முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
14. நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரி யையே
நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை
 5 போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
அக்குர னனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ டழித்த செருப்புகன் முன்ப
 10 கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து
நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பன்
 15 ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ
பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படையே ருழவ பாடினி வேந்தே
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின்
 20 முன்றிணை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே.

     துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும், சொற்சீர்வண்ணமும். தூக்கு-செந்தூக்கு.
பெயர் - சான்றோர் மெய்ம்மறை (12)

     (ப - ரை) 1. பூதங்கள் ஐந்தையும் எண்ணாது தீயை
ஒழித்தது மேல் விளக்கத்துக்கு உவமமாக (4) எண்ணுகின்றவற்றோடு
கூட்டவேண்டி யென்பது.

     3. ஈண்டுக் கோளென்றது விளக்கமில்லா இராகுகேதுவென்னும்
இரண்டும் நீக்கி நின்ற ஏழினும், சிறப்புப்பற்றி வேறு எண்ணப்பட்ட
திங்கள் ஞாயிறென்னும் இரண்டும் நீக்கி, நின்ற ஐந்தையுமென்பது.

     4. ஐந்தென்று தொகை கூறியது நாள்கோளென்னும்
அவற்றைத் 1தொகைக்கூற்றின் ஒரோவொன்றாக்க வென்பது.

     11. எழுமுடியென்பது ஏழு அரசரை வென்று அவர்கள்
ஏழுமுடியானுஞ் செய்ததோர் ஆரமாம்.

     12. நோன்புரித் தடக்கையென்றது வலி 2பொருந்துதலையுடைய
தடக்கையென்றவாறு.

     ஈண்டுச் சான்றோரென்பது போரில் அமைதியுடைய வீரரை.
மெய்ம்மறை-மெய்புகு கருவி; மெய்ம்மறையென்றது
அச்சான்றோர்க்குமெய்புகு கருவிபோலப் போரிற் புக்கால் வலியாய்
முன்னிற்றலின்.

     இச்சிறப்பு நோக்கி இதற்கு, 'சான்றோர் மெய்ம்மறை' என்று
பெயராயிற்று.

     13. வானுறைமகளிர் நலன் இகல் கொள்ளுமென்றது வானர
மகளிர் அழகிற்கு அவளையொப்பேன் யானே யானேயென்று
தங்களில் மாறுகொள்ளுமென்றவாறு.

     15. ஒடுங்கீரோதி - 3சுருள்.

     நிலமுதற் பூதம் நான்கும்போலப் (1) பெருமை அளத்த லரியை
(2); நாண்மீன்முதல் (3) ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை (4); கை
வண்மையால் அக்குரனென்பவனை யொப்பை (7); அன்றி முன்ப (9),
நின்வலி இருக்கும்படி சொல்லிற் கூற்று வெகுண்டுவரினும் அதனையும்
மாற்றும் வலியையுடையை (10); ஆதலாற் சான்றோர் மெய்ம்மறை (12),
கொடுங்குழை கணவ (15), படையேருழவ, பாடினி வேந்தே (17),
நின்குடி முன் முதல்வர்போல நின்று (20) நல்லிசையை நிலைப்பித்து
(21) இவ்வுலகத்தோடு கூடக் கெடாதொழிகையாக (22) என
வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் பல குணங்களையும் ஆற்றலையும்
ஒருங்கு கூறி வாழ்த்தியவாறாயிற்று.

     'அளப்பரியையே' (2) எனச் சொற்சீரடி வந்தமையாற்
4சொற்சீர் வண்ணமுமாயிற்று; ஈண்டுச் சொற்சீரென்றது அளவடியிற்
குறைந்தும் வஞ்சியோசையன்றி அகவலோசையாயும் வரும்
அடியினை.

     (கு - ரை) 1 - 2. நிலத்தின் பரப்பும் நீரின் ஆழமும்
வளியின் செலவும் விசும்பின் ஓக்கமும் அளப்பரியன வாதலின்,
அவற்றை உவமை கூறினார்; பல்வகைப் பெருமைக்கு அவற்றைக்
கூறுதல் மரபு; பதிற். 24 : 15-6; "இருமுந்நீர்க் குட்டமும்,
வியன்ஞாலத் தகலமும், வளி வழங்கு திசையும், வறிது நிலைஇய
காயமும், என்றாங், கவையளந்தறியினு மளத்தற் கரியை" (புறநா.
20 : 1 - 5); "நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று, நீரினு
மாரள வின்றே" (குறுந். 3 : 1-2); 'மண்ணினும் வானினு மற்றை
மூன்றினும், எண்ணினும் பெரியதோ ரிடர்" (கம்ப. அயோமுகி, 99).
பகைவர் பிழை செய்தலைப் பொறுத்தலில் நிலத்தைப் போன்றும்,
அவர் வழிப்படின் அவரை அளித்தலில் நீரைப் போன்றும், சதுரங்க
வலியிலும் மனவலியிலும் வளியைப் போன்றும், ஆராய்ச்சியின்
விசும்பைப் போன்றும் அவ்வத்தன்மையின்கண் அளத்தற்கு
அரியையென உவமையைப் பொருத்திக்கொள்க (புறநா. 2 : 1-8,
உரை)

     உம்மையும் உருபும் விரித்தற்குப் பொருந்தாது எழுவாயாய்
நான் கென்னும் தொகைச் சொற்பயனிலை கொண்டுநின்றது (தொல்.
இடை.
43, ந.)

     3 - 4. நாள்-நட்சத்திரங்கள். கனை அழல் - மிக்க தீ.

     பல பொருளினும் உளதாகிய கவின் ஓரிடத்துவரின், அதற்கு
உவமை யாமென்பதற்கு மேற்கோள் (தொல். உவம. 24, இளம்.)
1 - 4. இதில் எண்ணுவண்ணம் வந்தது (இ. வி. 757)

     5 - 7. ஈரைம்பதின்மர்-துரியோதனன் முதலிய கௌரவர்
நூற்றுவர்; இது தொகைக் குறிப்புப் பெயர். துப்பு-துணைவலி;
"மூவருளொருவன் றுப்பா கியரென" (புறநா. 122 : 5) அக்குரன் -
பாரதத்தில் கூறப்படுபவனும்.

     தலையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய அக்குரன் போலும்;
கர்ணனென்று நினைத்தற்கும் இடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை.

     8 - 9. கடந்து - வஞ்சியாது எதிர்நின்று. தும்பை .
அதிரப்பொருவோர் சூடும் பூ. பகைவரது போரையும் பீட்டையும்
அழித்த; பீடு-பெருமை. செரு புகல் முன்ப - போரை விரும்புகின்ற
வலியையுடையோய். பகைவர் போர்பீடழித்தும் மேலும் போரை
விரும்புபவனென்றவாறு (புறநா. 31 : 9)

     10. வெகுளியிற் கூற்றம் சிறத்தலின், 'கூற்று வெகுண்டு வரினும்'
என்றார்; "காலனனைய கடுஞ்சின முன்ப" (பதிற். 39 : 8) என்பதன்
குறிப்பைப் பார்க்க; "மாற்றருங் கூற்றம்" (தொல். புறத். .24). ஆதலின்
அவனை இங்கே கூறினார். கூற்றம் வரினும் மாற்றும் ஆற்றல்: கலித்.
43 : 10; குறள், 765; சீவக. 1114.

     11. ஞெமர்தல் - பரத்தல், அகலம் - மார்பு. எழுமுடி கெழீஇய
அகலம் : பதிற். 16 : 17, 40 : 13, 45 : 6; சிலப். 28 : 169.

     பகைவர் முடிப்பொன்னால் ஆரம் செய்து அணிவதோடு
அதனால் கழல் செய்து புனைதலும் உண்டு (புறநா. 40 : 1 - 4)

     12. சான்றோர்-வீரர் (பதிற்.82:13). மெய்ம்மறை - கவசம்
போன்றவனே; விளி.

     13 - 5. சேரன் பெருந்தேவியின் எழில் கூறப்படும்.

     14. மிகையெனக் கருதி இழை அணியப்படவில்லை; இழை
இங்கே தலைக்கலன். கூந்தலின் இயற்கை மணங்கருதி வண்டுகள்
மொய்த்தன.

     15.மகளிரைச் சார்த்து வகையாற் பாடுதலன்றித் தனித்துப்
பாடுதல் மரபன்றாதலின் இங்கே சோனொடு சார்த்தி அவன்
மாதேவியைச் சிறப்பித்தார்; "மக்களுட் பெண்பாலைப் பாடுதல்
சிறப்பன்மையின், 'செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ' (புறநா. 13 : 6)
என்றாற் போலச் சிறுபான்மை ஆண்மக்களோடு படுத்துப்பாடுப"
(தொல். புறத் .26, ந). இந்நூலுள் பின்னரும் இங்ஙனம் வருதல்
காண்க; பதிற். 24 : 11, 38 : 10, 42 : 7, 55 : 1, 61 : 4, 65 : 10,
70 : 16, 88 : 36, 90 : 50.

     14 - 5. "தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின், ஒடுங்கீ
ரோதியொண்ணுதல்" (பதிற். 81 : 27 - 8)

     16 - 7. தொழுதி - தொகுதி. நுடங்கும் - அசையும். படை ஏர்
உழவ-படையை ஏராக உடைய உழவ. பாடினிவேந்து; விறலியருக்கு
ஆபரணங்களை அளித்தலின் இங்ஙனம் கூறினார்; பதிற். 17 : 14.

     18. மணிகள் இடையிடையே அழுத்தப்பெற்ற பொன்னணிகளால்
விளங்கும் சக்கரம்; என்றது ஆக்ஞா சக்கரத்தை.

     19. கடலக வரைப்பு - பூமி. இப்பொழிலென்றது நாவலந்தீவை.

     18 - 9. திகிரியால் ஆண்ட.

     20. முன் திணை முதல்வர் - குலத்தில் முன் இருந்த முதல்வர்;
திணை-குலம்.

     முன்னோர் வழியொழுகுதல்: மதுரைக். 192; புறநா. 58 : 25.

     21. நல்லிசையை நிலைபெறச் செய்து (பதிற். 86 : 5)

     22. தவாஅலியர் - கெடாமல் இருப்பாயக.

     மு. இது பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண் பாட்டு;
இதனை வாழ்த்தியலென்பர் (தொல். புறத். 27. ந.)

     (பி - ம்) 4. வந்தொருங்கு. 10.வரினும் பாற்றும். 12. சான்றோர்
மேமறை. 14. வண்டுபடு துப்பின், (4)


     1நாளும் ஏனைக் கோளும் பலவாக இருப்ப அவற்றை
ஒவ்வொன்றாக நிறுத்தித் திங்கள் முதலியவற்றோடு சேர்த்து
ஐந்தென்று எண்ணியது அவற்றின் தொகுதியைக் கருதியதென்றபடி.

     2புரித்தடக்கையென ஒற்று மிகுதலின் முதனிலைத் தொழிற்
பெயராக்கி, பொருந்துதலையுடைய தடக்கையென உரை வகுத்தார்.

     3சுருள் - ஐம்பாலுள் ஒன்று (பு. வெ. 223, உரை)

     4சொற்சீர்வண்ணம் பாஅவண்ணமென்றுங் கூறப்படும் (தொல்.
செய்யுள். 213, பேர்). சொற்சீரடியின் இலக்கணம்: தொல். செய்யுள்.
123, பேர்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

4. சான்றோர் மெய்ம்மறை
 
14.நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரியையே
நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு
1 புணர்ந்த விளக்கத் தனையை
 
5போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு
துப்புத் துறைபோகிய துணிவுடை யாண்மை
அக்குர னனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ டழித்த செருப்புகன் முன்ப
 
10கூற்று வெகுண்டுவரினு மாற்று2 மாற் றலையே
எழுமுடி கெழீஅய திருஞெம ரகலத்து
நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை
3
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்
4
 
15ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ நுடங்கும்
பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி
படையே ருழவ பாடினி வேந்தே   
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின்
 
20முன்றிணை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅலிய ரோவிவ் வுலகமோ டுடனே.
 

துறை  : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம்  : ஒழுகுவண்ணமும், சொற்சீர்வண்ணமும்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்   : சான்றோர் மெய்ம்மறை.
 

1 - 4. நிலநீர்..................விளக்கத்தனையை.

உரை : நிலம் நீர் வளி விசும்பு  என்ற நான்கின் - நிலமும் நீரும்
காற்றும்  விசும்பும்  என்ற  நான்கினையும் போல; அளப்பரியை - நீ
பெருமையளந்துகாண்டற்கு   அரியையாவாய்;   நாள்கோள்  திங்கள்
ஞாயிறு  கனை  அழல்  -  நாண்மீன்களும்  கோள்களும் திங்களும்
ஞாயிறும்  மிக்க நெருப்பும் என்ற; ஐந்து ஒருங்கு புணர்ந்த - ஐந்தும்
ஒருங்குகூடினாற்  பிறக்கும்;  விளக்கத்து  அனையை  - ஒளிபோலும்
ஒளியுடையையாவாய்,

அளத்தற்கரிய     பெருமையுடையவாகலின், நில முதலியவற்றைக்
கூறினார்;    “இருமுந்நீர்க்    குட்டமும்   வியன்ஞாலத்   தகலமும்,
வளிவழங்கு   திசையும்,   வறிது   நிலைஇய   காயமும்  என்றாங்கு,
அவையளந்  தறியினும் அளத்தற் கரியை”  (புறம். 20) என்று பிறரும்
கூறுதல்  காண்க.  இதன்  கண்ணும்  தீயொழிந்த  ஏனைப்  பூதங்கள்
எண்ணப்பட்டிருப்பதும்,       “அளந்தறியினும்”        என்றதனால்
அளத்தற்கருமை  பெறப்படுவதும்  அறிக.  தீ   ஒளிப்பொருளாதலின்,
அதனை   நாள்   கோள்   முதலியவற்றோடு   கூட்டினார்.  பழைய
வுரைகாரர்,   பூதங்கள்   ஐந்தையு  மெண்ணாது  தீயை  யொழித்தது
மேல்விளக்கத்துக்கு        உவமமாக        எண்ணுகின்றவற்றோடு
கூட்டவேண்டியென்பது;  ஈண்டுக் கோளென்றது விளக்கமில்லா இராகு
கேது   வென்னும்  இரண்டும்  நீக்கிநின்ற  ஏழினும்  சிறப்புப்  பற்றி
வேறெண்ணப்பட்ட  திங்கள்  ஞாயிறென்னும்  இரண்டும்  நீக்கிநின்ற
ஐந்தையு   மென்பது  ஈண்டு  நோக்கத்தக்கது.  நிலம்  நீரினும்,  நீர்
நெருப்பினும் நெருப்பு வளியினும், வளி விசும்பினும்  ஒடுங்குமாகலின்,
அம்  முறையே  பற்றி, “நிலநீர் வளியொடு விசும்” பென்றார். நாளும்
கோளும்   திங்களும்   இரவுப்போதில்  தோன்றித்  தண்ணியவொளி
செய்வன    வாகலினாலும்,    வெம்மையும்    மிக்கவொளியுமுடைய
ஞாயிற்றை  யடுத்திருத்தலாலும்,  “ஞாயிறு  கனையழல்” என்று சேரக்
கூறினார்.  ஐந்துமென்ற  வும்மை விகாரத்தால் தொக்கது. நாள் கோள்
முதலிய  ஐந்தும்  ஒருங்கு  கூடியவழிப்  பிறக்கும் ஒளியைப்போலும்
ஒளியென்றது,  சேரலாதனது  நல்லொளி  எல்லா நிலத்தினும் சென்று
பரவி ஆட்சி புரிதலைக் குறித்து என்க.

5 - 7. போர்தலை...............கைவண்மையையே.

உரை : போர்  -  போர்    செய்வதில்;   தலைமிகுந்த  ஈரைம்
பதின்மரொடு   -  மிக்க  மேம்பாடுற்ற  நூற்றுவருடன்,  துப்புத்துறை
போகிய  -  துணை வலியாகும்  நெறியில்  கடைபோகிய; துணிவுடை
ஆண்மை - அஞ்சாமைபொருந்திய ஆண்மையினையுடைய; அக்குரன்
அனைய     -     அக்குரனென்பானைப்போல;
கைவண்மையைவள்ளன்மையுடையையாவாய்,

பாண்டவர் ஐவரொடு மலைந்த பேராண்மையையுடைய நூற்றுவரது
மறச்சிறப்பை    இவ்வாசிரியர்,    “போர்தலை    மிகுத்த   வீரைம்
பதின்மரொடு”  என்றாற்போல,  “நிலந்தலைக்  கொண்ட  பொலம்பூந்
தும்பை,  ஈரைம்பதின்மர்” (புறம். 2) என முரஞ்சியூர்  முடிநாகனாரும்,
“மறந்தலைக்கொண்ட   நூற்றுவர்”   (கலி.   52)  எனக்   கபிலரும்
கூறியுள்ளார்.  போர்த்திறம்   பலவற்றின்கண்ணும்     நூற்றுவர்க்குத் துணைவலியாந்       துறையில்      எஞ்சாது     ஒழுகினமையின்,
“துப்புத்துறை    போகிய”    என்றும்,    துணிவில்வழி   ஆண்மை
சிறவாமையின்,  “துணிவுடை  யாண்மை”  யென்றும், வள்ளன்மையில்
மிக்க  மேம்பட்டோனாதலின்,  அதனை  யுயர்த்தும்  கூறினார். துப்பு,
துணை;   “துன்பத்துள்  துப்பாயார்”  (குறள்.  106)  என்புழிப்போல,
“அக்குரன்   பாரதத்தில்  கூறப்படுபவனும்  தலையெழு  வள்ளல்களு
ளொருவனுமாகிய   அக்குரன்போலும்;   கர்ணனென்று  நினைத்தற்கு
மிடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை” யென்று டாக்டர் திரு. உ. வே.
சாமிநாதையர் கூறுவர். 
 

8 - 10. அமர்கடந்து......................ஆற்றலையே.

உரை : அமர்  கடந்து  மலைந்த  தும்பைப்  பகைவர் - போரில்
வஞ்சனையின்றிப்  பொருது  சிறந்த  தும்பைப் பகைவருடைய; போர்
பீடு   அழித்த   -   போரினையும்   அவர்தம்  பெருமையினையும்
அழித்தொழித்த;  செருப்புகல் முன்ப - அத்தகைய போரை விரும்பும்
வலியையுடையோய்;    கூற்று    வெகுண்டு   வரினும்  கூற்றுவனே
சினங்கொண்டு  பொரவந்தாலும்;  மாற்றும்  ஆற்றலை  நீ அவனைப்
பிறக்கிட் டோடச் செய்யும் ஆற்றலை யுடையையாவாய்,

வெட்சி,  கரந்தை முதலாகப் பல்வகைப் போர்களைச் செந்நெறியிற்
பொருது சிறந்தோரே, பகைவர் அதிரப்பொரும் தும்பைப்போர் செய்ய
முற்படுபவாதலின்,  அவரைத்  “தும்பைப்  பகைவ”  ரென்பர், “அமர்
கடந்து  மலைந்த  தும்பைப்  பகைவர்”  என்று  சிறப்பித்தார். அவர்
செய்யும்   போரும்,   அப்போரால்   அவர்   பெற்றிருக்கும்  பீடும்
உயர்ந்தனவாதலின்,  அவற்றையழித்த  பெரும்போரைச்  செய்தலின்,
“தும்பைப் பகைவர் போர் பீடழித்த முன்ப” என்றும், அம்முன்பினால்
மேலும்  போர் விரும்பும் அவன் மறப்பண்பை, “செருப்புகல் முன்ப”
என்றும்  வியந்துரைத்தார்.  “போரெனிற்  புகலும் புனைகழல் மறவர்”
(புறம்.  31)  எனவும்,  “செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி”
(முருகு.  67) எனவும் சான்றோர் போர்வேட்கையைப் புகழ்ந்தோதுதல்
காண்க.  முன்னிற்பார்  இல்லாத முரணுடைமைபற்றி “முன்பன்” என்ப
போலும்.   உயிர்களை   அவை   நின்ற   உடம்பினின்றும்  நீக்கிக்
கூறுபடுக்கும்  முறைமையும் அத்தொழிற்கென வேண்டும்  வன்மையும்
விரகும்     இறப்ப     வுடைமையின்,     கூற்றுவனை     வேறல்
எத்திறத்தோர்க்கும்   கூடாத  செயலாயினும்,  அவனையும்  வென்று
முதுகிட்டோடச்   செய்யும்   மொய்ம்புடையாயென்றது,  சேரலாதனது
ஒப்புயர்வற்ற  ஆற்றலைப்  புலப்படுத்தற்கென  வறிக.  “பகையெனிற்
கூற்றம்வரினும் தொலையான்” (கலி. 43) எனக் கபிலர் கூறுதல் காண்க.
மாற்றுதல்,   மார்பு   காட்டி  வருவானை  முதுகு  காட்டியோடுமாறு
செய்தல்.

11 - 12. எழுமுடி..............சான்றோர் மெய்ம்மறை.

உரை : எழுமுடிகெழீஇய - அரசர்  எழுவரது   முடிப்பொன்னாற்
செய்யப்பட்ட   ஆரமணிந்த;   திருஞெமர்  அகலத்து  -  திருமகள்
விரும்பி யுறையும்    பரந்த மார்பினையும்;  நோன்புரித்  தடக்கை - 
வன்மை   பொருந்திய   பெரிய   கையினையு  முடைய;  சான்றோர்
மெய்ம்மறை - வீரர்கட்குக் கவசம் போல்பவனே,
 

முடி,     முடிப்பொன்னாலியன்ற  ஆரத்துக்காதலின்  ஆகுபெயர்.
பகைவரை வென்று அவர் முடிப்பொன்னால் ஆரமும் வீரகண்டையும்
பிறவும்  செய்து  கோடலும், காவல் மரத்தால் முரசு முதலியன செய்து
கோடலும்,  அவர்  நாட்டிற்  பெற்ற பெருவளத்தைப் பாணர் முதலிய
இரவலர்க்கு   வழங்கலும்   பண்டை   வேந்தர்  மரபு.  சேரவேந்தர்
பகையரசர்  எழுவர்  திருமுடிப்  பொன்னால்  ஆரம் செய்துகொண்ட
செய்தியைக் காப்பியாற்றுக் காப்பியனார் “எழுமுடி கெழீஇய திருஞெம
ரகலத்து........தார்மிகு  மைந்தினார்முடிச்  சேரல்” (பதிற். 40)  என்றும்,
பரணர்,  “எழுமுடி  மார்பின்  எய்திய  சேரல்”  (பதிற். 45) என்றும்,
இளங்கோவடிகள்,  “எழுமுடி  மார்பநீ ஏந்திய திகிரி” (சிலப். 28: 169)
என்றும்  கூறுதல் காண்க. “எழுமுடி யென்பது ஏழு அரசரை வென்று
அவர்கள் ஏழு முடியானும் செய்ததோ ராரமாம்” என்பது பழையவுரை.
“நீயே......அவர்   முடிபுனைந்த   பசும்பொன்னின்   அடி  பொழியக்
கழல்தைஇய,  வல்லாளனை  வயவேந்தே”  (புறம்.  40) என்பதனால்,
முடிப்பொன்னால்   கழல்செய்து   கோடலை  யறியலாம்.  நோன்மை,
வன்மை.  அறப்போர்  புரியும்  ஆண்மையும்,  தறுகண்மையுமுடைய
வீரரை,   சான்றோர்   என்றல்   தமிழ்   மரபாதலின், அவர்கட்குத்
தலைவனும்   முன்னணி  வீரனுமாதலின்,  “சான்றோர்  மெய்ம்மறை”
யென்றார்.  இச்  சான்றோரைத்  தாக்கும்  பகைவர் இவனைத் தாக்கி
வென்றாலல்லது   அவர்பாற்  சேறலாகாமை  தோன்ற “மெய்ம்மறை”
யெனச்  சிறப்பித்தார்.  இவ்வியைபால்  அவர்கட்கு மெய்ம்மறைக்கும்
கவசம்போறலின் இவ்வாறு கூறியதென்க. “ஈண்டுச் சான்றோ ரென்றது
போரில்  அமைதியுடைய  வீரரை;  மெய்ம்மறை  -  மெய்புகு கருவி;
மெய்ம்மறை  யென்றது  அச்சான்றோர்க்கு  மெய்புகு  கருவி போலப்
போரிற் புக்கால் வலியாய் முன்னிற்றலின்; இச் சிறப்பு நோக்கி இதற்கு
(இப்பாட்டிற்கு) ‘சான்றோர் மெய்ம்மறை’ என்று பெயராயிற்று” என்பர்
பழையவுரைகாரரும் என அறிக.

13 - 15 வானுறை................கணவ.

உரை : வான் உறை மகளிர்  இகல்  கொள்ளும் - விண்ணுலகத்து
மகளிர் தம நலத்தால் தனக்கு நிகராதல்  வேண்டித் தம்முள் முற்பட்டு
இகலும்; நலன் - மெய்ந்நலமும்; வயங்கு இழை கரந்த - விளங்குகின்ற
தலைக்கலனால்   மறைப்புண்ட;   வண்டு   படு   கதுப்பின்  வண்டு
மொய்க்கும்   கூந்தலும்;   ஈர்   ஓதி   ஒடுங்கு  கொடுங்  குழை  -
மண்ணுதலால்  நெய்ப்புற்ற  கூந்தல்  ஒடுங்கிய  செவியிடத்தே பெய்த
வளைந்த குழையும் உடையளாகிய தேவிக்கு; கணவ - கணவனே,

“மின்னுமிழ்ந்     தன்ன சுடரிழை யாயத்துத்,  தன்னிறங்   கரந்த
வண்டுபடு  கதுப்பின்,  ஒடுங்கீ  ரோதி  யொண்ணுதல்  அணிகொளக்,
கொடுங்குழைக் கமர்த்த நோக்கின்” (பதிற். 81) என்ற பிறரும் கூறுதல்
காண்க.
 

கதுப்பும்     குழையும் எண்ணப்படுதற் கேற்ப,  வானுறை  மகளிர்
இகல்கொள்ளும்  நலனும்  என  மாறிக்  கூட்டுக.  கொள்ளும் நலன்,
கொள்ளுதற்  கேதுவாகிய நலன் என்க. அரசமாதேவியின் மெய்ந்நலம்
கண்டு அதனோடு தம் நலமும் நிகராமென்பது கருதி வானவர் மகளிர்
தம்மிற்  கூடிப்  பிணங்குதல்  தோன்ற,  “இகல் கொள்ளும்” என்றார்.
மானுட  மகளிரொடு  தம்மை நிகர்ப்பித்துக் காணவேண்டாத வானுறை
மகளிர்,    இதுபோது   அச்செயலை   மேற்கொண்டு   பண்பில்லன
செய்தலின்,  அதற்கேதுக்  கூறுவாராய்,  இகல்கொள்ளு மென்றாரென
வறிக.  பண்பில்லன  செய்தலாவது,  “அழகி்ற்கு அவளை யொப்பேன்
யானே  யானே  என்று  தங்களில்  மாறுகொள்”ளுவது. இகலென்பது
“பகலென்னும் பண்பின்மை பாரிக்கும்” (குறள். 851) என்று சான்றோர்
கூறுதல்  காண்க.  தலைக்கூந்தலை மண்ணிச் சீரிய தலைக்கலன்களை
யணிந்ததனால்,  கதுப்பு,  வண்டு  மூசுதலாலன்றித்  தோன்றாமையின்,
“வயங்கிழை   கரந்த   வண்டுபடு  கதுப்பின்”  என்றார்.  கூந்தலுக்கு
நெய்யணிந்து  நன்கு மண்ணுதல் செய்தவழி, அது செவியின் பின்னே
ஒடுங்கிச்   சுருண்டமைதலின்,   “ஈரோதி   ஒடுங்கு  கொடுங்குழை”
யென்றார்.  தன்  பின்னே  ஓதியை ஒடுக்கி நிற்கும் செவி குழையால்
விளக்கமுறுதலின்,  அதனையே  விதந்து  “கொடுங்குழை”  யென்றார்.
ஒடுங்கீரோதிக்  கொடுங்குழை, அன்மொழித்தொகை. கதுப்பு மண்ணிய
வழிச்சுருண்டு  செவியின்  புறத்தே  ஒடுங்குமாறு  தோன்றப்  பழைய
வுரைகாரர், “சுருள்” என்று உரைத்தவாறறிக.

16 -17. பல்களிற்று...................வேந்தே.

உரை : பல்களிற்றுத்    தொழுதியொடு - பலவாகிய    யானைக்
கூட்டத்தோடு; வெல் கொடி நுடங்கும் - வெல்லுகின்ற கொடி யுயர்ந்து
அசையும்;  படை ஏர் உழவ - படையினை ஏராகக் கொண்டு பகைவர்
படையாகிய   புலத்தையுழுகின்ற   உழவனே;   பாடினி  வேந்தே  -
பாண்மகளுக்கு வேண்டும் பரிசு வழங்கும் வேந்தனே எ - று.

தொகுதி,     தொகுதி.  “இழையணிந்  தெழுதரும்  பல்களிற்றுத்
தொழுதியொடு”   (பதிற்.   62)   எனப்  பிறரும்  கூறுதல்  காண்க.
“வில்லேருழவ”  என்பன  போல,  சேரலாதனைப் “படையே ருழவ”
என்கின்றார்.  பாடினி  பாடும்  பாட்டுக்கு  மகிழ்ந்து  அவட்கு இழை
முதலாயின  வழங்கி,  அவளுடைய  இசைப் புலமையைச் சிறப்பித்து
ஆதரித்தலின், “பாடினிவேந்தே” என்றார்.

18 - 22. இலங்குமணி................உடனே.

உரை : இலங்கு  மணி  மிடைந்த  பொலங்கலம் - விளங்குகின்ற
மணிகள்  செறிந்த  பொன்னாற்  செய்யப்பட்ட  கலங்களைப் பூண்டு;
திகிரி - அரசியலாகிய ஆணையைச் செலுத்தி; கடல் அகவரைப்பின் -
கடல்சூழ்ந்த   நிலவுலகத்தே;   இப்பொழில்   முழுதாண்ட   -  இத்
தமிழகத்தை  முழுதும்  ஆண்ட; நின் முன் திணை முதல்வர்போல -
நின்குலத்து  முன்னோர்களைப் போல;  நின்று - நிலைபெற இருந்து;
இவ்  வுலகமொடு - இவ்வுலகின் கண்;  கெடாஅ     நல்    இசை
நிலைஇ - அழியாத  நல்ல புகழை நிறுவி; உடனே - அதனுடனே; நீ 
தவா அலியர் - நீமெலிவின்றி வாழ்வாயாக எ - று.
 

பொலங்கலத்தையும் திகிரியையு முடையராய்ப் பொழில் முழுதாண்ட
என்று    இயைத்தலு    மொன்று.    திகிரி   அரசாணை.   அஃது
இனிதுருளுதற்கு  இடமாய்  நிழல்  செய்தலின்,  கொற்றக் குடையைத்
“திகிரி” யென்றா ரென்றும், திகிரி யென்றதற்கு ஏற்பச் சாதியடையாகப்
பொலங்கலம்  என்று விசேடித்தாரென்றும் கூறுவர். உலக முழுதாண்ட
நின்   முன்னோர்  தம்  ஆட்சி  நலத்தாலும்  வெற்றிச்  சிறப்பாலும்
இறவாப்  புகழ்படைத்து  நிலைபெற்றதுபோல, நீயும் நிலைபெறுகவென
வாழ்த்துவது  கருத்தாகலின், “தவா அலிய, ரோவிவ் வுலகமோடுடனே”
என்றார்   புகழுடம்பு   செல்வமெய்தப்   பூதவுடம்பு   நல்கூர்தலும்
இறத்தலும்  உண்மையின்,  அவை யிலவாய் நிலைபெறுக என்றதற்குத்
“தவா  அலியரோ”  என்றா  ரென  வுணர்க.  தவல், வறுமை நோய்
முதலியவற்றால்  மெலிதல்;  “தவலும் கெடலும் நணித்து” (குறள். 856)
என்பதற்குப் பரிமேலழகர் கூறும் உரை காண்க.

சான்றோர்    மெய்ம்மறை; கொடுங்குழை கணவ; உழவ; வேந்தே;
அளப்பரியை;    விளக்கத்தனையை;   கைவண்மையை;   ஆற்றலை;
அதனால் நீ முதல்வர் போல நல்லிசை நிலைஇ, தவா அலியரோ என
முடிக்க.

“நிலமுதற்     பூதம் நான்கும் போலப் பெருமை யளத்த லரியை;
நாண்மீன்  முதல் ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை; கைவண்மையால்
அக்குரன்    என்பவனை    யொப்பை;    அன்றி,   முன்ப,   நின்
வலியிருக்கும்படி  சொல்லின்  கூற்று வெகுண்டு வரினும் அதனையும்
மாற்றும்    வலியுடையை;    ஆதலால்   சான்றோர்   மெய்ம்மறை,
கொடுங்குழை  கணவ,  படையே  ருழவ,  பாடினி  வேந்தே, நின்குடி
முன்திணை   முதல்வர்போல   நின்று   நல்லிசையை  நிலைப்பித்து
இவ்வுலகத்தோடு கூடக் கெடா தொழிவாயாக என வினைமுடிவு செய்க.
இதனாற்  சொல்லியது,  அவன்  பல  குணங்களையும்  ஆற்றலையும்
ஒருங்குகூறி வாழ்த்தியவாறாயிற்று” என்பர் பழைய வுரைகாரர்.

இப்பாட்டின்கண்,  ஒழுகு வண்ணமே யன்றிச் சொற்சீர் வண்ணமும்
பயிலுதலின்,  அதனை  விளக்கலுற்ற பழையவுரை, “அளப் பரியையே
யெனச் சொற்சீரடி வந்தமையாற் சொற்சீர் வண்ணமுமாயிற்று; ஈண்டுச்
சொற்சீரென்றது,    அளவடியிற்    குறைந்தும்   வஞ்சியோசையன்றி
அகவலோசையாயும் வரும் அடியினை” என்று கூறுகின்றது.

இதனை  வாழ்த்தியலென்ப ரென்றும், பரவற்கண் வந்த செந்துறைப்
பாடாண்டாட்டென்றும்   ஆசிரியர்  நச்சினார்க்கினியர்,  “வழங்கியன்
மருங்கின்” (தொல். பொ. 82) என்ற நூற்பாவுரையிற் காட்டிக் கூறுவர்.
 


1. வந்தொருங்கு - பாடம்.
2. வரினும்பாற்று - பாடம். 
3. மேமறை - பாடம்.  
4. வண்டுபடு துப்பின் - பாடம்.


 மேல்மூலம்