தொடக்கம்   முகப்பு
491 - 500 வரவுச்சிறப்புரைத்தபத்து
491
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய,
நொந்து நொந்து உயவும் உள்ளமொடு
வந்தனெம் மடந்தை! நின் ஏர் தர விரைந்தே.
வினை முற்றிப் புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்லியது. 1
 
492
நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நல் நுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மா மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்
5
நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே.
இதுவும் அது. 2
 
493
ஏறு முரண் சிறப்ப, ஏறு எதிர் இரங்க,
மாதர் மான் பிணை மறியொடு மறுக,
கார் தொடங்கின்றே காலை
நேர் இறை முன்கை! நின் உள்ளி யாம் வரவே.
இதுவும் அது. 3
 
494
வண்டு தாது ஊத, தேரை தெவிட்ட,
தண் கமழ் புறவின் முல்லை மலர,
இன்புறுத்தன்று பொழுதே;
நின் குறி வாய்த்தனம்; தீர்க, இனிப் படரே!
இதுவும் அது. 4
 
495
செந் நில மருங்கில் பல் மலர் தாஅய்,
புலம்பு தீர்ந்து, இனியஆயின, புறவே
பின் இருங் கூந்தல் நல் நலம் புனைய,
உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு,
5
முள் எயிற்று அரிவை! யாம் வந்தமாறே.
இதுவும் அது. 5
 
496
மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப
மா மலை புலம்ப, கார் கலித்து அலைப்ப,
பேர் அமர்க் கண்ணி! நிற் பிரிந்து உறைநர்
தோள் துணையாக வந்தனர்;
5
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே.
குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழி, தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 
497
குறும் பல் கோதை கொன்றை மலர,
நெடுஞ் செம் புற்றம் ஈயல் பகர,
மா பசி மறுப்ப, கார் தொடங்கின்றே
பேர் இயல் அரிவை! நின் உள்ளிப்
5
போர் வெங் குருசில் வந்தமாறே.
498
தோள் கவின் எய்தின; தொடி நிலை நின்றன;
நீள் வரி நெடுங் கண் வாள் வனப்பு உற்றன
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென,
விரை செலல் நெடுந் தேர் கடைஇ,
5
வரையக நாடன் வந்தமாறே.
இதுவும் அது. 8
 
499
பிடவம் மலர, தளவம் நனைய,
கார் கவின் கொண்ட கானம் காணின்,
'வருந்துவள் பெரிது' என, அருந் தொழிற்கு அகலாது,
வந்தனரால், நம் காதலர்
5
அம் தீம் கிளவி! நின் ஆய் நலம் கொண்டே.
இதுவும் அது. 9
 
500
கொன்றைப் பூவின் பசந்த உண்கண்,
குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல,
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர்
வியல் நெடும் பாசறை நீடிய
5
வய மான் தோன்றல் நீ! வந்தமாறே.
 
மேல்