விறலி ஆற்றுப்படை 


40.கொடைச் சிறப்பு

போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅலியரோ, பெரும! நின் தானை!
இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉ,
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப,
காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல்  
5
வந்து இறைகொண்டன்று, தானை: 'அந்தில்,
களைநர் யார் இனிப் பிறர்?' எனப் பேணி,
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க,
ஒன்னார் தேய, பூ மலைந்து உரைஇ,
வெண் தோடு நிரைஇய வேந்துடை அருஞ் சமம்
10
கொன்று புறம்பெற்று, மன்பதை நிரப்பி,
வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
பொன்அம் கண்ணி, பொலந் தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த
15
தார் மிகு மைந்தின், நார்முடிச் சேரல்!
புன் கால் உன்னம் சாய, தெண் கண்
வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்ப,
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து,
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே:
20
செல்லாயோதில், சில் வளை விறலி!
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து,
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப,
பாணர் பைம் பூ மலைய, இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து,
25
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த,
தோட்டி நீவாது, தொடி சேர்பு நின்று,
பாகர் ஏவலின், ஒண் பொறி பிசிர,
காடு தலைக் கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு, மரீஇய மைந்தின்,
30
தொழில் புகல் யானை நல்குவன், பலவே.

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:நாடு காண் அவிர் சுடர் 
உரை
 

49.மன்னவனது வரையா ஈகை

யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின்,
துயலும் கோதைத் துளங்கு இயல் விறலியர்!
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்!
களிறு பரந்து இயல, கடு மா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப;
5
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந் தார்,
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,
மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி,
நெய்த்தோர் தொட்ட செங் கை மறவர்  
10
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி,
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக,
படு பிணம் பிறங்க, பாழ் பல செய்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப,
வளன் அற, நிகழ்ந்து வாழுநர் பலர் பட,
15
கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த
பெருஞ் சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே.

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:செங் கை மறவர்
உரை
 

57.வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன்
    கூறுதல்

ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப,
குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,
துணங்கை ஆடிய வலம் படு கோமான்:
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்
5
செல்லாமோதில்- சில் வளை விறலி!-
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி,
குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி;
இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த,
10
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை,
ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்,
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே?
15

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:சில் வளை விறலி  
உரை
 

60.மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும்
   கூறுதல்

கொலை வினை மேவற்றுத் தானை; தானே
இகல் வினை மேவலன்; தண்டாது வீசும்:
செல்லாமோதில், பாண்மகள்! காணியர்-
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது,
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி   
5
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்,
மறாஅ விளையுள் அறாஅ யாணர்,
தொடை மடி களைந்த சிலையுடை மறவர்
பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி,  
10
வரும் கடல் ஊதையின் பனிக்கும்,
துவ்வா நறவின் சாய் இனத்தானே.

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:மரம் படு தீம் கனி   
உரை
 

78.வென்றிச் சிறப்பு

வலம் படு முரசின் இலங்குவன விழூஉம்
அவ் வெள் அருவி உவ் வரையதுவே
சில் வளை விறலி! செல்குவை ஆயின்,
வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து,
மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி,
5
கிளி கடி மேவலர் புறவுதொறும் நுவல,
பல் பயன் நிலைஇய கடறுடை வைப்பின்,
வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்
வில் பயில் இறும்பின், தகடூர் நூறி,
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர்
10
ஓடுறு கடு முரண் துமியச் சென்று,
வெம் முனை தபுத்த காலை, தம் நாட்டு
யாடு பரந்தன்ன மாவின்,
ஆ பரந்தன்ன யானையோன் குன்றே.

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:பிறழ நோக்கு இயவர்   
உரை
 

87.மன்னவன் அருட் சிறப்பு

சென்மோ, பாடினி! நன் கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து,
தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல்
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே.
5

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெண் தலைச் செம் புனல்
உரை