தொடக்கம்   முகப்பு
புலி
216
குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை,
நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின்
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு,
5
கொய்தரு தளிரின் வாடி, நின்
மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்!
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி கூறியது. 6
 

 
218
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்;
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்;
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி
எழுதரு மழையின் குழுமும்
5
பெருங் கல் நாடன் வரும்கொல்? அன்னாய்!
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, 'இஃது என் ஆம் கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக்கண்டு, 'கடிதின் வந்து வரைவான்' எனச் சொல்லியது. 8
 

 
246
வெறி செறித்தனனே, வேலன் கறிய
கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ,
..................................................................................................................
மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து,
5
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 

 
265
புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்று கெழு நாடன் மறந்தனன்
பொன்போல் புதல்வனோடு என் நீத்தோனே.
பரத்தை இடத்தானாக ஒழுகுகின்ற தலைமகன் விடுத்த வாயில்மாக்கட்குத் தலைமகள் சொல்லியது. 5
 

 
266
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தலொடு
குறுக் கை இரும் புலி பொரூஉம் நாட!
நனி நாண் உடையை மன்ற
பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே!
நொதுமலர் வரைவு பிறந்துழி, தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறி, தலைமகனை வரைவு கடாயது. 6
 

 
274
மந்திக் கணவன் கல்லாக் கடுவன்,
ஒண் கேழ் வயப்புலி குழுமலின், விரைந்து, உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி, தோழி! என்
5
மென் தோள் கவினும், பாயலும், கொண்டே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 4
 

 
307
ஞெலி கழை முழங்குஅழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ் சுரம் செலவு அயர்ந்தனையே;
நன்று இல, கொண்க! நின் பொருளே
பாவை அன்ன நின் துணைப் பிரிந்து வருமே.
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக் கூறியவழி, தோழி அதனை இழித்துக் கூறியது. 7
 

 
316
பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்த,
தேர் அகல் அல்குல் அவ் வரி வாட,
இறந்தோர்மன்ற தாமே பிறங்கு மலைப்
புல் அரை ஓமை நீடிய
5
புலி வழங்கு அதர கானத்தானே.
தலைமகள் மெலிவுக்கு நொந்து, தலைமகன் பிரிவின்கண் தோழி கூறியது. 6
 

 
373
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக
புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை
மான்பிணை அணைதர, ஆண் குரல் விளிக்கும்
வெஞ் சுரம் என் மகள் உய்த்த
5
அம்பு அமை வல் வில் விடலை தாயே!
தலைமகளைத் தலைமகன் கொண்டு கழிந்த கொடுமை நினைந்து, நற்றாய் சொல்லியது. 3
 

 
386
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே
நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறுவி! நின் கடுஞ் சூல் மகளே.
புணர்ந்து உடன்போகிய தலைமகளை இடைச் சுரத்துக் கண்டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது. 6
 

 
396
புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின்
கதுப்பு அயல் அணியும் அளவை, பைபயச்
சுரத்திடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை!
கல் கெழு சிறப்பின் நம் ஊர்
5
எல் விருந்து ஆகிப் புகுகம், நாமே.
இதுவும் அது. 6
 

 
மேல்