சுரத்து வெம்மை ஆற்றானாகிய தலைமகன் தலைமகள் குணம் நினைந்து, நொந்து சொல்லியது. 6
327
பொறி வரித் தடக் கை வேதல் அஞ்சி,
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா;
வெயில் முளி சோலைய, வேய் உயர் சுரனே;
அன்ன ஆர் இடையானும்,
5
தண்மை செய்த, இத் தகையோள் பண்பே!
பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தலைமகள் குணம் நினைந்து, இரங்கிச் சொல்லியது. 7
328
நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய்த்
தண்ணிய ஆயினும், வெய்ய மன்ற
மடவரல் இன் துணை ஒழியக்
கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே.
'மழை வீழ்தலால் சுரம் தண்ணென்றது; இனி வருத்தம் இன்றிப் போகலாம்' என்ற உழையர்க்குத் தலைமகன் சொல்லியது. 8
329
ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனந் தலை
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, நம்மொடு
மறுதருவதுகொல் தானே செறிதொடி
கழிந்து உகு நிலைய ஆக
5
ஒழிந்தோள் கொண்ட, என் உரம் கெழு, நெஞ்சே?
இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து, தலைமகன் உழையர்க்குச் சொல்லியது. 9
330
வெந் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி,
வந்தனம்ஆயினும், ஒழிக இனிச் செலவே!
அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்
கதிர் தெறு வெஞ் சுரம் நினைக்கும்,
5
அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே.
பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 10
மேல்