பொறையன் 


73.வென்றிச் சிறப்பு

உரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும்,
பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே!
....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்  
5
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்
.... .... .... .... ... ... ...
மருதம் சான்ற மலர்தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்,   
10
குறும் பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங் கோட்டுக்
கொல்லிப் பொருந! கொடித் தேர்ப் பொறைய! 'நின்
15
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன' எனப் பல் நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார்; 'பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர்கொல்?' என,
ஆங்கும் மதி மருளக் காண்குவல்;
20
'யாங்கு உரைப்பேன்?' என வருந்துவல், யானே.

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம்:ஒழுகு வண்ணம்
தூக்கு:செந்தூக்கு
பெயர்:நிறம் திகழ் பாசிழை   

உரை
 

   

77.படைப் பெருமைச் சிறப்பு

'எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?'
என்றனிர்ஆயின்   ஆறு செல் வம்பலிர்!
மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய,
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை
மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்,
5
பண் அமை தேரும், மாவும், மாக்களும்,
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே;
கந்து கோளீயாது, காழ் பல முருக்கி,
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி,
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர்
10
ஆ பரந்தன்ன செலவின், பல்
யானை காண்பல், அவன் தானையானே.

துறை:உழிஞை அரவம்
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வென்று ஆடு துணங்கை  

உரை
 

   

84.வென்றிச் சிறப்பு

எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும்
போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு,
கார் மழை முழக்கினும், வெளில் பிணி நீவி,
நுதல் அணந்து எழுதரூஉம் தொழில் நவில் யானை,
பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல்,
5
பூழியர் கோவே! பொலந் தேர்ப் பொறைய,
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப!
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா;
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது,
வலியை ஆதல் நற்கு அறிந்தனர்ஆயினும்,  
10
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ, தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல,
உய்தல் யாவது நின் உடற்றியோரே,
வணங்கல் அறியார், உடன்று எழுந்து உரைஇ?
போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல,
15
நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து,
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு,
காஞ்சி சான்ற செருப் பல செய்து, நின்
குவவுக் குரை இருக்கை இனிது கண்டிகுமே
20
காலை, மாரி பெய்து, தொழில் ஆற்றி,
விண்டு முன்னிய புயல் நெடுங் காலை,
கல் சேர்பு மா மழை தலைஇ,
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே!

துறை:வாகை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:தொழில் நவில் யானை

உரை
 

   

86.மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்

'உறல் உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்று, அமர்க் கடந்த வெந் திறல் தடக் கை
வென் வேல் பொறையன்' என்றலின், வெருவர,
வெப்புடை ஆடூஉச் செத்தனென், மன் யான்:
நல் இசை நிலைஇய, நனந் தலை உலகத்து,
5
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்,
பாடுநர் புரவலன், ஆடு நடை அண்ணல்,
கழை நிலை பெறாஅக் குட்டத்துஆயினும்,
புனல் பாய் மகளிர் ஆட, ஒழிந்த
10
பொன் செய் பூங் குழை மீமிசைத் தோன்றும்
சாந்து வரு வானி நீரினும்,
தீம் தண் சாயலன் மன்ற, தானே.

துறை:
செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெந் திறல் தடக்கை

உரை
 

   

87.மன்னவன் அருட் சிறப்பு

சென்மோ, பாடினி! நன் கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து,
தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல்
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே.
5

துறை:விறலி ஆற்றுப்படை
வண்ணமும் தூக்கும்:அது
பெயர்:வெண் தலைச் செம் புனல்

உரை