பக்கம் எண் :

290

கைவல்  இளையர் கையலை   அழுங்க - இசைக்கும் தொழில் வல்ல
இளையவர்கள்  கையால்  அறையப்படுதலின்றியொழிய  ;   மாற்றரும்
சீற்றத்து  -  மாற்ற முடியாத சினத்தை யுடைய ; மா இரும்   கூற்றம்-
கரிய பெரிய கூற்றுவன்; வலை விரித்தன்ன நோக்கலை - உயிர்களைக்
கவரும்    தன்    பார்வையாகிய    வலையை    விரித்தாற்போன்ற
பார்வையினையுடையை    ;    செருவத்தான்   -   போர்க்களத்தே
அப்பார்வைக்குட்பட்ட பகைவர் உயிர் கவரப்படுதலால்;  நெடுந்தகை-
நெடுந்தகையே;    கடியை    -   அப்பகைவர்க்குப்   பேரச்சத்தைச்
செய்கின்றாய் எ - று.
  

சேரர்க்குரிய     அடையாளப் பூவாதலின், பனையினது வெள்ளிய
தோட்டாற்  கண்ணி  செய்து  தலையில்  அணிந்திருந்தமை தோன்ற,
“போந்தை வெண்டோடு புனைந்து” என்றார். தோடு, ஈண்டு வெள்ளிய
குருத்தோலை   மேற்று.  பகைவரைக்  கொல்லுதலால்  அவர் குருதி
தோய்ந்து  நிறம்  சிவந்து  தோன்றுதல் பற்றி, “நிறம் பெயர் கண்ணி”
யென்றும்,  அதனால்  அக்கண்ணி  ஊன்தசை  போலத் தோன்றவே
வானத்திற்   பறக்கும்  பருந்து  அதனைக்  கவர்தற்குப்  பார்க்கின்ற
தென்பார்,  “பருந்தூறளப்ப”  என்றார். உறுதல், ஊறு என முதனிலை
திரிந்து   தொழிற்பெய   ராயிற்று.   அளத்தல்,  ஆராய்தல்,  “நிறம்
பெயர்தல்  உதிரத்தால்  நிறம்  பெயர்த”  லென்றும்,   “ஊறளத்தல்-
உறுதற்கு ஆராய்தல்” என்றும் பழையவுரைகாரர் கூறுதல் காண்க.
  

எத்துணை    வன்மை யுடைய ராயினும், தண்ணுமை இசைப்போர்,
அது  கண்  கிழிந்தவழி இசைத்தல் கூடாமையின், “கைவல் இளையர்
கையலை யழுங்க” என்றார். கையலை, கையால் அறைந்து இசைத்தல்,
அத்தண்ணுமை    கண்   கிழிந்ததற்குக்   காரணம்   இஃதென்பார்,
“தூக்கணை   கிழித்த   மாக்கண்   தண்ணுமை”  என்றார். தூகணை
எனற்பாலது   தூக்கணையென   வந்தது.   தூவென்பது  ஊனையும்
குறிக்குமாகலின்,  ஊன் படிந்த கணை யென்றுமாம். கையலை யழுங்க
என்பது     எழுவாயும்     பயனிலையுமா     யியைந்து     ஒரு
சொன்னீர்மைப்பட்டு,     தண்ணுமை    யென்பதற்கு    முடிபாயிற்
றென்பாராய்ப்   பழையவுரைகாரர்,   “கையலை   யழுங்க  என்னும்
எழுவாயையும்   பயனிலையையும்  ஒரு  சொல்  நீர்மைப்  படுத்தித்
தண்ணுமை  யென்னும்  எழுவாய்க்குப்  பயனிலை  யாக்குக” என்பர்.
தானைத் தலைவர் குறிக்கும் ஏவலை இத்தண்ணுமை முழக்கித் தானை
வீரர்க்குத் தெரிவித்துப் பகைவரை இடமறிந்து தாக்கச் செய்தல் பற்றிப்
பகைவர்  அதன்  கண்ணைத் தம் அம்பு செலுத்திக் கிழிப்பவாதலின்,
“தூக்கணை  கிழித்த  மாக்கண்  தண்ணுமை”  என்றார்  என அறிக.
“தழீஇந்தாம்     என்னத்     தண்ணுமை,     கழித்தானொள்வாள்
வீழ்ந்தனகளிறே” (புறத். 1409) என வருதல் காண்க.
  

உயிர்     கவர வரும் கூற்றுவனை வேறல்   எத்திறத்தோர்க்கும்
அரிதென்பதுபற்றி  “மாற்றருஞ்  சீற்றத்து மாயிருங் கூற்றம்” என்றார்.
பெரிய  குற்றம்  புரிந்து பேரரசர் சீற்றத்துக்குள்ளாயினார், அக்குற்றம்
புரிந்தோர்  தம்  குற்றமுணர்ந்து  அவ்வரசரை யடிபணிந்து நிற்பரேல்
அச்சீற்றம்   மாற்றப்படும்   ;   கூற்றத்தின்  சீற்றம்  எவ்வாற்றானும்
மாறாமையின்,  “மாற்றருஞ்  சீற்றத்துக்  கூற்ற”  மென்றாரென  வறிக.
“பெரிய தப்புநராயினும் பகைவர், பணிந்து திறை பகரக் கொள்ளுநை”
(பதிற். 17) என்றும், “மெல்ல வந்தென் னல்லடி யுள்ளி,