206

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


206. அன்னாய் வாழிவேண் டன்னை யுவக்காண்
    மாரிக் குன்றத்துக் 1காப்பா ளன்னன்
    தூவலி னனைந்த தொடலை யொள்வாள்
    பாசி 2சூழ்ந்த பெருங்கழல்
    தண்பணி வைகிய வரிக்கச் சினனே.

  எ-து இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை
யறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.

   குறிப்பு. உவக்காண்-உவ்விடத்தே; ஐங். 207 : 2; நற். 237 : 6.
குறுந். 367 : 3; அகநா. 4 : 13; ‘உவக்காணென்பது ஒட்டி நின்ற
இடைச்சொல், (குறள், 1185. பரி). காப்பாள் அன்னன்-காவற்
காரனை ஒத்தவன். தூவலின்-மழையினால். தொடலை ஒள்வாள்-மாலை
போன்ற ஒள்ளிய வாள் ; மதுரைக். 636, ந, ‘தூவலின் நனைந்த.....
பெருங்கழல், என்றது மழையையும், பாசி படர்ந்த நீர் நிலைகளையும்
கடந்து அதர்படு துன்பங்களையும் கருதாது வந்துளான் என்றபடி.
   (மேற்) மு. தோழி தலைவியை அன்னையென்றல் (தொல். பொருள். 52. ந.).
    (பி-ம்.) 1 ‘காப்பானன்ன’ 2 ‘தூர்ந்த’ ( 6 )