448

5. முல்லை

(45) பாசறைப் பத்து


448. 1தழங்குரன் முரசங் காலை யியம்பக்
    கடுஞ்சின வேந்தன் றொழிலெதிர்ந் தனனே
    மெல்லவன் மருங்கின் முல்லை பூப்பப்
    பொங்குபெயற் கனைதுளி காரெதிர்ந் தன்றே
    அஞ்சி லோதியை யுள்ளுதொறும்
    துஞ்சா தலமர னாமெதிர்ந் தனமே.

    எ-து வேந்தற்கு உற்றுழிப்பிரிந்த தலைமகன் பருவம்வந்த
விடத்தினும் மீளப்பெறாது அரசன் செய்தியும் பருவத்தின் செய்தி
யும் தன்செய்தியும் கூறி ஆற்றானாயது.

    குறிப்பு. தழங்குரல்=தழங்குகுரல்-ஒலிக்கின்ற ஓசை; விகாரம்;
?கறங் குரல்? (ஐங். 452 : 2) போல. காலை-நாட்காலையில்.
இயம்ப-முழங்க. முரசம் காலையில் இயம்பல் : மதுரைக். 232;
புறநா. 161 : 29 ; சிலப். 13 : 140. 14 : 14, 17 : 6, 26 : 53; பு. வெ.
117, 202. தொழில் போர்த் தொழிலை. எதிர்ந்தனன்-ஏற்றுக்
கொண்டனன். அவல் மருங்கில்-பள்ளங்களில். அவல் மருங்கின்
முல்லை : புறநா. 352 : 3-4. பெயல்-மேகம். கார்-கார் காலம்.
அம் சில் ஓதி-அழகிய சிலவாகிய கூந்தலையுடையாள் ; தலைவி ;
ஐங். 49 : 1, குறிப்பு. உள்ளுதொறும்-நினைக்குந்தோறும். துஞ்சாது-
தூக்கம் கொள்ளாமல். அலமரல்-சுழற்சியை. எதிர்ந்தனம்-
ஏற்றுக் கொண்டோம். வேந்தன் தொழில் எதிர்ந்தனன். கார்
துளி எதிர்ந்தன்று. நாம் அலமரல் எதிர்ந்தனம்.

   (மேற்.) மு. இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவம் வந்துழி
மீளப்பெறாது அரசன் செய்தியும் பருவத்தின் செய்தியும் தன் செய்தி
யும் கூறிப் புலம்பியது. (தொல். அகத். 41, ந.).

   (பி-ம்.) 1 ‘தழங்குகுரல்? ( 8 )