426

5. முல்லை

(43) விரவுப் பத்து


426. வென்வேல் வேந்த னருந்தொழி றுறந்தினி
    நன்னுதல் யானே செலவொழிந் தனெனே
    முரசுபா டதிர வேவி
    அரசுபடக் கடக்கு மருஞ்சமத் தானே.

    எ-து வேந்தற்குத் தானைத்தலைவனாய் ஒழுகும் தலைமகன் பிரிந்து
வினைமுடித்து வந்து தலைவியோடு உறைகின்றுழி, ‘இன்னும் பிரியுங்
கொல்’ என்று கருதிய தலைமகட்குக் கவற்சிதீரச் சொல்லியது.

    குறிப்பு. வென்வேல்-வெற்றி பொருந்திய வேல். துறந்து-நீக்கி.
நன்னுதல் : விளி, செலவொழிந்தனென்-பிரிந்து செல்லுதலை நீக்கி
னேன். பாடு-இடம். அதிர-ஒலிக்க. அரசுபட-பகையரசர் கெட.
சமம்-போர். முரசு ஒலிக்கப் பொருதல் : புறநா. 93 : 1-2 சமத்தான்
உண்டாகும் செலவை ஒழிந்தனன். ( 6 )