தொடக்கம்   முகப்பு
361 - 370 முன்னிலைப்பத்து
361
உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை
வேனில் பாதிரி விரி மலர் குவைஇத்
தொடலை தைஇய மடவரல் மகளே!
கண்ணினும் கதவ, நின் முலையே!
5
முலையினும் கதவ, நின் தட மென் தோளே!
புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1
 
362
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை,
சிறு கண் யானை உறு பகை நினையாது,
யாங்கு வந்தனையோ பூந் தார் மார்ப!
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
5
இருள் பொர நின்ற இரவினானே?
சேணிடைப் பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது இரவின்கண் வந்துழித் தோழி சொல்லியது. 2
 
363
சிலை வில் பகழிச் செந் துவர் ஆடைக்
கொலை வில் எயினர் தங்கை! நின் முலைய
சுணங்கு என நினைதி நீயே;
அணங்கு என நினையும், என் அணங்குறு நெஞ்சே.
புணர்ந்து உடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நலம் பாராட்டியது. 3
 
364
முளவு மா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கு, நின் நிலை அறியச்
சொல்லினென் இரக்கும்அளவை
வென் வேல் விடலை! விரையாதீமே!
உடன்போக்கு நயந்த தலைமகன் அதனைத் தோழிக்கு உணர்த்த, அவள் முடிப்பாளாய்ச் சொல்லியது. 4
 
365
கண மா தொலைச்சித் தன்னையர் தந்த
நிண ஊன் வல்சிப் படு புள் ஓப்பும்
நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு
நன்னல நயவரவு உடையை
5
என் நோற்றனையோ? மாவின் தளிரே!
வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைத்த மாவின் தளிர் கண்டு சொல்லியது. 5
 
366
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! 'என் தோழி
பசந்தனள் பெரிது' எனச் சிவந்த கண்ணை,
கொன்னே கடவுதி ஆயின், என்னதூஉம்,
அறிய ஆகுமோ மற்றே
5
முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே?
தலைமகளை நோக்கி, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 6
 
367
பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ,
விரிஇணர் வேங்கையொடு, வேறு பட மிலைச்சி,
விரவு மலர் அணிந்த வேனில் கான் யாற்றுத்
தேரொடு குறுக வந்தோன்
5
பேரொடு புணர்ந்தன்று அன்னை! இவள் உயிரே.
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 7
 
368
எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல் மலர்
பொரிப் பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ, பெரும! நின்
5
அம் மெல்லோதி அழிவிலள் எனினே!
'வேனிற்காலத்து நும்மொடு விளையாட்டு நுகர வருவல்' என்று, பருவம் குறித்துப் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி கூறியது. 8
 
369
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில்
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல்
குறி நீ செய்தனை என்ப; அலரே,
குரவ நீள் சினை உறையும்
5
பருவ மாக் குயில் கௌவையின், பெரிதே!
பரத்தை ஒருத்தியுடன் பொழிலகத்துத் தங்கி வந்த தலைமகன் தலைமகள் வினாயவழி, 'யாரையும் அறியேன்' என்றானாக, அவள் கூறியது. 9
 
370
வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை
இருஞ் சிறை வண்டின் பெருங் கிளை மொய்ப்ப,
நீ நயந்து உறையப்பட்டோள்
யாவளோ? எம் மறையாதீமே.
பரத்தைஒருத்திக்குப் பூ அணிந்தான் என்பது கேட்ட தலைமகள், 'அஃது இல்லை' என்று மறைக்கும் தலைமகற்குக் கூறியது. 10
 
மேல்