அரு மணி அர வழங்கும் - அரிய மணியினையுடைய பாம்புகள் செல்லும் ; பெரு மலை பெருந் தெய்வத்து - பெரிய இமயமாகிய பெரிய கடவுள்மலையும் ; வளை நரலும் பனிப் பௌவம் - சங்க முழங்கும் குளிர்ந்த தென் கடலும் ; குண குட கடலோடு- கீழ்க்கடலும் மேலைக் கடலும் ஆகிய ; ஆயிடை - அந்த நான்கு எல்லைக் கிடைப்பட்ட நிலத்து வாழும் அரசரும் பிறசான்றோரும்; மணந்த பந்தர்-கூடியிருந்த பந்தரின்கண்ணே ; அந்தரம் வேய்ந்து - மேலிடத்தே நெய்தல் மாலைகளால் அலங்கரித்தலால் ; வன் பிணியவிழ்ந்த கண்போல் நெய்தல் - வளவிய அரும்பவிழ்ந்த கண் போன்ற அந் நெய்தல் மலர்கள் ; நனை யுறு நறவின் - தேன் பொருந்திய நறவம் பூக்களோடு ; நாகு உடன் கமழ - புன்னையும் உடன் மணம் கமழ; சுடர் நுதல் மட நோக்கின் - ஒளி திகழும் நெற்றியினையும் மடப்பம் பொருந்திய பார்வையினையும்; வாள் நகை இலங்கு எயிற்று - மிக்க ஒளி விளங்கும் பற்களையும்; அமிழ்து பொதி துவர் வாய் - அமுதம் போன்ற சொற்களைச் சொல்லும் சிவந்த வாயினையும் ; அசை நடை- அசைந்த நடையினையுமுடைய; விறலியர் - விறலிகளின் ; பாடல் சான்று நீடினை உறைதலின் - பாடல்களை நிரம்ப வேற்று விரும்பி நீட்டித் திருத்தலாலே; வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் - வெள்ளிய வேலேந்திய அண்ணலாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சிற்றின்பத் துறையில் எளியன் போலும்; என - என்று; நின் உணராதோர் நின் இயல்பை யுணராத பிறர்; உள்ளுவர் கொல்லோ ; நினைப்பார்களோ எ - று. மடமகள் வெறியுறு நுடக்கம் போலத் தோன்றி அர வழங்கும் பெருமலைப் பெருந் தெய்வமும் பனிப் பௌவமும் குண குட கடலும் ஆயிடை மணந்த பந்தரின்கண் நெய்தல் நறவுடன் கமழ, விறலியர் பாடல் சான்று நீடினை யுறைதலின், நின் உணராதோர், அண்ணல் மெல்லியன் போலும் என உள்ளுவர் கொல்லோ; உள்ளுவராயின் அவர்க்கென்று தெளிய இனிக் கூறுவேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க. நுதலும், நோக்கும் எயிறும் துவர்வாயும் நடையுமுடைய விறலியர் என இயையும். பெருமலையாகிய பெருந் தெய்வத்து என இயைக்க. உலகத்து மலைகளெல்லாவற்றினும் மிக்க உயர்ச்சி, திண்மை, அகலம் முதலியவற்றால் ஒப்புயவர்வற்ற பெருமை யுடைமைபற்றி, இமயம் “பெருமலை” யெனப்பட்டது. தேவர்கட்குத் தேவனாகிய கண்ணுத லண்ணல் வீற்றிருக்கும் பெருமையும் தெய்வத்தன்மையும் உடைமையால் மலையாகிய பெருந்தெய்வம் என்பாராயினர். தெய்வத்து, பௌவத்து என்புழி நின்ற அத்துச்சாரியை அல்வழிக்கண் வந்து கட்டுரைச் சுவை பயந்து நின்றன. பழையவுரைகாரரும், “அரவழங்கும் பெருமலைப் பெருந் தெய்வம் என மாறிக் கூட்டுக” என்றும், “பெருமலை இமயம்” என்றும், “குண குட கடல் எனக் கிழக்கும் மேற்கும் எல்லை பின் கூறுகின்ற மையான், வளை நரலும் பனிப் பௌவம் என்றது தென் னெல்லையாம்” என்றும் “தெய்வத்து, பௌவத்து என்னும் அத்துக்கள் ஈண்டுச் சாரியைப் பொருண்மையைச் செய்யாமையின் அசைநிலை யெனப்படும்” என்றும் கூறுவர். “சாரியையாவது சொல் தொடர்ந்து செல்லும் நெறிக்கண் நின்று அதற்குப் பற்றுக் கோடாகச் சிறிது பொருள் |