தொடக்கம்   முகப்பு
421 - 430 விரவுப்பத்து
421
மாலை வெண் காழ் காவலர் வீச,
நறும் பூம் புறவின் ஒடுங்கு முயல் இரியும்
புன்புல நாடன் மட மகள்
நலம் கிளர் பணைத் தோள் விலங்கின, செலவே.
வினை பலவற்றிற்கும் பிரிந்து ஒழுகும் தலைமகன் பின்பு மனைவயின் நீங்காது ஒழுகுகின்ற காதல் உணர்ந்தோர் சொல்லியது. 1
 
422
கடும் பரி நெடுந் தேர்க் கால் வல் புரவி,
நெடுங் கொடி முல்லையொடு தளவமலர் உதிர,
விரையுபு கடைஇ நாம் செல்லின்,
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே.
மீள்கின்றான் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. 2
 
423
மா மழை இடியூஉத் தளி சொரிந்தன்றே;
வாள் நுதல் பசப்பச் செலவு அயர்ந்தனையே;
யாமே நிற் துறந்து அமையலம்;
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே.
கார்ப் பருவத்தே பிரியக் கருதிய தலைமகற்குத் தோழி தலைமகளது ஆற்றாமை கூறிச் செலவு அழுங்குவித்தது. 3
 
424
புறவு அணி நாடன் காதல் மட மகள்
ஒள் நுதல் பசப்ப நீ செலின், தெண் நீர்ப்
போது அவிழ் தாமரை அன்ன நின்
காதல்அம் புதல்வன் அழும், இனி முலைக்கே.
இதுவும் அது. 4
 
425
புன் புறப் பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம்
வல்லை நெடுந் தேர் கடவின்,
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே.
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. 5
 
426
வென் வேல் வேந்தன் அருந் தொழில் துறந்து, இனி,
நன்னுதல்! யானே செலவு ஒழிந்தனெனே!
முரசு பாடு அதிர ஏவி,
அரசு படக் கடக்கும் அருஞ் சமத்தானே.
வேந்தற்குத் தானைத்தலைவனாய் ஒழுகும் தலைமகன் பிரிந்து வினை முடித்து வந்து தலைவியோடு உறைகின்றுழி, 'இன்னும் பிரியுங்கொல்?' என்று கருதிய தலைமகட்குக் கவற்சி தீரச் சொல்லியது. 6
 
427
பேர் அமர் மலர்க் கண் மடந்தை! நீயே
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே;
போருடை வேந்தன், 'பாசறை
வாரான் அவன்' எனச் செலவு அழுங்கினனே.
'பிரியுங்கொல்?' என்று ஐயுற்று உடன்படாமை மேற்கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவொழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது. 7
 
428
தேர் செலவு அழுங்க, திருவில் கோலி,
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே;
வேந்து விடு விழுத் தொழில் ஒழிய,
யான் தொடங்கினனால், நிற் புறந்தரவே.
'பிரியுங்கொல்?' என்று ஐயுற்ற தலைமகள் ஐயம் தீரத் தலைமகன் சொல்லியது. 8
 
429
பல் இருங் கூந்தல்! பசப்பு நீ விடின்,
செல்வேம் தில்ல யாமே செற்றார்
வெல் கொடி அரணம் முருக்கிய
கல்லா யானை வேந்து பகை வெலற்கே.
குறிப்பினால் பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் உடம்படுவாளாக, வேந்தற்கு உற்றுழிப் பிரியும் தலைமகன் சொல்லியது. 9
 
430
நெடும் பொறை மிசைய குறுங் கால் கொன்றை
அடர் பொன் என்னச் சுடர் இதழ் பகரும்
கான் கெழு நாடன் மகளே!
அழுதல் ஆன்றிசின்; அழுங்குவல் செலவே.
'பிரியுங்கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் பருவ வரவு கூறி, 'இது காரணத்தாலும் பிரியேன்' எனச் சொல்லியது. 10
 
மேல்