பக்கம் எண் :

289

இதனால்,   சிறப்புடைய முடிவேந்தர்களான சோழ பாண்டியராகிய
பாம்புகளின்   மிடல்  தபுத்தற்கண்,  இச்  சேரமான்  பெருஞ்சினத்த
புயலேறனையன்   எனச்   சிறப்பித்தவாறாயிற்று.  ஆகவே,  இவனது
ஒளியும்    ஆணையும்   கேட்டு   அவர்கள்   அஞ்சி   யொடுங்கி
யிருந்தமையும் ஓராற்றால் உணர்த்தியவாறுமாயிற்று.
  

29 - 30. தாங்குநர்....................வாழ்நர்.  

உரை :  நின் படை வழி வாழ்நர் - நின்  படையிடத்தே யிருந்து
போர்  புகன்று வாழும் வீரர் ; தாங்குநர் - தாம் மேற்  செல்லுமிடத்து
எதிரூன்றும்   பகைவருடைய   ;   தடக்   கை  யானை  -  பெரிய
கையையுடைய   யானையின்   ;   தொடிக்   கோடு      துமிக்கும்-
தொடியணிந்த  கொம்பினை  ஒரு வீச்சிலே எறிந்தழிக்கும் ; எஃகுடை
வலத்தர் - வாளையுடைய வெற்றி வீரராவர் எ - று.
  

போருடற்றிப்     பெறும் புகழ் பற்றுக்கோடாகப்   படை வீரருள்
ஒருவராய்   இருந்து   வாழ்கின்றன   ரென்பார்,  சேரமான்  வீரரை
“நின்படை  வழி  வாழ்நர்”  என்றார்;  எனவே,  அவர், “போரெனிற்
புகலும்  புனை கழன் மறவர்” (புறம். 31) என்றவாறாயிற்று.  தாங்குதல்,
எதிர்த்தல்;    மேற்செல்லா    வகையிற்றடுத்தலுமாம்.   “வருவிசைப்
புனலைக்  கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை” (தொல். பொ.
புறத். 8) என்றாற் போல. தாங்குவோர் படையினுள் யானைப்படையை
விதந்தோனினார்.    நால்வகைப்    படையினுள்  யானைப்படையை
சிறந்தமைபற்றி  ;  “யானையுடைய  படை  காண்டல்  முன்னினிதே”
(இனிய.  5)  என்று  சான்றோர்  கூறுதல் காண்க. “தடக்கை யானை”
யென்றது,  அதன் கோட்டின் இயற்கை வன்மை எடுத்துரைத்தவாறாம்.
அதற்குச்  செயற்கையாகவும்  வலியூட்டப்பெற்றமை  தோன்ற,  பூண்
அணிந்திருத்தல் கூறுவார், “தொடிக்கோடு” என்றும், இருவகையானும்
வலி   பெரிதுடைய   தாயினும்  படை  வாழ்நரின்  வாட்படை அக்
கோட்டினை  மிக எளிதில் துண்டித் தொழிப்பது தோன்ற, “துமிக்கும்
எஃகுடை  வலத்தர்” என்றார். எஃகு, வாள், வலம், வெற்றி, எஃகுடை
வலத்தரென்றற்கு, வலக் கையில் வாளேந்தியவர் என்றுமாம். வீரர்க்கு
யானையை   யெறிதலிலே   வேட்கை  மிகுதியாதல்  பற்றி, அதனை
எடுத்துரைத்தா ரென்றலுமமையும்.
  

31 - 37. மறங்கெழு...............செருவத்தானே.  

உரை :   போந்தை  வெண்டோடு    புனைந்து  -   பனையின்
வெண்மையான  தோடுகளாற்  செய்யப்பட்டு; நிறம் பெயர் - பகைவர்
உடற்  குருதி  பட்டு  நிறம்  வேறு பட்ட ; மறம் கெழுகண்ணி ; வீரர்
அணிந்துள்ள  கண்ணியை  ;  பருந்து  ஊறளப்ப  பருந்துகள்  ஊன்
துண்டமெனப்   பிறழவுணர்ந்து   தாம்  உற்று  அதனைக்  கொத்திக்
கொண்டேகற்குரிய  அளவினை நோக்கியிருப்ப ; தூக்கணை  கிழித்த -
பகைவர் எறியும் அம்புகள் பாய்தலால் கிழிந்த ; மாக்கண் தண்ணுமை
- கரிய கண்ணையுடைய தண்ணுமையானது;