84

(9) புலவி விராய பத்து

 


84. செவியிற் கேட்பினுஞ் சொல்லிறந்து வெகுள்வோள்
   கண்ணிற் காணி னென்னா குவள்கொல்
   நறுவீ யைம்பான் மகளி ராடும்
   தைஇத் தண்கயம் போலப்
   பலர்படிந் துண்ணுநின் பரத்தை மார்பே.

 எ-து பரத்தையர் மனைக்கண் தங்கிப் புணர்ச்சிக் குறியோடு
வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தோழி சொல்லியது

 குறிப்பு. சொல்லிறந்து-சொற்குஅடங்காதபடி. வெகுள்வோள்-
சினங்கொள்பவள்; என்றது தலைவியை. நறுவீ-மணம் பொருந்திய
மலர்கள். தைஇ-தை மாதத்தில், ஐம்பால்-கூந்தல். மகளிராடும்
கயம் போல; பண்டைக் காலத்தில் தைத்திங்களின் நாட் கலையில்
மகளிர் நோன்பு கருதி நீராடி வந்தனர்; நற். 80 : 7 ; குறுந். 196 : 4.
கலித். 59 : 13 ; புறநா. 70 : 6. உண்ணும்-துய்க்கும். பரத்தை மார்பு-
பரத்தைமையுடைய மார்பை. மார்பைக் கண்ணிற் காணின் என்னா
குவள்கொல். ( 4 )