324

4 பாலை

(33) இடைச்சுரப் பத்து


324. எரிகவர்ந் துண்ட வென்றூழ் நீளிடைச்
    சிறிதுகண் படுப்பினுங் காண்குவென் மன்ற
    நள்ளென் கங்கு னளிமனை நெடுநகர்
    வேங்கை வென்ற சுணங்கின்
    தேம்பாய் கூந்தன் மாஅ யோளே.

   எ-து பிரிந்துவந்த தலைமகன் தலைமகளை நலம்பாராட்டக்
கண்ட தோழி, ‘இவள் குணத்தினை மறந்து அமைந்தவாறு
யாது? என வினவினாட்கு அவன் சொல்லியது.

   குறிப்பு. எரி-நெருப்பை என்றூழ் -வெயிலையுடைய.
நீளிடை - நீண்ட இடைச்சுரத்தே, கண்படுப்பினும்-தூங்கினும்
காண்குவென்-காண்பேன். நள்ளென் கங்குல் - இருள் செறிந்த
இரவு : குறுந். 6 : 1, நளி- குளிர்ச்சி. சுணங்கிற்கு வேங்கைப் பூ:
சிறுபாண். 23-4; கலித். 57 : 17, 64: 26-7; அகநா. 174 :10-13,
புறநா. 352.: 12-3. தேம்-நறுமணம். மாயோளைக் காண்குவென்.
பிரிவின்கண் தலைவன் தலைவியைக் கனவிற் காண்டல்; தொல்
பொருள். 3; குறுந். 147 (மேற்) மு. பிரிந்த காலத்து இவளை மறந்த
வாறென்னென்ற தோழிக்குத் தலைவன் கூறியது (தொல். கற்பு. 5,
ந.) ( 4 )