பக்கம் எண் :

291

ஈயென     விரக்குவராயின்,  முரசு   கெழுதாயத் தரசோ  தஞ்சம்,
இன்னுயிராயினும்  கொடுக்குவென்”  (புறம்.  73) என்றும் கூறுதலால்
அரசர் சீற்றம் மாற்றருஞ் சீற்றமன்மை யுணரப்படும். கூற்றத்தின் சீற்ற
மன்னதன்  றென்பது,  “நேமி  மால்வரைக்  கப்புறம் புகினும், கோள்
வாய்த்துக்  கொட்கும்  கூற்றத்து,  மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே”
(ஆசிரிய  மாலை)  என்று சான்றோர்  கூறுதலா  லறிக. இதுபற்றியே
சான்றோர்   “மருந்தில்   கூற்றத்தருந்தொழி”  லென்றும்,  மாற்றருங்
கூற்றம்” (தொல். புற. 24) என்றும் ஓதுகின்றனர். “மாற்றருஞ் சீற்றத்து
மாய் இருங்கூற்றம் என்பதற்கு, மாற்றற்கில்லாத சீற்றத்தால் உயிர்களை
மாய்க்கும் பெரிய கூற்றென்றலும் ஒன்று.
  

நாளுலந்தாரையன்றிக் கூற்றம் நோக்காமையாலும், அதனால் அதன்
நோக்கிற்பட்டார்  மாய்தல்  ஒருதலை யாதலாலும் “வலை விரித்தன்ன
நோக்கல்”  என்றார்.  வலையிற்பட்டது  தப்பாமை  போலக்  கூற்றின்
நோக்கிற்    பட்டதும்   தப்பாமை   பற்றி,   அதன்   நோக்கத்தை
வலையென்றார்.  அவ்வாறே  இச்சேரலாதனும்,  தன்னால்  செயிர்த்து
நோக்கப்பட்ட  பகை  வீரரை  எஞ்சாமற்  கோறலின், “கூற்றம் வலை
விரித்தன்ன    நோக்கலை”    யென்றும்,    “கடியை   நெடுந்தகை
செருவத்தானே”  யென்றும் கூறினார். கடி, அச்சம். ஒன்னார் உட்கும்
உருவச்  சிறப்புத்  தோன்றக்  “கடியை”  யென்றும், அவர் காண்பது
செருவின்கண்ணே   யாகலின்  “செருவத்தானே”  யென்றும்,  ஏனை
நாட்டார்க்கும்  தன்  அருள்  பெற்று  வாழ்வார்க்கும்  செருநிலத்தும்
இனியனாயொழுகுமாறு  தோன்ற,  “நெடுந்தகை”  என்றும்  கூறினார்.
செரு, செருவமென நின்றது. இனிப் பழைய வுரைகாரர்,
  

“நோக்கென்றது மாற்றார் படையைத் தப்பாமல் ஒன்றாகக் கொல்லக்
கருதின நோக்கென்றவா” றென்பர்.
  

அளப்ப,     அழுங்க     என     நின்ற   செயவெனெச்சங்கள்
நோக்கலையென்னும் குறிப்புவினை கொண்டன.
  

இதுகாறும்   கூறியது, நெடுந்தகை, நீ குடபுல முன்னிப் போந்தைப்
பொழிலணிப்   பொலிதந்து,  பந்தர்  அந்தரம்  வேய்ந்து  நெய்தலும்
நறவமும்  நாகமும்  மணம்  கமழ,  விறலியர் பாடல் சான்று நீடினை
யுறைதலின்,  நின்  உணராதோர், அண்ணல் மெல்லியன் போன்மென
உள்ளுவர்   கொல்லோ   ;  உணர்ந்தோர்,   மெல்லியன்   போலத்
தோன்றினும்,  நீ  பெருஞ்  சினப்  புயலேறனையை ; நின் படைவழி
வாழ்நர்   யானைக்கோடு  துமிக்கும்   எஃகுடை  வலத்தர்  பருந்து
ஊறளப்ப,  தண்ணுமை இளையர் கையலை யழுங்க, நீ கூற்றம் வலை
விரித்தன்ன   நோக்கலை;   செருவத்தின்கண்   கடியை   என்பதை
நன்கறிவர் என வினை முடிவு செய்க.
  

“நீ     குடபுல முன்னிப் போந்தைப்  பொழிலணிப்  பொலிதந்து,
நெய்தல்   நறவினொடு   கமழ,  விறலியரது  பாடல்  சாலப்  புறத்து
வினையின்மையின்  வினோதத்திலே  நீடி  யுறைதலாலே நீ அவ்வாறு
நீடிய   தறியாது   அண்ணல்   மெல்லியன்  போன்மென  நின்னை
யுணராதோர்   உணர்வார்களோ?  நீதான்  அரவோ டொக்கும்  நின்
பகைவரைக்  கடுக  அழிக்க வேண்டும் நிலைமையில் அவ்வரவினைக்
கடுக  அழிக்கும்  உருமேற்றினை  யொப்பை  ;  அவ்வாறு விரையச்
செய்யும் நிலைமைக்கண், நினக்கேற்ப நின் படை வழி வாழுநரும்,