தொடக்கம் முகப்பு
அம்மூவனார்
 
101
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண்
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள்
பூப் போல் உண்கண் மரீஇய
5
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே.
அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1

 
102
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்
நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.
இதுவும் அது. 2

 
103
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே;
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே.
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3

 
104
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல் தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே.
புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4

 
105
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தென,
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே.
அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5

 
106
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.
அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6

 
107
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என் தோழி
சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து,
தண் கடல் படு திரை கேட்டொறும்,
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.
தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7

 
108
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்
எம் தோள் துறந்தனன்ஆயின்,
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே?
அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8

 
109
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல்
நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன்
எம் தோள் துறந்த காலை, எவன்கொல்
பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே?
அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9

 
110
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
5
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே?
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

 
111
அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளீஇச்
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே
5
அருந் தவம் முயறல் ஆற்றாதேமே?
'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள் வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 1

 
112
அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங் கழிச் சேர்ப்பன்
தான் வரக் காண்குவம் நாமே;
மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே.
களவு நீடுவழி, 'வரையலன்கொல்?' என்று அஞ்சிய தோழிக்குத் தலைமகன் வரையும் திறம் தெளிக்க, தெளிந்த தலைமகள் சொல்லியது. 2

 
113
அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு,
ஊரார், 'பெண்டு' என மொழிய, என்னை,
அது கேட்டு, 'அன்னாய்' என்றனள், அன்னை;
5
பைபய 'எம்மை' என்றனென், யானே.
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3

 
114
அம்ம வாழி, தோழி! கொண்கன்
நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே?
இடைவிட்டு ஒழுகும் தலைமகன் வந்து சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 4

 
115
அம்ம வாழி, தோழி! பல் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ,
அன்னை அருங் கடி வந்து நின்றோனே!
இற் செறிப்புண்ட பின்பும், வரைந்து கொள்ள நினையாது தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 5

 
116
அம்ம வாழி, தோழி! நாம் அழ,
நீல இருங் கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று, மன்ற
காலை அன்ன காலை முந்துறுத்தே.
எற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6

 
117
அம்ம வாழி, தோழி! நலனே
இன்னது ஆகுதல் கொடிதே! புன்னை
அணி மலர் துறைதொறும் வரிக்கும்
மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே.
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 7

 
118
அம்ம வாழி, தோழி! யான் இன்று,
அறனிலாளற் கண்ட பொழுதில்,
சினவுவென் தகைக்குவென் சென்றனென்
பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே.
சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயில் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி, நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉம் ஆம். 8

 
119
அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யாமையின் ஏதில பற்றி,
அன்பு இலன் மன்ற பெரிதே
மென் புலக் கொண்கன் வாராதோனே!
'வரைதற்கு வேண்டுவன முயல்வேம்' எனச் சொல்லி வரையாது செலுத்துகின்ற தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9

 
120
அம்ம வாழி, தோழி! நலம் மிக
நல்லஆயின, அளிய மென் தோளே
மல்லல் இருங் கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்தமாறே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்து சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 10

 
121
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
முண்டகக் கோதை நனைய,
தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே!
பரத்தை தலைமகற்குச் சொல்லியது; 'பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகாநின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத் தவறு என் மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்க வேண்டும்' என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவ

 
122
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்தென,
வெள்ளாங் குருகை வினவுவோளே! 2

 
123
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப,
தண்ணென் பெருல் கடல் திரை பாய்வோளே! 3

 
124
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
வண்டற் பாவை வௌவலின்,
நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே! 4

 
125
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தெண் திரை பாவை வௌவ,
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே! 5

 
126
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
உண்கண் வண்டினம் மொய்ப்ப,
தெண் கடல் பெருந் திரை மூழ்குவோளே! 6

 
127
கண்டிகும்அல்லமோ, கொண்க! நின் கேளே?
தும்பை மாலை இள முலை
நுண் பூண் ஆகம் விலங்குவோளே! 7

 
128
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
உறாஅ வறு முலை மடாஅ,
உண்ணாப் பாவையை ஊட்டுவோளே! 8

 
129
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 9

 
130
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,
(இந்தப் பாடல் கிடைக்கப்பெறவில்லை) 10

 
131
நன்றே, பாண! கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ் ஊர்க்
கல்லென் கௌவை எழாஅக்காலே.
வாயில் வேண்டி வந்த பாணன் தலைமகன் காதன்மை கூறினானாக, தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது. 1

 
132
அம்ம வாழி, பாண! புன்னை
அரும்பு மலி கானல் இவ் ஊர்
அலர் ஆகின்று, அவர் அருளுமாறே.
வாயில் வேண்டி வந்த பாணன், 'நீர் கொடுமை கூற வேண்டா; நும்மேல் அருள் உடையர்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. 2

 
133
யான் எவன் செய்கோ? பாண! ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
புல்லென்றன, என் புரி வளைத் தோளே!
வாயிலாய்ப் புகுந்த பாணன் தலைமகள் தோள் மெலிவு கண்டு, 'மனைப்புறத்துப் போய் வந்த துணையானே இவ்வாறு வேறுபடுதல் தகாது' என்றாற்கு அவள் சொல்லியது. 3

 
134
காண்மதி, பாண! இருங் கழிப்...
பாய்பரி நெடுந் தேர்க் கொண்கனொடு
தான் வந்தன்று, என் மாமைக் கவினே.
பிரிவின்கண் தலைமகள் கவின் தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத் தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது. 4

 
135
பைதலம் அல்லேம், பாண! பணைத் தோள்,
ஐது அமைந்து அகன்ற அல்குல்,
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே.
பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றது அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் பாணற்குச் சொல்லியது. 5

 
136
நாண் இலை மன்ற, பாண! நீயே
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த
கானல் அம் துறைவற்குச் சொல் உகுப்போயே!
வாயிலாய்ப் புகுந்து தலைமகன் குணம் கூறிய பாணற்கு வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 6

 
137
நின் ஒன்று வினவுவல், பாண! நும் ஊர்த்
திண் தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே?
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கின இடத்தும், அவன் முன்பு செய்த தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்தாளாக, இனி ' இந்த வேறுபாடு என்?' என்று வினவிய பாணற்கு அவள் சொல்லியது 7

 
138
பண்பு இலை மன்ற, பாண! இவ் ஊர்
அன்பு இல கடிய கழறி,
மென் புலக் கொண்கனைத் தாராதோயே!
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது. 8

 
139
அம்ம வாழி, கொண்க! எம் வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்,
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே.
ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது. 9

 
140
காண்மதி, பாண! நீ  த்தற்கு உரியை
துறை கெழு கொண்கன் பிரிந்தென,
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே.
பாணன் தூதாகிச் செல்ல வேண்டும் குறிப்பினளாகிய தலைமகள் அவற்குத் தன் மெலிவு காட்டிச் சொல்லியது. 10

 
141
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண் துளி வீசிப்
பசலை செய்தன பனி படு துறையே.
வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 1

 
142
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படு சினைப்
புள் இறை கூரும் துறைவனை
உள்ளேன் தோழி! படீஇயர் என் கண்ணே!
வரையாது வந்தொழுகும் தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயி றற் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2

 
143
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை,
இனிய செய்த; நின்று, பின்
முனிவு செய்த இவள் தட மென் தோளே.
புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 3

 
144
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த்
தனிக் குருகு உறங்கும் துறைவற்கு
இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே.
'தலைமகன் வரைந்து கோடல் நினையாது, களவொழுக்கமே விரும்பி ஒழுகாநின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாது ஒழியவேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. 4

 
145
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ் சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன், இனியே!
வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றால் சான்றோரைத் தலைமகன் விடுத்தது அறிந்த தோழி தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது. 5

 
146
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனியமன்ற என் மாமைக் கவினே.
வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, நம்மை எவ்வகை நினைத்தார் கொல்லோ?' என்று ஐயுற்றிருந்த தலைமகள் வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது. 6

 
147
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்
'தண் தழை விலை' என நல்கினன், நாடே.
சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிப்படுத்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத்தாளாய்த் தலைமகட்குச் சொல்லியது. 7

 
148
எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ் சினை
வீ இனிது கமழும் துறைவனை
நீ இனிது முயங்குமதி, காதலோயே!
களவொழுக்கத்தின் விளைவு அறியாது அஞ்சிய வருத்தம் நீங்க வதுவை கரண வகையான் முடித்த பின்பு, தலைமகளைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி சொல்லியது. 8

 
149
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து, அகறல் வல்லாதீமோ!
வரைந்து எய்திய தலைமகன் தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது. 9

 
150
எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ் சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான்; அரும் புணர்வினனே.
முன் ஒருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்து வந்துழி அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?' என்று வினவியவழி, தலைமகள் தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது. 10

 
151
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப, நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு
5
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே.
வாயில் வேண்டிய தோழிக்கு தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது. 1

 
152
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்று கானல்அம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப;
5
அறவன் போலும்; அருளுமார் அதுவே.
தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையான்; ஆதலால் நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி, வாயில் நேர்விக்கும் தோழிக்கு அவள் சொல்லியது. 2

 
153
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
உளர, ஒழிந்த தூவி குவவு மணல்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
5
நல்நெடுங் கூந்தல் நாடுமோ மற்றே?
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றால் வாயிலாய்ப் புகுந்தாற்குத் தோழி கூறியது. 3

 
154
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு
யான் எவன் செய்கோ? பொய்க்கும் இவ் ஊரே?
தோழி வாயில் வேண்டி நெருங்கியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4

 
155
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப, ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
5
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென், யானே!
பல வழியானும் வாயில் நேராளாகிய தலைமகள், 'மகப் பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. 5

 
156
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப, ஒழிந்த செம் மறுத் தூவி
தெண் கழிப் பரக்கும் துறைவன்
5
எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே!
பரத்தையிடத்து வாயில் விட்டு ஒழுகுகின்ற தலைமகனது வாயிலாய் வந்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது. 6

 
157
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
காலை இருந்து மாலைச் சேக்கும்
தெண் கடற் சேர்ப்பனொடு வாரான்,
5
தான் வந்தனன், எம் காதலோனே!
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டி ஒழுகுகின்ற தலைமகன், 'புதல்வன் வாயிலாக வரும்' எனக் கேட்டு, அஞ்சிய தலைமகள் புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது. 7

 
158
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கானல்அம் பெருந் துறைத் துணையொடு கொட்கும்
தண்ணம் துறைவ! கண்டிகும்,
5
அம் மா மேனி எம் தோழியது துயரே.
பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய், அஃது இடமாக வந்தமை அறிந்த தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. 8

 
159
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின, அல்கும் பனி நீர்ச் சேர்ப்ப!
நின் ஒன்று இரக்குவென் அல்லேன்;
5
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே?
மறாமற்பொருட்டு உண்டிக் காலத்து வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 9

 
160
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ!
பண்டையின் மிகப் பெரிது இனைஇ,
5
முயங்குமதி, பெரும! மயங்கினள் பெரிதே!
புலந்த காதல் பரத்தை புலவி தீராது தலைமகன் வாயில் வேண்டி வந்தான் என்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது. 10

 
161
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
கருங் கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்து நுதல் அழியச் சாஅய்,
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே!
ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாளாய்ச் சொல்லியது. 1

 
162
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே!
இதுவும் அது. 2

 
163
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழித் துவலை ஒலியின் துஞ்சும்
துறைவன் துறந்தென, துறந்து என்
இறை ஏர் முன்கை நீங்கிய, வளையே.
இதுவும் அது. 3

 
164
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணம் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது, அலர் பயந்தன்றே!
தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகியவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4

 
165
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
அறு கழிச் சிறு மீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல் என்
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே!
இதுவும் அது. 5

 
166
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி,
நல்ல ஆயின, நல்லோள் கண்ணே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் பசப்பிற்கு வருந்திய தோழி அவனை இயற்பழித்துக் கூறியது. 6

 
167
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழி இனக் கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி,
நல்கான் ஆயினும், தொல் கேளன்னே.
பரத்தையிற் பிரிந்த தலைமகன் விட, வாயிலாய் வந்தார்க்கு அவன் கொடுமை கூறித் தோழி இயற்பழித்தவழித் தலைமகள் சொல்லியது. 7

 
168
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
துறை படி அம்பி அகமணை ஈனும்
தண்ணம் துறைவன் நல்கின்,
ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே.
நொதுமலர் வரைவு வேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசி அட நிற்புழி, 'இதற்குக் காரணம் என்?' என்று செவிலி வினவ, தோழி அறத்தொடு நின்றது. 8

 
169
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
ஒள் இணர் ஞாழல் முனையின், பொதி அவிழ்
புன்னைஅம் பூஞ் சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்,
5
என் செயப் பசக்கும் தோழி! என் கண்ணே?
காதல் பரத்தையை விட்டு மற்றொருத்தியுடன் ஒழுகாநின்ற தலைமகன் வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தல் வேண்டி, 'நின் கண் பசந்தனகாண்' என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9

 
170
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
'நல்லன்' என்றிஆயின்;
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ?
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி வேறுபட்ட தலைமகள், 'அவற்கு அவ்வாறு நிகழ்ச்சி இல்லை; நம்மேல் அன்புடையன்' என்று தெளிக்கும் தோழிக்குச் சொல்லியது. 10

 
171
திரை இமிழ் இன் இசை அளைஇ, அயலது
முழவு இமிழ் இன் இசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத் தோள்,
ஒண் தொடி, அரிவை என் நெஞ்சு கொண்டோளே!
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் ஆயத்தோடு சொல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது. 1

 
172
ஒண் தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல் ஒலித் திரை போல,
இரவினானும் துயில் அறியேனே!
'கண் துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?' என்று வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது. 2

 
173
இரவினானும் இன் துயில் அறியாது
அரவு உறு துயரம் எய்துப தொண்டித்
தண் நறு நெய்தல் நாறும்
பின் இருங் கூந்தல் அணங்குற்றோரே.
தலைமகன் குறிவழிச் சென்று தலைமகளைக் கண்ட பாங்கன் தன்னுள்ளே சொல்லியது. 3

 
174
அணங்குடைப் பனித் துறைத் தொண்டி அன்ன
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்குஇழை
பொங்கு அரி பரந்த உண்கண்,
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே.
குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டு வந்த பாங்கன், 'அவள் நின்றுழி நின்றாள்' என்று கூறியவழி, ஆண்டுச் செல்லக் கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. 4

 
175
எமக்கு நயந்து அருளினைஆயின், பணைத் தோள்
நல் நுதல் அரிவையொடு மென்மெல இயலி,
வந்திசின் வாழியோ, மடந்தை!
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே.
பாங்கற் கூட்டங் கூடி நீங்கும் தலைமகன், 'இனி வருமிடத்து நின் தோழியோடும் வர வேண்டும்' எனத் தலைமகட்குச் சொல்லியது. 5

 
176
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி,
ஐது அமைந்து அகன்ற அல்குல்,
கொய் தளிர் மேனி! கூறுமதி தவறே.
தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழிச் சென்ற தலைமகன், 'இவள் என்னை இவை கோடற்குக் காரணம் என்?' என்று தோழியை வினாவியது. 6

 
177
தவறு இலராயினும், பனிப்ப மன்ற
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங் கோட்டு
முண்டக நறு மலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள் உற்றோரே.
தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழி, 'இவள் என்னை வருத்துதற்குச் செய்த தவறு என்?' என்று வினாய தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 7

 
178
தோளும் கூந்தலும் பல பாராட்டி,
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி அன்ன
எற் கண்டு நயந்து நீ நல்காக்காலே?
தலைமகன் தோழியை இரந்து குறையுறுவான் சொல்லியது. 8

 
179
நல்குமதி, வாழியோ! நளி நீர்ச் சேர்ப்ப!
அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும்
இன் ஒலித் தொண்டி அற்றே,
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே.
குறியிடத்து வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது.

 
180
சிறு நணி வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறை தபு முது குருகு இருக்கும்
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
தாழ்த்து வரையக் கருதிய தலைமகனைத் தோழி நெருங்கி, 'கடிதின் வரைய வேண்டும்' எனச் சொல்லியது. 10

 
181
நெய்தல் உண்கண், நேர் இறைப் பணைத் தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம்
துறை கெழு கொண்கன் நல்கின்,
5
உறைவு இனிது, அம்ம! இவ் அழுங்கல் ஊரே.
'இக் களவொழுக்கம் நெடிது சொல்லின், இவ் ஊர்க்கண் அலர் பிறக்கும்' என்று அஞ்சியிருந்த தலைவி, 'தலைமகன் வரைந்து கொள்ளத் துணிந்தான்' என்று கூறிய தோழிக்குச் சொல்லியது. 1

 
182
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக்
கை புனை நறுந் தார் கமழும் மார்பன்
அருந் திறல் கடவுள் அல்லன்
பெருந் துறைக் கண்டு, இவள் அணங்கியோனே.
தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தால் ஆயிற்று' எனத் தமர் நினைந்துழி, தோழி அறத்தொடு நின்றது. 2

 
183
[கணங்கொள் அருவிக் கான் கெழு நாடன்
குறும்பொறை நாடன், நல்வயல் ஊரன்,]
தண் கடல் சேர்ப்பன் பிரிந்தென, பண்டையின்
கடும் பகல் வருதி கையறு மாலை!
5
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும், களைஞரோ இலரே.
வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது. (முதலிரண்டு அடிகள் சில பிரதிகளில் காணப்படுகின்றன.) 3

 
184
நெய்தல் இருங் கழி நெய்தல் நீக்கி
மீன் உண் குருகினம் கானல் அல்கும்
கடல் அணிந்தன்று, அவர் ஊரே;
கடலினும் பெரிது, எமக்கு அவருடை நட்பே.
வாயில் வேண்டி வந்தார் தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4

 
185
அலங்குஇதழ் நெய்தல் கொற்கை முன்துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்,
அரம் போழ் அவ் வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியளே.
'ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?' என வினவிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 5

 
186
நாரை நல் இனம் கடுப்ப, மகளிர்
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ!
'பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத் துறைப்
பல்கால் வரூஉம் தேர்' என,
5
'செல்லாதீமோ' என்றனள், யாயே.
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயது. 6

 
187
நொதுமலாளர் கொள்ளார் இவையே;
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும்
நெய்தல்அம் பகைத்தழைப் பாவை புனையார்;
உடலகம் கொள்வோர் இன்மையின்,
5
தொடலைக்கு உற்ற சில பூவினரே.
தோழி கையுறை மறுத்தது. 7

 
188
இருங் கழிச் சேயிறா இனப் புள் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கைஅம் பெருந் துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகை பெரிது உடைய, காதலி கண்ணே!
விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன் தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக் கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 8

 
189
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென,
நல்லஆயின தோழி! என் கண்ணே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவான் வந்துழிக் கண்டு உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் என்?' என்று வினாவிய தலைவிக்குத் சொல்லியது. 9

 
190
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்ற எம்
பல் இதழ் உண்கண் பனி செய்தோனே.
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

 
191
கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை,
கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல்,
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள்.
வரையர மகளிரின் அரியள் என்
5
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.
'நின்னால் காணப்பட்டவள் எவ்விடத்து எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது. 1

 
192
கோடு புலம் கொட்ப, கடல் எழுந்து முழங்க,
பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன,
வீங்கின மாதோ தோழி! என் வளையே!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குத் சொல்லியது. 2

 
193
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்
துறை கெழு கொண்க! நீ தந்த
அறைபுனல் வால் வளை நல்லவோ தாமே?
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் தலைமகட்கு வளைகொண்டு வந்து கொடுத்துழி, 'பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலன் உடையவோ இவை?' எனத் தலைமகள் மெலிவு சொல்லித் தோழி வரைவுகடாயது. 3

 
194
கடற் கோடு அறுத்த, அரம் போழ் அவ் வளை
ஒண் தொடி மடவரல் கண்டிகும்; கொண்க!
நல் நுதல் இன்று மால் செய்தென,
கொன் ஒன்று கடுத்தனள், அன்னையது நிலையே.
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு மனைக்கண் நிகழ்ந்தது கூறி, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. 4

 
195
வளை படு முத்தம் பரதவர் பகரும்
கடல் கெழு கொண்கன் காதல் மட மகள்
கெடல் அருந் துயரம் நல்கி,
படல் இன் பாயல் வௌவியோளே.
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் தனித்து உறைய ஆற்றானாய்ச் சொல்லியது. 5

 
196
கோடு ஈர் எல் வளை, கொழும் பல் கூந்தல்,
ஆய் தொடி, மடவரல் வேண்டுதிஆயின்
தெண் கழிச் சேயிறாப் படூஉம்
தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ.
குறை மறுக்கப்பட்ட தலைமகன் பின்னும் குறைவேண்டியவழித் தோழி சொல்லியது. 6

 
197
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி,
முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே
புலம்பு கொள் மாலை மறைய
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது. 7

 
198
வளை அணி முன்கை, வால் எயிற்று அமர் நகை,
இளையர் ஆடும் தளை அவிழ் கானல்,
குறுந் துறை வினவி நின்ற
நெடுந் தோள் அண்ணல் கண்டிகும், யாமே.
பரத்தையர் மனைக்கண் பல் நாள் தங்கி, பின்பு ஆற்றாமையே வாயிலாக வந்த தலைமகனை எதிர்ப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியது. 8

 
199
கானல்அம் பெருந் துறைக் கலிதிரை திளைக்கும்
வான் உயர் நெடு மணல் ஏறி, ஆனாது,
காண்கம் வம்மோ தோழி!
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே!
தலைமகன் ஒருவழித் தணந்துழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியது. 9

 
200
இலங்கு வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவின,
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே;
விலங்கு அரி நெடுங் கண் ஞெகிழ்மதி;
நலம் கவர் பசலையை நகுகம் நாமே!
உடன்போக்குத் துணிந்தவழி, அதற்கு இரவின்கண் தலைமகன் வந்தது அறிந்த தோழி தலைமகளைப் பாயல் உணர்த்திச் சொல்லியது. 10

 
மேல்