பக்கம் எண் :

287

பயந்தும்     பயவாததுமாய்  நிற்பது”  (சிலப். பதிக. 61 உரை)  என
அடியார்க்கு  நல்லார்  கூறுதலால், ஈண்டுப் பொருள் பயவாது நிற்கும்
அத்துச்சாரியையெனக் கொள்ளப்பட்டதென அறிக.
  

தாழ்ந்தும்     நிமிர்ந்தும் உலவியும் அசைந்தும் நடிக்கும் சாலினி,
தெய்வமருள்   கொண்டு  அசைந்தும்  நடுங்கியும்  ஆடுவது  பாம்பு
படமெடுத்து  அசைந்தாடுதற்கு  உவமமாதலின்,  “வெறியுறு  நுடக்கம்
போலத்  தோன்றி  அரவழங்கும்”  என்றார். பாம்புமிழ் மணி திகழும்
கதிரொளி  இடந்தொறும் பரந்து வீசுதலால், “வயின் வயின் விலங்கும்
அருமணி”   என்றார்.   விலங்குதல்,  குறுக்கிட்  டொளிர்தல். அரா
வென்பது  அர வெனக் குறுகிற்று. வழங்குதல், ஈண்டு ஆடுதல்மேற்று.
வெறியுறு    நுடக்க    மென்றதற்கு,    “இயல்பாக  நுடங்கலின்றித்
தெய்வமேறிய  விகாரத்தால் நுடங்குதல்” என்று பழையவுரை கூறுதல்
காண்க. இயலுதல், உலாவுதல், ஒல்குதல், அசைதல்.
  

குண குட கடலோடு என்புழி, எண்ணொடு நீண்டது. ஆயிடை, அவ்
வெல்லைகட்கு    இடைநிலத்தில்.   பழையவுரைகாரரும்,  “ஆயிடை
யென்றது அவற்றின் நடு வென்றவா” றென்றும், “அவ்வென்னும் சுட்டு
முதல் வகரவீற்றுப் பெயர் ஆயிடை யென முடிந்த” தென்றும் கூறுதல்
காண்க.   அவ்   இடை   என்பது   ஆறாம்வேற்றுமைத்  தொகைப்
பொருட்டாயினும்,     “நான்கனுருபின்     தொன்னெறி     மரபின்
தோன்றலாறே”  (வேற்.  மயங். 27) என்பதனால் அவ்வெல்லைக்கென
வுரைக்கப்பட்டது.  இடை  யென்பது  ஆகுபெயரால் ஆண்டு வாழும்
வேந்தரையும் பிற சான்றோரையும் குறித்து நின்றது.
  

பந்தர் அந்தரம் - பந்தரின் உள் வெளி. வேய்ந்தென்பது காரணப்
பொருட்டு.  வேய  வெனத்  திரிப்பர்  பழையவுரைகாரர், “கண்போல்
நெய்தல்”  எனப் பின்னே கூறுதலின், “அந்தரம் வேய்ந்து” எனக்கூறி
யொழிந்தார். நெய்தலும் நறவம் பூவும் விரவித் தொடுத்த மாலைகளால்
பந்தர்  புனையப்பட்டமை  தோன்ற,  “நெய்தல்  நனையுறு  நறவின்
நாகுடன்  கமழ” என்றார். நெய்தற் பூவைப்போல நறவம்பூவும் மகளிர்
கண்போல்வ   தாகலின்,  “கண்போல்  நெய்தல்  நனையுறு  நறவின்
நாகுடன் கமழ” என்றார்; நறவம் பூ மகளி்ர் கண்ணிற் குவமையாதலை
“நறவின்,  சேயித ழனைய வாகிக் குவளை, மாயிதழ் புரையு மலிர்கொ
ளீரிமை”  (அகம். 19) என வருதலா லறிக. நாகம், நாகெனக் குறைந்து
நின்றது. பழையவுரைகாரர் “நறவி னொடு என ஒடு விரிக்க” என்பர்.
  

அரசன்     முன்  ஆடியும்  பாடியும்  இன்புறுத்தும்  விறலியர்,
அவற்றிற்கேற்ப  மெய்யழகும்  நன்குடைய ரென்பது தோன்ற, நுதலும்
நோக்கும்  எயிறும்  பிறவும்  எடுத்தோதினார். அமிழ்து பொதி துவர்
வாய்  என்புழி,  அமிழ்து  அவர்  வாயிலூறும் தீ நீர் என்பாருமுளர்.
அவர்     பாடும்     பாட்டின்பத்தில்     தோய்ந்து   பேரீடுபட்டு
அமைந்திருந்தமை  தோன்றப்  “பாடல்  சான்று”  என்றும்,  நீட்டித்
துறைதலால்  அரசன்  உள்ளத்தில்  காமவேட்கை  யெழுமென் றஞ்சி,
“நீடினை   யுறைதலின்”   என்றும்,   அஃது   ஏனை   வேந்தர்க்கு
எள்ளுரையாமென்று  தெருட்டுவார், “வெள்வே லண்ணல் மெல்லியன்
போன்மென,  வுள்ளுவர்  கொல்லோ”  என்றும், மெல்லியன் போலத்
தோன்றினும்  உரனும்  பெருமையும்  நீ  சிறப்ப வுடையை யென்பது
நின்னை யுணர்ந்த எம்போலியர் நன்கறிவர், பிறரறியார் என்பார்,