தொடக்கம்   முகப்பு
381 - 390 உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்தபத்து
381
பைங் காய் நெல்லி பல உடன் மிசைந்து,
செங் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்
யார்கொல், அளியர் தாமே வார் சிறைக்
குறுங் கால் மகன்றில் அன்ன
5
உடன் புணர் கொள்கைக் காதலோரே?
உடன்போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது. 1
 
382
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள், வெள் வேல்
திருந்து கழல் காளையொடு அருஞ் சுரம் கழிவோள்,
எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப்
புனை இழை மகளிர்ப் பயந்த
5
மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.
தலைமகள் இடைச் சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத் தங்கியவழி, அவ்வூர்ப் பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டார் சொல்லியது. 2
 
383
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடுங் கால் மராஅத்துக் குறுஞ் சினை பற்றி,
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே
5
பைஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே.
உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற் பூக்கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்க, கண்டார் கூறியது. 3
 
384
சேட் புலம் முன்னிய அசை நடை அந்தணிர்!
நும் ஒன்று இரந்தனென் மொழிவல்; எம் ஊர்,
'யாய் நயந்து எடுத்த ஆய்நலம் கவின
ஆர் இடை இறந்தனள்' என்மின்
5
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே.
உடன்போகிய தலைமகள் ஆண்டு எதிர்வரும் அந்தணர்க்குச் சொல்லியது. 4
 
385
'கடுங்கண் காளையொடு நெடுந் தேர் ஏறி,
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய,
வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள்' எனக்
கூறுமின் வாழியோ! ஆறு செல் மாக்கள்!
5
நல் தோள் நயந்து பாராட்டி,
எற் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே.
வரைவு மறுத்துழி, உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, 'யான் போகின்ற படியை யாய்க்கு நீர் கூற வேண்டும்' எனச் சொல்லியது. 5
 
386
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே
நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறுவி! நின் கடுஞ் சூல் மகளே.
புணர்ந்து உடன்போகிய தலைமகளை இடைச் சுரத்துக் கண்டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது. 6
 
387
'அறம் புரி அரு மறை நவின்ற நாவின்
திறம் புரி கொள்கை அந்தணிர்! தொழுவல்' என்று
ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே!
கண்டனெம் அம்ம, சுரத்திடை அவளை
5
இன் துணை இனிது பாராட்ட,
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர் அவட்குச் சொல்லியது. 7
 
388
நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக்
கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇ,
சிறு வரை இறப்பின், காண்குவை செறிதொடிப்
பொன் ஏர் மேனி மடந்தையொடு
5
வென் வேல் விடலை முன்னிய சுரனே.
தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. 8
 
389
'செய் வினைப் பொலிந்த செறி கழல் நோன் தாள்
மை அணல் காளையொடு பைய இயலி,
பாவை அன்ன என் ஆய்தொடி மடந்தை
சென்றனள்! என்றிர், ஐய!
5
ஒன்றினவோ, அவள் அம் சிலம்பு அடியே!
பின்சென்ற செவிலித்தாய், வினவப் பட்டோர் 'கண்டோம்' என்புழி, சொல்லியது. 9
 
390
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது
பல் ஊழ் மறுகி வினவுவோயே!
திண் தோள் வல்வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்திடை, யாமே.
பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவ, கண்டோர் தாம் கண்டவாறு அவட்குக் கூறியது. 10
 
மேல்