தொடக்கம்   முகப்பு
செருந்தி
18
இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்,
பொருந்து மலர் அன்ன என் கண் அழ,
பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே?
பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. 8

 
112
அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங் கழிச் சேர்ப்பன்
தான் வரக் காண்குவம் நாமே;
மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே.
களவு நீடுவழி, 'வரையலன்கொல்?' என்று அஞ்சிய தோழிக்குத் தலைமகன் வரையும் திறம் தெளிக்க, தெளிந்த தலைமகள் சொல்லியது. 2

 
182
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக்
கை புனை நறுந் தார் கமழும் மார்பன்
அருந் திறல் கடவுள் அல்லன்
பெருந் துறைக் கண்டு, இவள் அணங்கியோனே.
தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தால் ஆயிற்று' எனத் தமர் நினைந்துழி, தோழி அறத்தொடு நின்றது. 2

 
மேல்