முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
12.


வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக்
கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே
தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகிர்
5 அரிமான் வழங்குஞ் சாரற் பிறமான்
தோடுகொ ளினநிரை நெஞ்சதிர்ந் தாங்கு
முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது
மாதிரம் பனிக்கு மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற் கினிதுநின் செல்வங் கேட்டொறும்
10 காண்டல் விருப்பொடு கமழுங் குளவி
வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை
அண்ணன் மழகளி றரிஞிமி றோப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல; நீந்தி
வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கற்
15 றொல்பசி யுழந்த பழங்கண் வீழ
எஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தி னிருஞ்சிற கன்ன
20 நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள்
வசையின் மகளிர் வயங்கிழை யணிய
அமர்புமெய் யார்த்த சுற்றமொடு
25
நுதர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே.


     இதுவுமது. பெயர் - மறம்வீங்கு பல்புகழ் (8)

     (ப - ரை) 7. துயிலீயாதென்பது துயிலாதென்னும் வினைத்திரி சொல்; துயிலாமலெனத் திரிக்க; இனித்திரியாது, 'யாறுநீ ரொழுகாது கிடந்தது' என்னும் வழக்குப்போல இடத்து நிகழ்பொருளின்
தொழிலை இடத்திற்கேற்றி, மாதிரமானது அரசு துயிலீயாது பனிக்குமென அம்மாதிரத்தின் வினையொடு முடிப்பினும் அமையும்.

     8. மறம்வீங்கு பல்புகழென்றது அரசர்க்குச் சிறந்த மறப்புகழ்
1மற்றைப் புகழினும் மிக்க பல்புகழென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'மறம்வீங்கு பல்புகழ' என்று
பெயராயிற்று.

     8 - 9. நின் செல்வம் இனிது; யாது இனிதெனிற் பல்புகழ்
கேட்டற்கு இனிதென முடிவுகொள்க.

     9. கேட்டொறு மென்பதற்கு அச்செல்வத்தையென வருவிக்க.

     21. நூலாக்கலிங்கமென்றது ஒருவர் நூலாநூலாகிய பட்டுநூல் முதலாயவற்றாற் செய்த கலிங்கமென்றவாறு.

     நூலாமை யென்னும் தொழில் கலிங்கத்துக்குச் சினையாகிய
நூல் மேலதாலெனின், அச்சினையோடு முதற்குள்ள ஒற்றுமைபற்றிச் சினை வினையை முதல்மேலேற்றி வழுவமைதியாற் கூறினானென்க. இனி நூலாநூற் கலிங்கமென்பான் நூலென்பதனைத் தொகுத்துக்
கூறினானென்பாரும் உளர்.

     25. நுகர்தற்கு இனிது நின் பெருங்கலிமகிழ்வே யென்றது
நின் பெரிய ஆரவாரத்தையுடைய 2ஓலக்கத்துச் செல்கின்ற வினோத
மகிழ்ச்சி அனுபவித்தற்கு இனிதென்றவாறு.

     வேந்தே (3), நின்செல்வம் (9) புகழ் (8) கேட்டற்கினிது (9),
நின் பெருங்கலி மகிழ்வு நுகர்தற்கினிது (25) என வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் அவனது
ஓலக்க வினோதச் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1 - 3. வயவர் வீழ - வீரர்கள் இறந்துபட. வாள்
அரில் மயக்கி - வாள்வீரரது நெருக்கத்தைக் கலக்கி (பதிற். 36 : 6).
இடம் கவர் -தனக்குரிய இடத்தைக் கவர்ந்த. கடும்பின் அரசு -
மந்திரி முதலிய சுற்றத்தையுடைய பகையரசர். பனிப்ப - நடுங்க.
கடம்புமுதல் - கடம்பின் அடிமரத்தை; கடம்பைத் தடிந்தது: பதிற்.
11: 12 - 4, குறிப்புரை.

     மயக்கி, பனிப்ப, தடிந்த வேந்தே.

     4 - 9. தார் பிடரிமயிர் போலும். எருத்து - கழுத்து. வாரல்
நீட்சி. அரிமான் - சிங்கம். பிறமான் - யானை முதலிய வேறு
விலங்கினங்கள். தோடு - தொகுதி. நெடுநகர் - பகைவருடைய
பெரிய நகரங்கள். துயிலீயாது - தூங்காமல்.
மாதிரம் - திசைகளில்.
மறம் வீங்கு பல்புகழ் - வீரத்தின் மிகுதியால் வந்த பல புகழ்.
சேரனுக்குச் சிங்கமும் பகையரசருக்குப் பிற விலங்கினங்களும்
உவமை. மறம் வீங்கு பல் புகழ்: "வென்றிப் பல்புகழ்" (மலைபடு.
544); "மறப்புகழ் நிறைந்த மைந்தினோன்" (புறநா. 290 : 6)

     9 - 10. நின் செல்வத்தைக் கேட்குந்தோறும் அதனைக்
காண்கின்ற விருப்பத்தோடு.

     10 - 13. குளவி - காட்டு மல்லிகையையுடைய. பைம் மயிரும்
நடையும் களிற்றுக்கு அடை. அரி ஞிமிறு - கோடுகளையுடைய
வண்டுகள்; களிறு, பிடியைச் சுற்றிய வண்டுகளை ஓட்டியது.
குளவியையும் பிடிகளையும் உடைய குன்று.

     14 - 20. அவண் - சேரனது முன்னிலையை. இரும்பேரொக்கல்
- வறுமையால் கரிய பெரிய சுற்றத்தார் (சிறுபாண். 139, ந.). ஒக்கலது
பழங்கண் என்க; பழங்கண்-துன்பம். தொல் பசி - தொன்றுதொட்டு
வந்த பசி (பெரும்பாண். 25). எஃகு - இங்கே அரிவாள்;
அரிவாளால் பிளந்து அறுத்த வெள்ளிய நிணத்தோடு சேர்ந்த
காழுவிய துண்டாகிய ஆட்டின் மாமிசம்; மை - ஆடு. வெண்ணெல்
- ஒருவகை நெல். நனை அமை கள்ளின் தேறல் - அரும்பினால்
அமைத்த கள்ளின் தெளிவு. நீர்ப்படு - மழை நீரில் வருந்திய. நிலம்
தின் சிதார் - மண்ணால் அரிக்கப்பட்ட கந்தை. சிதாருக்குப்
பருந்தின் சிறகு உவமை; புறநா. 150: 1 - 2.

     வீழ, மாந்தி, களைந்த பின்றையென்க.

     21. நூலாத நூலா னியன்ற கலிங்கமென ஒற்றுமை நயம்பற்றிச் செயப்படுபொருள் மேல் நின்றது. (தொல். வினை. 37, ந; இ. வி.
243)

     21 - 5. நூலாக்கலிங்கம் - நூற்கப்படாத ‘நூலாலியன்ற
ஆடை ; பட்டாடை. வால் அரைக் கொளீஇ - வெள்ளிய அரையில் உடுத்தி; வெண்மை: இன்மையைக் குறித்தது. வணர் இருங்கதுப்பின் - வளைந்த கரிய கூந்தலையுடைய. மகளிரென்றது விறலியரை.

     விறலியர் உபகாரிகளால் தரப்பெற்ற இழையை அணிதல்:
பொருந. 159-62, குறிப்புரை; மலைபடு. 569 - 70. அமர்பு - மனம்
பொருந்தி. மெய் ஆர்த்த சுற்றம் - உண்மையைத் தம்மிடத்தே
கட்டிய மந்திரி முதலிய சுற்றத்தார். நுகர்தற்கு - கலந்து மகிழ்தற்கு.
சுற்றமொடு மகிழ்வென இயைக்க.

     கொளீஇ, அணிய, மகிழ்வு இனிது என்க.

     (பி - ம்) 5. சோலைப் பிறமான். 11. இழையவாடு நடை.
                                             (2)


     1மற்றைப்புகழ் - கல்வி, ஈகை முதலியவற்றால் வரும் புகழ்.

     2ஓலக்கம் - அரசிருக்கைக்குரிய இடம். செல்கின்ற - நடந்து
வருகின்ற. வினோதம் - பொழுதுபோக்கு.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

2. மறம்வீங்கு பல்புகழ்
 
12.வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக்
கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே
தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகிர்
 
5அரிமான் வழங்குஞ் சாரற் பிறமான்1
தோடுகொ ளினநிரை நெஞ்சதிர்ந் தாங்கு
முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது
மாதிரம் பனிக்கு மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற் கினிதுநின் செல்வங் கேட்டொறும்
 
10காண்டல் விருப்பொடு கமழுங் குளவி
வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை
2
அண்ணன் மழகளி றரிஞிமி றோப்புங்

கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி
வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கல்
 
15.தொல்பசி யுழந்த பழங்கண் வீழ
எஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி
நீர்ப்படு் பருந்தி னீர்ஞ்சிற கன்ன
 
20நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள்
வசையின் மகளிர் வயங்கிழை யணிய
அமர்புமெய் யார்த்த சுற்றமொடு
 
25நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே.
 

 இதுவு மது.

  பெயர்  :  மறம்வீங்கு பல்புகழ்.

 1 - 3 வயவர்............வேந்தே.

உரை : வயவர் வீழ - வீரர்கள் தோற்று நிலத்தே விழுமாறு; வாள்
அரில்  மயக்கி  -  வாட்போரைச்  செய்து;  இடம்  கவர்  கடும்பின்
அவர்தம்  நாட்டைக்  கவர்ந்து கொள்ளும் சுற்றத்தாரையுடைய; அரசு
தலை  பனிப்ப  -  அரசர்கள்  தலைநடுங்கி  வணங்க; கடம்பு முதல்
தடிந்த   -   அவர்தம்   காவல்மரமாகிய   கடம்பினை  அடியோடு
வெட்டியழித்த;    கடும்சினவேந்தே    -   மிக்க   சினத்தையுடைய
சேரவேந்தே;

வயவர், வலிமைப் பொருட்டாய உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயர்.
எனவே,  இவர் தமது வலியாற் பல போர்களைச்செய்து வெற்றி பெற்ற
வீறுடைய ராதல் பெற்றாம். ஆகவே,

இத்தகையாருடன் போருடற்றுவதே ஆண்மைக்குச் சிறப்பாதல்பற்றி,
“வயவர்  வீழ  வாளரில்  மயக்கி”  என எடுத்தோதினார். இருதிறத்து
வீரரும் தம் வாட்படையால் தம் தொழிற்றிறந் தோன்றப்  பொருதலின்,
அப்போரை “வாளரில்” என்றார்; “வாள்மயங்கு கடுந்தார்” (பதிற். 36)
எனப் பிறரும் கூறுதல் காண்க. “இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப”
(புறம்.  8)  எழுந்த தம் வேந்தர்க்குத் துணையாய் மண்ணசையெஞ்சா
மனமாண்புடைய  ராதல்  தோன்ற,  “இடங்கவர்  கடும்பின்” என்றும்,
தாம்  கருதும்  இடம்  கவர்ந்தபின் னல்லது மடங்கா மறமுடைய அக்
கடும்பு சூழவிருந்தும் நின் வலிமிகுதி யுணர்ந்து உளம் தளர்ந்து உடல்
நடுங்கினரென்பார்,  “அரசுதலை பனிப்ப” என்றும், அவர் அன்னராக,
நீ  அவர் தம் காவல் மரத்தைக் கடிந்தனை யென்பார், “கடம்பு முதல்
தடிந்த கடுஞ்சின  வேந்தே”  என்றும்  கூறினார். கடம்புமுதல் தடிந்த
பின்பும்  ஆறாது  முரசுசெய்  தெறிந்த   காலத்தே  தணிந்தமையின்,
“கடுஞ்சின வேந்தே” என   அவன்   சினமிகுதியைச்   சிறப்பித்தார். 
இடங்கவர்  கடும்பு என்பதற்குத்   “தனக்குரிய   இடத்தைக் கவர்ந்த
கடும்பு”  என்று கூறுவாரு  முளர். சேரநாட்டினுட்  கடம்பர் போந்து 
நாடு   கவர்ந்து  கொண்டதாக   வரலாறு  ஒன்றும்   இன்மையின் 
அப்பொருள் சிறக்கு மாறில்லை. 
 

 4 - 9. தாரணி..............இனிது

உரை : தார்   அணி   எருத்தின்  -  பிடரிமயிர்   பொருந்திய
கழுத்தினையும்;    வாரல்    வள்    உகிர்    -    நீண்ட  கூரிய
நகங்களையுமுடைய; அரிமான் வழங்கும் சாரல் - சிங்கவேறு உலாவும்
மலைச்  சரிவிலே;  பிறமான்  - பிற விலங்குகளின்; தோடுகொள் இன
நிரை  இனமினமாய்த்  தொகுதி  கொண்டிருக்கும்  கூட்டம்;  நெஞ்சு
அதிர்ந்தாங்கு  -  நெஞ்சு  நடுக்குற்று  ஒடுங்கியுறைவது போல; முரசு
முழங்கு     நெடுநகர்     -     முரசுகள்     முழங்கும்     தம்
அரண்மனைக்குள்ளேயிருக்கும்;   மாதிரம்   அரசு   துயிலீயாது   -
நாற்றிசையிலும்     வாழும்     அரசர்     நெஞ்சு   துணுக்குற்றுக்
கண்ணுறங்காமல்;  பனிக்கும் நடுங்கச் செய்யும்; நின் மறம் வீங்கு பல்
புகழ்  -  நின்  வீரத்தால்  மிக்கு விரிந்து பலதுறையால் வரும் புகழ்;
கேட்டற்கு இனிது கேட்டற்கு எமக்கு இனிதாயிருந்தது;

தார்,பிடரி மயிர்.கிளியினது கழுத்தின் பிடரிபோல் நீண்டு ஒழுகும்
கீற்றுக்களையும்    இவ்வியைபுபற்றித்   தார்   என்ப;   “செந்தார்ப்
பசுங்கிளியார்”  (சீவக.  1036)  என்று தேவர் கூறுதல் காண்க. வாரல்:
அல்,   சாரியை.   தோடு,  தொகுதி.  பிற  விலங்குகள் தோடுகொள்
இனநிரைய   வாயினும்   அரிமான்  வழங்குவதுபற்றி  நெஞ்சதிர்ந்து
ஒடுங்கியுறைவதுபோல என்ற உவமத்தால் ஆரியரை யலறத் தாக்கியும்
கடற்குட்  சென்று கடம்பெறிந்தும் செருமேம்பட்டு வரும் சேரலாதனது
புகழ்   கேட்கும்   நாற்றிசை  வேந்தரும்  அஞ்சி  நடுங்கித்  தத்தம்
நெடுநகர்க்கண் கண்ணுறக்க மின்றிக் கையற்றுக் கிடந்தமை பெற்றாம்.

(ப - ரை) துயிலீயாது என்றது,  துயில்  ஈயாது  என்று கொண்டு.
மாதிரத்   தரசர்,  மண்ணசையால்  சேரலாதன்  எப்போது  தம்மேல்
வருவனோ என்றஞ்சித் தம் கண்கட்கு உறக்கம் நல்காது, திசைநோக்கி
நெஞ்சு  நடுங்கிக்  கிடக்கச் செய்தது நின் புகழ் என வுரைப்பினுமாம்.
செல்லிட    மெல்லாம்   தன்   மறம்   துணையாகப்   பெரும்புகழ்
எய்தினமையின்,  “மறம்  வீங்கு புகழ்” என்றும், அதுதானும் வெட்சி
முதலாகப்  பல்வேறு  வகையாற் பெறப்படுதலின், “பல்புகழ்” என்றும்,
பலவாயினும்  மறப்புகழ்  என்ற ஒரு பயனையே விளைவித்தமையின்,
“இனிது” என ஒருமை முடிபு கொடுத்தும் கூறினார்.

(ப - ரை) கல்வி,  செல்வம்  முதலியவற்றா  லெய்தும்  பல்புகழ்
மறமொன்றினாலே இச் சேரலாதன் பெறுதலின் “மறம் வீங்கு பல்புகழ்”
என்று இதற்குப் பெயராயிற் றென்பார் பழையவுரைகாரர். “அரசர்க்குச்
சிறந்த மறப்புகழ்    மற்றைப்  புகழினும்  மிக்க  பல்புகழ்”  என்றும், 
“இச்  சிறப்பானே  இதற்கு  மறம்வீங்கு  பல்புக  ழென்று பெயராயிற்”
றென்றும் கூறினார். 
 

 9 - 14. நின்செல்வம்............ஒக்கல்

உரை : நின்   செல்வம்     கேட்டொறும் - நின்  செல்வத்தைக்
கேள்விப்படுந்தோறும்;    காண்டல்    விருப்பொடு   -   நின்னைக்
காண்டல்வேண்டுமென்  றுந்திய  விருப்பத்தால், வாடாப் பைம்மயிர் -
உதிராத  பசிய மயிரினையும்; இளைய - இளமைத் தன்மைக் கொத்த;
ஆடு  நடை - அசைந்த நடையினையுமுடைய; அண்ணல் மழகளிறு -
பெருமை  பொருந்திய  இளங்களிற்றினை மொய்க்கும்; அரி ஞிமிறு -
வண்டு  ஞிமிறு முதலியவற்றை; கமழும் குளவி - மணங்கமழும் காட்டு
மல்லிகையால்;   ஓப்பும்   -  ஓட்டுகின்ற;  கன்று  புணர்  பிடிய  -
கன்றோடுகூடிய   பிடிகளையுடைய;   குன்று   பல  நீந்தி  வந்து  -
குன்றங்கள்  பலவற்றைக்  கடந்து  வந்து; அவண் இறுத்த இரும் பே
ரொக்கல்  -  தங்குதற்குரிய  அவ்விடத்தே தங்கிய கரிய பெரிய என்
சுற்றத்தார்;

செல்வத்தைப் புகழொடு கூட்டிப் பின் அதனையே வருவித்தலினும்,
அதனையே கேட்டொறும் என்பதற்கு முடிபாக வருவித்தல் சிறப்பாதல்
பற்றி     வேறு    கொள்ளப்பட்டது.    மறம்வீங்கு    பல்புகழைக்
கேட்குந்தோறும்  செல்வமிகுதி  தானே  பெறப்படுதலின்,  அதனைக்
கேட்டொறும்   காண்டல்   வேண்டு   மென்ற  விருப்பெழுந்து என்
சுற்றத்தைத்  துரப்ப  தாயிற் றென்றார். பகைப்புலத்து வென்று பெறும்
செல்வம்    இரவலர்க்    வழங்கப்படுதலின்,    மறப்புகழ்   கேட்ட
இரவலர்க்குக்    காண்டல்   வேட்கை   கிளர்ந்தெழுதலியல்பாதலின்,
“கேட்டொறும்  காண்டல்  விருப்பொடு” என்றார். களிற்றின் இளமைச்
செவ்வி  இனிது தோன்ற, மயிர் வாடாமையும் அசைநடையும் விதந்து,
“வாடாப்  பைம்மயிர்  இளைய  வாடுநடை”  யென்றும், காமச்செவ்வி
தோன்ற,  “அண்ணல்  மழகளிறு”  என்றும்  கூறினார்.  இக்களிற்றின்
பாலொழுகும்   மதநீரை   யுண்டற்கு   மொய்க்கும்   வண்டினத்தை,
“அரிஞிமிறு” என்றார.் அரி, வண்டு, “அரிக்கண மொலிக்கும்” (முருகு
76)  என வருதல் காண்க. ஞிமிறு, வண்டின் வகை. அரிஞிமி றென்றே
கொண்டு,      கோடுகளையுடைய      வண்டெனினு     மமையும்.
இவ்வண்டினத்தை, காதலன்புடைய கன்றைத்  தழீஇச்  செல்லுமிடத்தும்
களிற்றின்பாலுள்ள   கழிகாதலால்,   குளவியைப்   பிடுங்கி  அதனை
யோப்பு  மென்பார்,  “கமழும்  குளவி  யரிஞிமி றோப்பும்” என்றார்.
குளவியாலென   ஆலுருபு   விகாரத்தாற்றொக்கது.  குளவியையுடைய
குன்றென்று  கூறுதலு  முண்டு. பாணர் முதலிய இரவலர் அரசன்பால்
வந்தவிடத்து    அவரனைவரும்    ஒருபுறத்தே   தங்க,   அவருள்
தலைவனாவான்  முதற்கட்  சென்று  அரசன் செவ்வி யறியும் இயல்பு
தோன்ற,  “குன்றுபல  நீந்தி  வந்தவண்  இறுத்த  ஒக்கல்”  என்றும்,
வறுமைத்   துயராலும்,   வழிநடை  வருத்தத்தாலும்  மேனி  வாடிக்
கரிந்திருத்தல்  பற்றியும்,  பலராதல்  பற்றியும்,  “இரும்பே ரொக்கல்”
என்றும் கூறினார்.
 

15 - 25. தொல்பசி...........மகிழ்வே

உரை : தொல்  பசி  யுழந்த   பழங்கண்   வீழ - (என்னுடைய
அவ்வொக்கல்)  நெடுநாட்களாகப்  பசியால் வருந்திய வருத்தம் கெட;
எஃகு போழ்ந்து அறுத்த - அரிவாளாற் பிளந்து அறுக்கப்பட்ட; வால்
நிணக்   கொழுங்குறை   -   வெள்ளிதாகிய   ஊனினது கொழுவிய
இறைச்சியும்;   மை   ஊன்  பெய்த  வெண்ணெல்  வெண்சோறு  -
ஆட்டிறைச்சி  பெய்து  சமைத்த  வெண்ணெல்லின்  வெண்மையான
சோறும்; நனையமை கள்ளின் தேறலொடு மலரரும்பு பெய்து பக்குவம்
செய்யப்பட்ட  கட்டெளிவுடனே;  மாந்தி - உண்டு; நீர்ப்படு பருந்தின்
ஈர்ஞ்சிறகு  அன்ன  -  மழையால்  நனைந்த  பருந்தினுடைய  ஈரிய
சிறகை   யொப்பக்  கிழிந்த;  நிலம்  தின்  சிதாஅர்  -  மண்படிந்து
மாசேறிய  கந்தையாகிய உடையை; களைந்த பின்றை - நீக்கிய பின்பு;
நூலாக்  கலிங்கம் நூற்கப்படாத நூலாகிய பட்டாலியன்ற ஆடை தந்து;
வால்  அரைக்  கொளீஇ  -  வாலிதாக அரையில் உடுத்துக்கொண்டு;
வணர்இருங்  கதுப்பின்  -  (தம்மில்)  கடை  குழன்ற  கூந்தலையும்;
வாங்கு    அமைமென்றோள்    -   வளைந்த   மூங்கில்  போலும்
தோள்களையுமுடைய;  வசையில்  மகளிர்  -  குற்றமில்லாத  மகளிர்;
வயங்கு   இழை  அணிய  -  விளங்குகின்ற  அணிகளை  அணிந்து
கொள்ளவே;  அமர்பு நின்னை மிக விரும்பி; மெய் ஆர்த்தசுற்றமொடு
-   நின்மெய்யோடு   ஆர்க்கப்பட்டாற்போற்சூ   ழவிருக்கும்   நின்
சுற்றத்தாருடன்;  நின்  பெருங்  கலி  மகிழ்வு  - வீற்றிருக்கும் நினது
பெரிய  திருவோலக்க வின்பம்; நுகர்தற்கு இனிது - கண்டு மகிழ்தற்கு
இனிதாக வுளது எ - று.

என் ஒக்கலுற்ற வறுமைத்துன்பம் பன்னெடு நாட்களுக்கு முன்னர்த்
தோன்றி வருத்துவ தென்றற்கு, “தொல்பசி யுழந்த பழங்கண்” என்றும்,
அஃதினித்   தோன்றாவாறு  கெட்டதென்பார்  “வீழ”என்றும்  அதன்
வீழ்ச்சி  நிலை கூறலுற்று, வானிணக் கொழுங்குறையும் வெண் சோறும்
கட்டெளிவும்   உண்டதும்  கூறினார்.  மை  யூன்  -  ஆட்டிறைச்சி.
“மையூன்   மொசித்த   வொக்கல்”   (புறம்.  96)  என்றார்  பிறரும்.
சோற்றோடு  ஊன் கலந்து அட்டுண்டல் பண்டை வழக்கு; “நெய்குய்ய
வூனவின்ற,   பல   சோற்றான்   இன்சுவைய”  (புறம்.  382) என்று
சான்றோர் கூறுதல் காண்க. நனையமை கள்ளின் தேறலாவது, தேனை
மூங்கிலிடத்தே  பெய்து,  அதனுள்  இஞ்சிப்பூ முதலியவற்றை யிட்டுப்
பக்குவம்   செய்து  தெளி்வித்துக்கொள்ளும்  கட்டெளிவு.  “தேறுகள்
நறவுண்டார்”  (கலி. 147) என்றும், “நீடமை விளைந்த தேக்கட்டேறல்”
என்றும்  சான்றோர்  உரைப்பது  காண்க.  மண்மாசு படிந்து கிழிந்து
கந்தையாகிய வுடைக்கு நனைந்த பருந்தின் சிறகு நிகராதலை, “கூதிர்ப்
பருந்தின்  இருஞ்சிற  கன்ன,  பாறிய  சிதாஅரேன்” (புறம் 150) என
ளஆசிரியர்    வன்பரணரும்    கூறுகின்றனர்.    பட்டு,   கையால்
நூற்கப்படாமை    பற்றி,    நூலாநூல்    எனப்பட்டது.   நூலாநூற்
கலிங்கமென்பது  நூலாக்கலிங்க  மெனத்  தொக்கு  முடிதல் தமிழ்மர
பன்மையின்,   அதன்   பொருந்தாமை  கண்டே  பழையவுரைகாரர்,
“தொகுத்துக்  கூறினா   னென்பாரு  முளர்”    என்றார்.   கலிங்க ` 
மெனவே,    அது    நூலானியறல்  பெறப்படுதலாலும்,     நூற்றல்
வினை,  நூற்கே   யுரிய   தாகையாலும்  சினைவினை ஒற்றுமைபற்றி
முதன்மே    னிற்றல்    மரபாதலாலும் பழையவுரைகாரர்  கூறுவது
சிறப்புடைத்தாத         லறிக.       ஒக்கலர்         பொதுவாக 
வூணும்   உடையும்   கொண்டு   இன்புற்றாராக,   அவருள் மகளிர்
அவற்றின்மேலும்  ஒளி  விளங்கும்.  இழைகளைப் பெற்றுச்  சிறந்தன
ரென்பார்,   “மகளிர்   வயங்கிழை   யணிய”  என்றும்,  அவற்றைப்
பெறற்கமைந்த   அவருடைய   உருநலத்தை  “வணரிருங்  கதுப்பின்
வாங்கமை  மென்றோ”  ளென்றும், கற்புநலத்தை, “வசையில் மகளிர்”
என்றும்  கூறினார்.  மாண்புடைய  மகளிர்க்கு  ஆடையும்  அணியும்
இன்றியமையாதன    வாதலின்,    “வயங்கிழை    யணிய”   எனப்
பிரித்தோதினார்.    நின்மறம்    வீங்கு    பல்புகழ்   கேட்டோருள்
பகைவர்க்குப்    பனிப்பும்    நட்டோர்க்குக்   களிப்பும்   பயக்கும்
பான்மைத்தாக,  நின் பெருங்கலி மகிழ்வு, எத்திறத்தோர்க்கும் இன்பம்
பயப்பதென்பார்,    “நுகர்தற்   கினிதுநின்   பெருங்கலி   மகிழ்வே”
யென்றார். உண்ண உணவும் உடுக்க வுடையும் குறைவறப்  பெறுதலின்,
“அமர்பு  நுகர்தற்கினிது”  என்றார். செல்வுழிச் செல்லும் மெய்ந்நிழல்
போல,   அரசன்   மெய்யினைச்   சூழ்  வருதலின்,  “மெய்யார்த்த
சுற்றமொடு”    என்றார்.   சுற்றம்,   அமைச்சர்,   தானைத்தலைவர்
முதலாயினார்.  அவர்  வழிநின்று  அரசு  புரிதலின்,  ஒடு, உயர்பின்
வழித்தாய ஒருவினையொடு.
 

வேந்தே   (3), நின் மறம் வீங்கு பல்புகழ் (8) கேட்டற்  கினிது (9);
பெருங்கலி  மகிழ்வு  நுகர்தற்  கினிது (25) என  வினைமுடிவு செய்க.
புகழையும்  செல்வத்தையும்  பிரித்து  நிறுத்தி,   இனி தென்பதனைத்
தனித்தனிக்  கூட்டி  முடிக்கும்   கருத்தினராதலின், பழையவுரைகாரர்,
“வேந்தே  நின்  செல்வம்  புகழ்  கேட்டற்  கினிது; நின் பெருங்கலி
மகிழ்வு நுகர்தற் கினிதென வினைமுடிவு செய்க” வென்றார்.

“இதனாற் சொல்லியது: அவன் வென்றிச் சிறப்பும் அவனது ஓலக்க
வினோதச்  சிறப்பும் உடன் கூறியவா றாயிற்று”  என்பது பழையவுரை.
நின்  மறம்வீங்கு  பல்புகழ்  என்றது  வென்றிச்  சிறப்பு;  பெருங்கலி
மகிழ்வு ஓலக்க வினோதச்சிறப்பு என அறிக.
 


1. சோலைப்பிறமான் - பாடம்
2. ரிழைய வாடுநடை - பாடம்


 மேல்மூலம்