தொடக்கம்   முகப்பு
461 - 470 தோழிவற்புறுத்தபத்து
461
வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகைய,
கான் பிசிர் கற்ப, கார் தொடங்கின்றே;
இனையல் வாழி, தோழி; எனையதூஉம்
நிற் துறந்து அமைகுவர்அல்லர்,
5
வெற்றி வேந்தன் பாசறையோரே.
பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வரவு கூறி, ' த்த பருவம் வந்ததாகலான், அவர் வருவர்; என வற்புறீஇயது. 1
 
462
ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி,
எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்,
5
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே.
பருவங் கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என வற்புறீஇயது. 2
 
463
புதல்மிசை நறு மலர் கவின் பெறத் தொடரி, நின்
நலம் மிகு கூந்தல் தகை கொளப் புனைய
வாராது அமையலோ இலரே; நேரார்
நாடு படு நன்கலம் தரீஇயர்,
5
நீடினர் தோழி! நம் காதலோரே.
குறித்த பருவம் வரவும் தலைமகன் தாழ்த்துழி, தோழி காரணம் கூறி, வற்புறீஇயது. 3
 
464
கண் எனக் கருவிளை மலர, பொன் என
இவர் கொடிப் பீரம் இரும் புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர் நின்
நல் தோள் மருவரற்கு உலமருவோரே.
வரைந்த அணுமைக்கண்ணே பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வந்துழி, 'இதனை மறந்தார்' என்ற தலைமகட்குத் தோழி, 'வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாகலான் மறத்தல் கூடாது' எனச் சொல்லி வற்புறீஇயது. 4
 
465
நீர் இகுவன்ன நிமிர் பரி நெடுந் தேர்,
கார் செய் கானம் கவின் பட, கடைஇ,
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க,
வருவர், வாழி, தோழி!
5
செரு வெங் குருசில் தணிந்தனன் பகையே.
பருவம் கண்டு வேறுபட்ட தலைமகளை, 'வேந்தன் வினைமுடித்தான்' எனக் கேட்ட தோழி, 'வருவர்' என வற்புறீஇயது. 5
 
466
வேந்து விடு விழுத் தொழில் எய்தி, ஏந்து கோட்டு
அண்ணல் யானை அரசு விடுத்து, இனியே
எண்ணிய நாளகம் வருதல் பெண் இயல்
காமர் சுடர் நுதல் விளங்கும்
5
தே மொழி அரிவை! தெளிந்திசின் யானே.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளை, 'அவர் போன காரியம் இடையூறு இன்றி முடிந்து வருதல் பல்லாற்றானும் தெளிந்தேன்' எனத் தோழி சொல்லி ஆற்றுவித்தது. 6
 
467
புனை இழை நெகிழச் சாஅய், நொந்துநொந்து
இனையல் வாழியோ இகுளை! 'வினைவயின்
சென்றோர் நீடினர் பெரிது' என: தங்காது
நம்மினும் விரையும் என்ப,
5
வெம் முரண் யானை விறல் போர் வேந்தே.
தலைமகன் வினைவயிற் பிரிய ஆற்றாள் ஆகிய தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 7
 
468
வரி நுணல் கறங்க, தேரை தெவிட்ட,
கார் தொடங்கின்றே காலை; இனி, நின்
நேர் இறைப் பணைத் தோட்கு ஆர் விருந்து ஆக,
வடி மணி நெடுந் தேர் கடைஇ,
5
வருவர் இன்று, நம் காதலோரே.
பிரிவு நீட ஆற்றாள் ஆய தலைமகட்குத் தோழி பருவங்காட்டி, 'இன்றே வருவர்' என வற்புறீஇயது. 8
 
469
பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும்
வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு
அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு
பெயல் தொடங்கின்றே வானம்;
5
காண்குவம்; வம்மோ, பூங் கணோயே!
பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி 'அவரை நமக்குத் தருதற்கு வந்தது காண் இப் பருவம்' எனக் காட்டி வற்புறீஇயது. 9
 
470
இரு நிலம் குளிர்ப்ப வீசி, அல்கலும்
அரும் பனி அளைஇய அற்சிரக் காலை
உள்ளார், காதலர், ஆயின், ஒள்ளிழை!
சிறப்பொடு விளங்கிய காட்சி
5
மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே?
பருவம் வந்தது கண்டு, 'தாம் குறித்த இதனை மறந்தார்' என வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 10
 
மேல்