தொடக்கம்   முகப்பு
431 - 440 புறவணிப்பத்து
431
நன்றே, காதலர் சென்ற ஆறே!
அணி நிற இரும் பொறை மீமிசை
மணி நிற உருவின தோகையும் உடைத்தே.
'பிரிவு உடம்பட்டும் ஆற்றாயாகின்றது என்னை?' என்று வினவியவழி, 'அவர் போன சுரம் போகற்கு அரிது என்று ஆற்றேனாகின்றேன்' என்ற தலைமகட்கு, 'வேனிற்காலம் கழிந்தது; கார்ப்பருவத் தோற்றத்திலே பிரிந்தாராகலான், அச் சுரம் நன்று'
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 
432
நன்றே, காதலர் சென்ற ஆறே!
சுடு பொன் அன்ன கொன்றை சூடி,
கடி புகுவனர்போல் மள்ளரும் உடைத்தே. 2
 
433
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நீர்ப்பட எழிலி வீசும்
கார்ப் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே. 3
 
434
நன்றே, காதலர் சென்ற ஆறே!
மறியுடை மான்பிணை உகள,
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே. 4
 
435
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நிலன் அணி நெய்தல் மலர,
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. 5
 
436
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நன் பொன் அன்ன சுடர் இணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே. 6
 
437
நன்றே, காதலர் சென்ற ஆறே!
ஆலித் தண் மழை தலைஇய,
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. 7
 
438
நன்றே, காதலர் சென்ற ஆறே!
பைம் புதல் பல் பூ மலர,
இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே. 8
 
439
நன்றே, காதலர் சென்ற ஆறே!
குருந்தங் கண்ணிக் கோவலர்
பெருந் தண் நிலைய பாக்கமும் உடைத்தே. 9
 
440
நன்றே, காதலர் சென்ற ஆறே!
தண் பெயல் அளித்த பொழுதின்
ஒண் சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. 10
 
மேல்