முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
15. யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி
நிரை களிறொழுகிய
நிரைய வெள்ளம்
 5 பரந்தாடு கருங்கழி மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
அழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத்
தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
 10 பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற்
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின்
அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
 15 பகைவர் நாடுங் கண்டுவந் திசினே
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க்
கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச்
 20 சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின்
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை
தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பிற்
போர்வல் யானைச் சேர லாத
நீவா ழியரிவ் புலகத் தோர்க்கென
 25 உண்டுரை மாறிய மழலை நாவின்
மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச்
செய்த மேவ லமர்ந்த சுற்றமோ
டொன்று மொழிந் தடங்கிய கொள்கை யென்றும்
 30 பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி
நிரைய மொரீஇய வேட்கைப் புரையோர்
மேயின ருறையும் பலர்புகழ் பண்பின்
நீபுறந் தருதலி னோயிகந் தொரீஇய
யாணர்நன் னாடுங் கண்டுமதி மருண்டனென்
 35 மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா
தீத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற்
புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி
ஏம மாகிய சீர்கெழு விழவின்
நெடியோ னன்ன நல்லிசை
 40 ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே.

     துறை-செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - நிரையவெள்ளம் (4)

     (ப - ரை) நீ சீற்றமொடு (2) அழல்கவர் மருங்கின் உருவறக்
கெடுத்து (7) என முடிக்க.

     4. நிரையவெள்ள மென்றது பகைவர்க்கு
1நிரையபாலரைப்போலும் படைவெள்ளமென்றவாறு; நிரையமென்றது
நிரையத்து வாழ்வாரை.

     இச்சிறப்பானே இதற்கு, ‘நிரைய வெள்ளம்’ என்று
பெயராயிற்று.

     5. மன்மருங்கறுப்பவென்றது மன் மருங்கறுப்பவேண்டி
யென்றவாறு.

     7. கெடுத்தென்பதனைக் கெடுக்கவெனத் திரிக்க.

     தொல்கவினழிந்த கண்ணகன் வைப்பினையும் (8) புல்லாள்
வழங்கும் (12) புல்லிலைவைப்பினையுமுடைய புலஞ்சிதை (13) நாடு
(15) என முடிக்க

     8. தொல்கவினழிந்த வைப்பென்றது சூடுண்டு அழிந்த
ஊர்களை. புல்லிலைவைப்பென்றது குடிபோய்ப் பாழ்த்த ஊர்களை.

     9. சுரை கலிக்கவெனத் திரிக்க.

     10 - 11. நிறைமுதற் காந்தளெனக் கூட்டுக.

     11 - 3. மூதில்லையுடைய புல்லிலைவைப்பெனக் கூட்டுக.

     13. புல்லிலை வைப்பென்றது புல்லிய இலைகளாலே
2வேயப்பட்ட ஊரென்றவாறு; இதனை, 'நூலாக் கலிங்கம்' (பதிற்.
12 : 21) என்றது போலக் கொள்க.

     12. புல்லாளென்றது புல்லிய தொழிலையுடைய ஆறலைகள்
வரை. அரம்பிற் (13) பகைவர் (15) என முடிக்க.

     13. அரம்பென்பது குறும்பு.

     20 - 21. சீர்பெறு கலிமகிழியம்பும் முரசின் வயவரென்றது
வெற்றிப்புகழ்பெற்ற மிக்க மகிழ்ச்சியானே ஒலிக்கின்ற
முரசினையுடைய வீரரென்றவாறு.

     19 - 20. நியமத்து இயம்புமென முடிக்க.

     24 - 6. நீ வாழியரிவ்வுலகத்தோர்க்கெனத் திருந்துதொடை
வாழ்த்தவென முடித்து, இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நீ

     வாழ்வாயாகவெனச் சொல்லித் திருந்திய நரப்புத் தொடையினை
யுடைய யாழொடு வாழ்த்தவென வுரைக்க.

     தொடையொடென விரியும் ஒடு வேறுவினையொடு.

     25 - 6. மழலைநாவினையும் 3மென்சொல்லினையுமுடைய
கலப்பையரென கொள்க.

     வெய்துறவறியாது நந்திய வாழ்க்கையினையும் (27) ஒன்று
மொழிந்து அடக்கிய கொள்கையினையும்(29) நிரையமொரீஇய
வேட்கையினையும் உடைய புரையோர் (31) செய்த மேவலமர்ந்த
சுற்றத்தோடு (28) பதி பிழைப்பறியாது துய்த்தலெய்தி (30)
மேயினருறையும் (32) நாடென (34) மாறிக் கூட்டியுரைக்க.

     28. செய்த மேவலமர்ந்த சுற்றமென்றது (சுற்றத்) தலைவர்
செய்த காரியங்களைப் பின் சிதையாது தாம் அவற்றை
மேவுதலையுடைய அத்தலைவரொடு மனம்பொருந்தின
சுற்றமென்றவாறு.

     செய்தனவென்பது கடைக்குறைந்தது.

     ஈத்துக்கை தண்டா (36) மைந்த (40) என முடிக்க.

     37. 4புரைவயிற் புரைவயிற் பெரியநல்கியென்றது உயர்ந்த
தேவாலயமுள்ள இடங்களிலே உயர்ந்த ஆபரணம் உள்ளிட்டவற்றைக்
கொடுத்தென்றவாறு.

     நின் பகைவர் நாடும் கண்டுவந்தேன் (15); அதுவேயன்றி
வேந்தே, வெறுக்கை (21), சேரலாத (23), நீ புறந்தருதலின்,
நோக்கந்தொரீஇய நின் (33) நாடும் கண்டு மதிமருண்டேன் (34);
இவை இரண்டும் காணவேண்டின காரணம் யாதெனின், மைந்த,
நின் பண்பு பலவற்றையும் காண நயந்து (40) என வினைமுடிவு
செய்க.

     இதனாற் சொல்லியது அவன்வென்றிச் சிறப்பும் தன்
நாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. யாண்டு தலைப்பெயர - ஓராண்டு செல்ல.
வேண்டுபுலத்து இறுத்து - தான் அழிக்கவேண்டிய நாட்டிற்
சென்று தங்கி (மதுரைக.் .234. ந.)

     1 - 2 எரி பரப்புதல் : இதனை 'எரி பரந்தெடுத்தல்'
என்னும் துறையின்பாற் படுத்துவர் (பதிற். 25 : 7, 71 : 9 - 10;
மதுரைக். 126, 154 - 6; கலித். 13 : 1 - 2; புறநா. 6 : 21 - 2,
7 : 8 - 9, 16 : 17, 23 : 10 - 11)

     3. தலைஇய-பெய்த; இது மதிலுக்கு அடை. மதின்மரம் -
கணையமரம்.

     3-4. முருக்கி-அழித்து. கணைய மரத்தைக் களிறுகள்
முருக்கின. யானை கொம்பால் இடிக்கும்பொழுது மதிற்கதவுகளுக்குப்
பாதுகாப்பாக அவற்றின் பின்னே அமைக்கப்படுவது கணைய மரம்
(பதிற். 16 : 5 - 8)

     4. களிறொழுகிய நிரைய வெள்ளம் - யானைகள்
வரிசையாகச் சென்ற, நகரபாலரைப் போன்ற படை. படையில்
யானை தலைமையுடையதாதலின் அதனை எடுத்துக்கூறினார்;
"யானையுடையபடை" (இனியவை. 5);

      கஜரததுரகபதாதி யென்பது வழக்கு. நிரைய வெள்ளம் :
"நிரைய வொள்வா ளிளையர் பெருமகன்" (குறுந். 258 : 6); "நிரையத்
தானை" (சிலப். .26 : 37)

      5. பரவி ஆடுகின்ற கழங்குகள் அழிதற்குக் காரணமான
அரசர்களின் குலத்தை முற்றக் கெடுப்பதற்கு. கழங்கு அழிதலாவது எண்ணுதற்குக் கருவியாகவுள்ள கழங்குகள் பொருளின் மிகுதியால்
போதாவாதல். இங்கே பகையரசர்களின் மிகுதிபற்றிக்கழங்கு அழிதல் கூறினார். கழங்கு - கழற்சிக்காய். எண்ணுதற்கு இது கருவியாதல்,
"எல்லாமெண்ணி னிடுகழங்கு தபுந" (பதிற். 32 : 8) என்பதனாலும்
அறியப்படும்; இவ்வழக்கம் இன்னும் மலைநாட்டில் உள்ளது.

      6. கொடி - தீக்கொழுந்து. பிசிர - சிறிது சிறிதாகச்
சிதறும்படி (பதிற். 25 : 7)

      7. உருஅற - நாட்டின் பழைய உருவம் கெடும்படி. 8.
வைப்பு - ஊர்கள்.

      9. வேளை - ஒரு செடி. சுரை - சுரைச்கொடி. கலித்து -
தழைத்து வளர; எச்சத் திரிபு. அழிந்த நாட்டில் வேளையும்
சுரையும் படர்தல்: "வேரறுகு பம்பிச் சுரைபரந்து வேளைபூத், தூரறிய
லாகா கிடந்தனவே....................முசிரியார் கோமான், நகையிலைவேல்
காய்த்தினார் நாடு" (முத்.)

     10. பீர் இவர்பு - பீர்க்கங் கொடி ஏறி. 'நிறைமுதல் -
நீர்ச்சாலினிடத்தில் (சீவக. 69, ந. மேற்.)

     11. காந்தள் முதல் - காந்தட்கிழங்கு; நீரற்றமையின் அது
சிதைந்தது.

     12. புலவு வில் - எய்த அம்பினை மீட்டும் தொடுத்தலின்
புலால் நாற்றத்தையுடைய வில் (மதுரைக். 142, ந.). வில் உழவு -
விற்றொழிலாகிய உழவு. புல்லாள் - வழிப்பறி செய்வோர்.

     14. துப்பு எதிர்ந்த - வலியொடு மாறுபட்டெழுந்த (புறநா.
54 : 8)

     15. வந்திசின் - வந்தேன்; கசின் தன்மைக்கண் வந்தது
(புறநா. 22 : 36, உரை).

     16. கடல - முத்து, பவளம் முதலிய நெய்தல் நிலத்துப்
பொருள்கள்; கல்ல - மணிமுதலாகிய குறிஞ்சி நிலத்துப் பொருள்கள்;
யாற்ற - முல்லையிலும் மருதத்திலும் உள்ள பொருள்கள்.

     18. விழவு அறுபு அறியா - விழாக்கள் நிற்றலை அறியாத;
என்றும் விழாவுடையது என்றபடி (பதிற். 29 : 7, 30 : 20). இமிழ்
- ஒலிக்கின்ற.

     19. பலவகைக் கொடிகளின் நிழலில் அமைந்த பொன்னை
மிகுதியாக உடைய கடைவீதியின்கண். கொடிகள் இன்ன பொருளை
விற்குமிடம் என்பதை அறிவுறுத்துவதற்குக் கட்டப்படுவன (மதுரைக்.
365 - 6; பட்டினப். 167 - 8, சிலப். 14 : 216)

     21. பரிசிலர் வெறுக்கை - பரிசில் பெற வருவாருடைய
செல்வமாக இருப்பவனே; "அந்தணர் வெறுக்கை" (முருகு. .263)

     22 - 3. தார் - கழுத்தில் அணிந்த மாலை (பெருங்.
.2. 2 : 197) எழிலிய அழகுபெற்ற (புறநா. 68 : 5). தொடி சிதை
மருப்பின் - பகைவரது மதிற்கதவத்தைப் பாய்ந்து அழித்தமையாலே
பூண் சிதைந்த கொம்பையுடைய; "கடிமதிற் கதவம் பாய்தலிற்
றொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணைவெண் கோட்டுச், சிறுகண்
யானை" (அகநா. 24 : 11 - 3)

     24. இவ்வுலகத்தோர் வாழும்பொருட்டு நீ வாழ்வாயாக.

     25 - 6. கள்ளையுண்டமையால் சொல் தடுமாறிய மழலை
வார்த்தையைப் பேசும் நாவையும், மெல்லிய சொல்லையும், இசைக்
கருவிகளைக் கொண்ட பையையுமுடைய பாணர் முதலியோர்,
குற்றமற்றுத் திருந்திய நரப்புக் கட்டுக்களையுடைய யாழின்
இசையோடு வாழ்த்துக்கூற. உண்டு உரை மாறுதல்: "உண்டுமகிழ்
தட்ட மழலை நாவிற், பழஞ் செருக்காளர்" (மதுரைக். 668 - 9).
கலம் - யாழ் முதலியன. தொடை : இங்கே யாழ்; ஆகுபெயர்.

     27. வெய்துறவு - துன்பமுறுதலை. நந்திய - பெருகிய.

     28. சுற்றமொடு - உறவினர்களோடு.

     29. ஒன்று மொழிந்து - உண்மையையே சொல்லி. அடங்கிய
கொள்கை - ஐம்புலன்களும் அடங்கிய கோட்பாட்டினையுடைய;
இது புரையோருக்கு அடை (புறநா. 191 : 6 - 7)

     30 - 31. இவனது செங்கோற் சிறப்பால் அவ்வூரை விட்டுச்
செல்லாது தங்கித் தவத்தாலாய நுகர்ச்சியைப் பெற்று நரகத்
துன்பத்தினின்றும் நீங்கிய, இவன் நாட்டிலேயே வாழவேண்டுமென்னும்
விருப்பத்தையுடைய மேலோர்; பெருங். 1. 40 : 386 - 8 ம்
அடிகளிலும் இக்கருத்து வந்துள்ளது.

     32. மேயினர் - விரும்பி. உறையும் (32) நாடு (34) எனக்
கூட்டுக.

     33. புறந் தருதலின் - பாதுகாத்தலினால்.

     34. யாணர் - புது வருவாயையுடைய.

     35. மண்ணுடை ஞாலம் - மண் அணுக்கள் செறிதலையுடைய
பூமி. (புறநா. 2 : 1). எஞ்சாது - குறையாமல்.

     36. கொடுத்து நீங்காத கையினிடத்துள்ள மிக்க
வன்மையினாலே. கைக்குத் துப்பாவது ஈகை. 38. ஏமம் - இன்பம்.

     39 - 40. திருமாலைப் போன்ற, நல்லபுகழ் அழியாத
வன்மையை யுடையோய். புகழுக்குத் திருமாலை உவமை கூறுதல், "புகழொத் தீயேயிகழுந ரடுநனை" (புறநா. 56 : 13) என்பதனாலும் அதன் அடிக்குறிப்பாலும், "உரைசால் சிறப்பி னெடியோன்" (சிலப்.
22 : 60
)
என்பதனாலும் உணரலாகும்.

     மு. "யாண்டுதலைப் பெயர" என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு
கூறிய இடம் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின் பாற்படும் (தொல்.
புறத். 8, ந.)

     (பி - ம்) 5. கழங்குவழி. 8. கவினிழந்த 10. பீர்வாய் பரந்த. (5)


     1நிரைய நரகம்.

     2வேயப்பட்ட வீடுகளையுடைய ஊர்.

     3மென்சொல் : இசைவல்லோரது மொழியும் மென்மையாக
இருக்கும்; "மென்மொழி மேவல ரின்னரம் புளர"
(முருகு. 142)

     4புரையென்பது உயர்வைக்குறிப்பதாதலின் புரைவயின்
என்பதற்கு உயர்ந்த தேவாலயங்கள் என்று பொருளுரைத்தார்.





பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

5. நிரைய வெள்ளம்
 
15.யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி
நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்
 
5 பரந்தாடு கழங்கழி1 மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
அழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத்
தொல்கவி னழிந்த
2 கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
 
10 பீரிவர்பு பரந்த3 நீரறு நிறைமுதற்
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின்
அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
 
15 பகைவர் நாடுங் கண்டுவந் திசினே
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க்
கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச்
 
20 சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின்
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை
தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பின்
போர்வல் யானைச் சேர லாத
நீவா ழியரிவ் வுலகத் தோர்க்கென
 
25 உண்டுரை மாறி மழலை நாவின்
மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச்
செய்த மேவ
4 லமர்ந்த சுற்றமொடு
ஒன்றுமொழிந் தடங்கிய கொள்கை யென்றும்
 
30 பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி
நிரைய மொரீஇய வேட்கைப் புரையோர்
மேயின ருறையும் பலர்புகழ் பண்பின்
நீபுறந் தருதலி னோயிகந் தொரீஇய
யாணர்நன் னாடு்ங் கண்டுமதி மருண்டனென்
 
35மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா
தீத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற்
புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி
ஏம மாகிய சீர்கெழு விழவின்
நெடியோ னன்ன நல்லிசை
 
40ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே.
 

துறை  : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகு வண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்  : நிரையவெள்ளம்.

உரை : மழை  தவழ்பு  தலைஇய  மதில் மரம் முருக்கி - மேகம்
தவழ்ந்து    தங்கும்      மதிற்சுவர்களையும்   அதனை    யடுத்த
காவற்காடுகளையும் அழித்து;  நிரை  களிறு  ஒழுகிய - வரிசையாகக்
களிறுகள்   செல்லும்;   நிரைய   வெள்ளம் - பகைவர்க்கு   நிரயத்
துன்பத்தைத் தரும் நின் படைவெள்ளமானது;  பரந்து - நாற்றிசையும்
பரந்து சென்று;ஆடு கழங்கு அழிமன் - தாம் ஆடிக் காணும் கழங்கால்
உள்ளமழிந்து  அகநகர்க்  கண்ணே   மடிந்துறையும்   மன்னருடைய;
மருங்கு  அறுப்ப  -  சுற்றமாகிய   தானையினைக் கெடுக்க; வேண்டு
புலத்து யாண்டு தலைப் பெயர இறுத்து - நீ அழிக்கக் கருதிய நாட்டில்
ஓர்  யாண்டு  கழியு  மளவும்   தங்கி;  முனை எரி பரப்பிய - போர்
முனைப்பட்ட  ஊர்களில்  தீப்பரவக்   கொளுத்தி  யழிக்க  வெழுந்த;
துன்னருஞ்  சீற்றமொடு - நெருங்குதற்கரிய சினத்துடன்; கால் பொர -
காற்று மோதுதலால்;கொடிவிடு குரூஉப் புகை பிசிர - கொடிவிட்டெழும்
நிறமமைந்த புகை பிசிராக  வுடைந்து கெட; அழல்  கவர் மருங்கின் -
இட்ட தீப்பட்டு  வெந்தழிந்த  இடங்களைப்போல; உருவறக் கெடுத்து
அத் தீப் பரவாத விடங்களைத் தம்  முருக்குலைய  நீ  அழித்தலால்;
தொல்  கவின் அழிந்த - பழைய  அழகிய நிலை யழிந்த; கண்ணகன்
வைப்பின் - இடமகன்ற ஊர்களையும்,

நிரைய     வெள்ளம்  மன்மருங் கறுப்ப, சீற்றமொடு நீ உருவறக்
கெடுத்தலால்  தொல்  கவின் அழிந்த வைப்பின் எனக் கூட்டுக. பகை
மேற்   செல்வோர்   போர்வினை  செய்தற்குரிய  காலமும்  இடமும்
வாய்ப்ப   வெய்துங்காறும்  இறுத்தல்  வேண்டுதலாலும்,  அதற்குரிய
காலமும் ஓர் யாண்டாதலாலும், “யாண்டுதலைப் பெயர வேண்டு புலத்
திறுத்து” என்றார்  (மதுரைக்.150).  “வேந்துறு   தொழிலே யாண்டின 
தகமே”      (தொல்.    கற்.      48)       என்பது       விதி
மேல்வந்தபோதே    அடிபணியாது    நெடிது   தங்குமாறு   இகல்
விளைத்தமையால்,    அதற்கேதுவாய    பகைவர்    வலியழிப்பான்
முனையிடத்தே  எரியிட்டுக்   கொளுத்தி   மாறாச்   சினம் சிறந்து
விளங்குதலின்,    சேரலாதனை,   “முனையெரி  பரப்பிய துன்னருஞ்
சீற்றமொடு”       நின்றானென்றும்,     தீயிடாது     பொருதழித்த
இடங்கள்  தீயால்  அழிவுற்ற இடங்கள் போல உருக்குலைந் தழிந்தன
என்பார்,   “அழல்கவர்   மருங்கின்  உருவறக்  கெடுத்து”  என்றும்
கூறினார்.  மருங்கின் என்புழி, இன்னுருபு ஒப்புப் பொருட்டு. செய்தெ
னெச்சம்  காரணப் பொருட்டு. மரம் ஈண்டுக் காவற்காடு; மதிற்கதவின்
பி்ன்னே  கிடந்து  அதற்கு  வன்மைதரும்  கணையமரம் எனினுமாம்.
களிறுகள்  நிரை நிரையாகச் செல்லும் இயல்பினவாதலின், “நிரைகளி”
றென்றும்,   அவை   எண்ணிறந்தனவாய்   வெள்ளம்போல்  பரந்து
சேறலின்,    “நிரைகளிறொழுகிய    வெள்ளம்”    என்றும்,   இவ்
யானைப்படையொடு கூடிய பெருந்தானை பகைவர்க்கு நிரயத் துன்பம்
போலும்  துன்பத்தைச்  செய்யும்  இயல்பிற்றாதல்  தோன்ற,  நிரைய
வெள்ளமென்றும்   கூறினார்.  “விரவுக்  கொடி  யடுக்கத்து நிரையத்
தானையொடு”  (சிலப்.  26  :  37) எனச் சான்றோர் கூறுதல் காண்க.
“நிரையவெள்ள   மென்றது,   பகைவர்க்கு   நிரையபாலரைப்போலும்
படைவெள்ள  மென்றவாறு; நிரைய மென்றது, நிரையத்து வாழ்வாரை;
இச்  சிறப்பானே  இதற்கு  (இப்  பாட்டிற்கு”,  நிரையவெள்ளமென்று
பெயராயிற்”    றெனப்   பழையவுரை   கூறுகிறது.   “யானையுடைய
படைகாண்டல்   முன்னினிதே”   (இனி.   40  :  5)  என்பவாகலின்,
யானைப்படை  விசேடித்துரைக்கப்பட்டது  அரணிடத்தே இவற் கஞ்சி
மடிந்துறையும்   பகை   மன்னர்   வெற்றியெய்துவது  காண்பாராய்க்
கழங்கிட்டு   நோக்கித்   தமக்கு   அது   வாராமை  யறிந்து  ஊக்க
மழிந்திருத்தல்  தோன்ற, “ஆடுகழங் கழிமன்” என்றார். இனி, “எல்லா
மெண்ணின்   இடுகழங்கு   தபுந”   (பதிற்.   32)   என்பதுகொண்டு.
எண்ணிறந்த   தானைவீரரையுடைய  கூட்டம்  என்றற்கு,  “ஆடுகழங்
கழிமன்  மருங்கு”  என்றா  ரெனினுமாம்.  மருங்கு,  சுற்றம்; ஈண்டுத்
தானைவீரர்  மேற்று.  நிரைய  வெள்ளம்  மன்மருங்  கறுப்ப  இவன்
தீயிட்டும் படைசெலுத்தியும் அழித்த செய்தியை, “உருவறக்  கெடுத்து”
என்றார். காற்று மோதுதலால் தீயானது நாற்றிசையும் பரந்து எரிதலின்.
எழுகின்ற  புகை எங்கணும் பரவி நுண்ணிய பிசிராய்க் கெட்டு மறைய,
எரியுமிடம்  கரிந்து  உருவழிந்து  சிதைதல்  கூறியது,  நாடு உருவறக்
கெட்டழிதல் புலப்படுத்தற்கு. இஃது எரிபரந்தெடுத்தல். 
 

9 - 15 வெண்பூ................வந்திசினே.

உரை : வெண்பூ   வேளையொடு - வெள்ளிய   பூக்களையுடைய
வேளைக்  கொடியும்;  பைஞ்சுரை  கலித்து  - பசிய  சுரைக்கொடியும்
தழைத்து  வளர; பீர் இவர்பு பரந்த - பீர்க்கங்  கொடியேறிப் படர்ந்த;
நீரறு  நிறை  முதல்  -  நீரற்ற  உழுசால்களில்;  முதல் சிதை சிவந்த
காந்தள்  -  வேரோடு  காய்ந்தழிந்த சிவந்த காந்தள் நிறைந்து; புலவு
வில் உழவின் புல்லாள்   வழங்கும் - புலால்   நாறும்    வில்லேந்தி
உயிர்க்கொலை  புரியும்  புல்லிய  மறவர்  உறையும்; புல்லிலை மூதில்
வைப்பின்   -   பனையோலை   வேய்ந்த  பாழ்  வீடுகளே   யுள்ள
ஊர்களையுடைய;   புலஞ்   சிதை  அரம்பின்  -   பகைப்புலங்களை
யழிக்கும்  நின்  மறமாண்  பினை;  அறியாமையால்   மறந்து  - தம்
அறியாமையாலே  நினையாது;  நின்  துப்பெதிர்ந்த  பகைவர் -  நின்
பகைமையை   யேறட்டுக்கொண்ட   பகைவருடைய;   நாடும்  கண்டு
வந்திசின் - நாடுகளையும் பார்த்து இங்கே வந்தேன். எ - று. 
 

புல்லிலை     மூதில்  வைப்பின்  நாடு,  நின் பகைவர் நாடு என
இயைக்க.  இவ்வைப்பின்கண் வாழ்வோர்  நீங்கிவிட்டமையின், வீடுகள்
பாழ்படுதலால்,   அவற்றில்  வேளையும்  சுரையும்  தழைத்து  வளர,
கூரையில் பீர்க்கங்கொடி ஏறிப் படர்ந்திருக்க, உழுதொழித்த சால்களில்
மழை   பெய்தபோது  முளைத்து  மலர்ந்த   காந்தள்  நீரற்றமையின்
வேரோடு   புலர்ந்தமை  கூறுவார்,  “நீரறு  நிறைமுதல்  சிதைசிவந்த
காந்தள்”    என்றார்.    வேளைப்பூ   வெள்ளிதாதலை,   “வெண்பூ
வேளையொடு  சுரை  தலை  மயக்கிய, விரவு மொழிக் கட்டூர்” (பதிற்.
90)  என்று  பிறரும்  கூறுதல்  காண்க.  “நீரறு  நிறைமுதற்  சிவந்த
காந்தள்” என்பதற்கு, நீர் அற்றுப்  புலர்ந்தமையின், வளர்ச்சி நிறைந்த
அடிமுதல்   வாடிச்   சிவந்த    காந்தள்  என்றுரைத்து,  நிறைமுதல்
உடையதாயினும்,   நீரறுதலால்   தாங்காது   சிதைந்தமை   தோன்ற,
“நிறைமுதற்  சிவந்த  காந்தள்  முதல்சிதை  மூதில்”  என்றும்,  செங்
காந்தள்   என்னாது   சிவந்த  காந்தளென்றதனால்,  முதல்நிறைவுற்ற
போழ்து சிவப்பேறிய காந்தளென்றும்  கூறுதலுமுண்டு. ஆள் வழக்கற்ற
இல்லங்களைக்  கூறியவர்.  இனி,  இம்மையில்   இசையும். மறுமையிற்
றுறக்க  வின்பமும்  விரும்பும்  மறவர்  போலாது ஆறலைத்தொழுகும்
கொடுவினை  மாக்களுறையும்   இல்லங்களைக்  கூறலுற்று,  அவரைப்
“புலவுவில்     லுழவிற்     புல்லா”     ளென்றும்,    தீவினையாற்
கொள்ளும்பொருள்   வாழ்விற்கு   நலம்   பயவாமையால்,  அவர்தம்
இல்லங்கள்  இலம்பாட்டிற்  குறையுளாய்ப்  புல்லிலை வேயப்பட்டுள்ள
வென்பார்,  “புல்லிலை வைப்பு” என்றும் கூறினார்.  பழையவுரைகாரர்,
“புல்லிலை   வைப்பென்றது,   புல்லிய   இலைகளாலே  வேயப்பட்ட
ஊரென்றவாறு;  இதனை நூலாக் கலிங்கம் (பதிற். 12) என்றது போலக்
கொள்க”   என்றும்,  “புல்லா  ளென்றது,  புல்லிய  தொழிலையுடைய
ஆறலை கள்வரை” யென்றும் கூறுவர்.

இவ்   விருவகை வைப்பினையுமுடைய நாடு பகைவர் நாடென்றும்,
அவர்   சேரலாதன்   தன்னைப்   பகைத்தார்  புலங்களில்  செய்யும்
அரம்பின்,   திறத்தை  யறியின்  அடிவணங்கி   அவன்  அருள்நாடி
யிருப்ப  ரென்றற்கு, “அறியாமையால் மறந்து”  என்றும், அம்மறதியின்
பயனே   இக்   கேடென்றும்    கூறினாராயிற்று.   அரம்பு  செய்தல்,
துன்புறுத்தல்.  அரம்பு  செய்தலைப் பகைவர்க்  கேற்றி, அச்செயலால்
“நின்  துப்பு  அறியாமையால்  மறந்து  எதிர்ந்து” கெட்டனர் என்றலு
மொன்று.   துப்பு,   பகைமை;   “துப்பெதிர்ந்  தோர்க்கே  யுள்ளாச்
சேய்மையன்” (புறம். 380).
 

16 - 24: கடலவும்........................சேரலாத.

உரை : கடலவும் - கடல்படு   பொருளும்;  கல்லவும் - மலைபடு
பொருளும்;   யாற்றவும்  -  ஆறு  பாயும்  முல்லை  மருதம்  என்ற
நிலங்களி   லுண்டாகும்   பொருளும்;பிறவும்   -   வேறு   நாட்டுப்
பொருள்களுமாகிய;   வளம்   பலநிகழ்   தரும்  -  வளம்  பலவும்
பெறப்படும்;  நனந்தலை  நன்னாட்டு  - அகன்ற நல்ல நாட்டிலுள்ள;
விழவு  அறுபு  அறியா - இடையறாத விழாக்களைச் செய்யும்்்; முழவு
இமிழ்  மூதூர்  -  முழவு  முழங்கும் மூதூர்களில்; கொடி நிழற் பட்ட
பலவகைக்  கொடிகளின் நிழலிலேயிருக்கும்; பொன்னுடை நியமத்து -
பொன்னை   மிகவுடைய  கடை  வீதிகளிலே;  சீர்பெறு  கலி  மகிழ்
இயம்பும்   முரசின்   -   சிறப்புப்பெற்ற   வெற்றியும்   கொடையும்
தெரிவிக்கும்  முரசு  முழங்கும்;  வயவர்  -  வலிமிக்க  வீரர்களுக்கு;
வேந்தே   -   அரசே;   பரிசிலர்   வெறுக்கை   -  பரிசிலருடைய
செல்வமாயுள்ளோனே;  தார்  அணிந்து  - மாலையணிந்து; எழிலிய -
உயர்ந்த;  தொடி  சிதை மருப்பின் - பூண்கெட்ட கோட்டினையுடைய;
போர்வல்     யானை  -   போரில்   வல்ல    யானைகளையுடைய;
சேரலாத-நெடுஞ்சேரலாதனே எ-று.

நானிலத்துப்     படும்  பொருளனைத்தும்   கூறலுற்றுக் கடலால்
நெய்தலும்,  கல்லால்  குறிஞ்சியும்  கூறினமையின்,  ஏனை  முல்லை
மருதங்களை   “யாற்றவும்”   என்றதனாற்   பெறவைத்தார்.   இவை
யனைத்தும்   தன்னாட்டிற்   படுவனவாதலின்,  வேறுநாடுகளிலிருந்து
வந்திருப்பனவற்றைப்   “பிறவும்”   என்றதனால்  தழீஇக்கொண்டார்.
கடவுளர்க்கு  விழாவும்  மக்கட்குத்  திருமண விழாவும் இடையறாதது
நிகழ்தலின்,  “விழவறு பறியா முழவிமிழ் மூதூர்” என்றார். பொன்னும்
பொருளும்  நிறைந்திருத்தலால்  “பொன்னுடை  நியமத்து”  என்றார்;
“திருவீற்  றிருந்த  தீ  துதீர்  நியமம்” (முருகு. 70) என்று நக்கீரனார்
கூறுதல்   காண்க.   இக்  கடைத்  தெருக்களில்  வெற்றி  குறித்தும்,
விழாக்குறித்தும்  கள்,  ஊன் முதலியன விற்பது குறித்தும் பல்வகைக்
கொடிகள்    எடுக்கப்படுவது   உணர்த்துவார்.   “கொடி  நிழற்பட்ட
நியமத்து” என்றார்; “ஓவுக்கண் டன்ன விருபெரு நியமத்துச், சாறயர்ந்
தெடுத்த உருவப் பல்கொடி, வேறுபல் பெயர வாரெயில் கொளக்கொள,
நாடோ றெடுத்த நலம்பெறு புனைகொடி, புகழ்செய் தெடுத்த விறல்சால்
நன்கொடி,   கள்ளின்   களிநவில்   கொடியொடு  நன்பல, பல்வேறு
குழூஉக்கொடி  பதாகை  நிலைஇப்,  பெருவரை மருங்கின் அருவியின்
நுடங்க”  (மதுரை. 365-74) என்று பிறரும் கூறுதல் காண்க. வீரர் தாம்
போரிலே  பெற்ற வெற்றியும், ஆங்குப் பெற்ற பொருளை இரவலர்க்கு
வழங்கும்  கொடையும் தெரிவிப்பாராய் முரசு முழக்குதலின், “சீர்பெறு
கலிமகிழ்    இயம்பும்    முரசின்    வயவர்”    என்றார்.   இனிப்
பழையவுரைகாரர்,   “சீர்பெறு  கலிமகிழ்  இயம்பும்  முரசின்   வயவ
ரென்றது,  வெற்றிப்  புகழ்பெற்ற  மிக்க  மகிழ்ச்சியானே  ஒலிக்கின்ற
முரசினையுடைய  வீரரென்றவா” றென்பர். கலிமகிழ், வெற்றி குறித்துக்
கொடை வழங்கும் ஆரவாரத்தோடு கூடிய பெருஞ்சிறப்பு; விழாவுமாம்.
வயவர்க்கு  வேண்டுஞ்  சிறப்பளித்து  நன்கு ஓம்புவதனால், “வயவர்
வேந்தே”    என்றார்.   பரிசிலர்க்குப்   பெருஞ்   செல்வம்  நல்கி
இன்புறுத்துவது   பற்றிப்   “பரிசிலர்       வெறுக்கை”   யென்றார். 
எழில்,     உயர்ச்சி.     “அம்பகட்     டெழிலிய      செம்பொறி
யாகத்து”  (புறம்.  68)  என்புழிப்போல.  ஈண்டு  எழிலிய என்பதற்கு
அழகிய  என்று  புறநானூற்  றுரைகாரர் கூறுவர். உயர்ச்சி யென்பதே
சிறப்புடைத்தாதலறிக.  பகைவர் மதிற்கதவினைக் குத்திப்  பிளத்தலால்
பூண் சிதைந்து நுனி மழுகிய கோட்டினை யுடைமையால், “தொடிசிதை
மருப்பின்  போர்வல் யானை” என்றார்; “கடிமதிற் கதவம்  பாய்தலின்
தொடி  பிளந்து,  நுதிமுக மழுகிய மண்ணைவெண் கோட்டுச், சிறுகண்
யானை” (அகம். 24) என ஆவூர் மூலங்கிழார் ஓதுதல் காண்க.
   

24 - 34. நீவாழியர்.......................மருண்டனென்.

உரை : வெய்துறவு     அறியாது    நந்திய  வாழ்க்கை - பகை
முதலியவற்றால்   மனம்  துன்புறுவதின்றிப்  பல  நலமும்  பெருகிய
வாழ்க்கையினையும்;    ஒன்று   மொழிந்து   அடங்கிய   கொள்கை
உண்மையே   யுரைத்துப்  புலனைந்து  மடங்கிய  ஒழுக்கத்தினையும்;
நிரையே  மொரீஇய  வேட்கை  -  நிரய மெய்தாவகையில் நல்வினை
செய்து  நீங்கிய  அற  வேட்கையுமுடைய;  புரையோர் - பெரியோர்;
செய்த   -   தாம்   செய்யும்  நல்லறங்களையே;  மேவல்  அமர்ந்த
சுற்றமோடு    -    தாமும்    விரும்பிச்   செய்து   சூழ்ந்திருக்கும்
சுற்றத்தாருடன்;   பதி   பிழைப்   பறியாது  -  வாழ்பதி  யிழுக்கும்
குற்றமறியாது; துய்த்தல் எய்தி - நுகர்தற்குரியவற்றை இனிது நுகர்ந்து;
மேயினர்  உறையும்  -  விரும்பி  வாழும்; பலர் புகழ் பண்பின் நீ -
பலரும்     புகழும்     பண்பினையுடைய     நீ;    புறந்தருதலின்
காத்தோம்புதலால்;  நோய்  இகந்து ஒரீஇய - நோய் சிறிது மின்றாகிய;
யாணர்  நன்னாடும்  -  புது  வருவாயினையுடைய நல்ல நாட்டையும்;
உண்டு  உரை  மாறிய  மழலை  நாவின்  - உண்ணத் தகுவனவற்றை
நிரம்ப      வுண்டதனால்       நாத்தடித்துக்       குழறும்மழலை
நாவினால்;மென்சொற்கலப்பையர்-மெல்லியசொற்களை  வழங்கும் யாழ்
முதலிய    கருவிகளைப்    பெய்த    பையினையுடைய     இயவர்;
இவ்வுலகத்தோர்க்கு  நீ வாழியர் என - இவ்வுலகத்தோர் பொருட்டு நீ
வாழ்வாயாக  என்று;திருந்து தொடைவாழ்த்த குற்றமில்லாதயாழிசைத்து
வாழ்த்த; கண்டு - என் இரு கண்களாலும் கண்டு; மதி மருண்டனென்
- மதிமயங்கப் போயினேன் எ - று.

வாழ்க்கையினையும்      கொள்கையினையும்,  வேட்கையினையும்
உடைய புரையோர், சுற்றமொடு, பதிபிழைப்  பறியாது, துய்த்தல் எய்தி,
உறையும்  நாடு,  நீ  புறந்தருதலின், ஒரீஇய நன்னாடு என இயைத்து,
இந்  நாட்டினை,  கலப் பையர் திருந்துதொடை வாழ்த்தக் கண்டு மதி
மருண்டனென்  என முடிக்க. இவன் வாழ்வு உயர்ந்தோர் தாழ்ந்தோர்
செல்வர்  இரவலர்  முதலிய பலர்க்கும் நலம் பயத்தலின், “நீ வாழியர்
இவ்வுலகத்தோர்க்கு  என”  இயவர் வாழ்த்தின ரென வறிக. உண்ணத்
தகுவனவாவன  சோறும்,  ஊனும்,  கள்ளு   முதலாயின.  உண்டதன்
பயனாக    உரை    குழறுதலின்,   ஈண்டுக்   கள்ளே   சிறப்பாகக்
கொள்ளப்படும்;   “உண்டு   மகிழ்  தட்ட  மழலை  நாவின்,  பழஞ்
செருக்காளர் தழங்கு   குரல்”   (மதுரைக். 668-9)   என்று  மாங்குடி
மருதனார்   கூறுதல்     காண்க.     கலப்பை,    யாழ்   முதலிய 
இசைக் கருவிகளை    யிட்டுவைக்கும்   பை;   “காவினெங்   கலனே
சுருக்கினெங் கலப்பை” (புறம்.  206) என  வருதல் காண்க; “வாங்குபு
தகைத்த   கலப்பையர்”  (பதிற்.   23)   எனப்   பிறாண்டும்  வரும்.
தொடை,  யாழ்  நரம்பு ; “தேஎந்தீந்  தொடைச்  சீறியாழ்ப்   பாண” 
(புறம். 70) என்றாற் போல; ஈண்டு   ஆகுபெயராய் யாழ்மேலதாயிற்று. 
பகை,   பசி,   பிணி முதலியவற்றால்  வாழ்வோர்  துன்புறுதலின்மை
தோன்ற,  “வெய்துற வறியாது நந்திய வாழ்க்கை” யென்றார். நந்துதல், 
பெருகுதல். 
  

இனி,  இவன் நாட்டில் பெரியோர் மேயினர் உறைதற்குக் காரணங்
கூறுவார்,   அவர்தம்   வாழ்க்கையும்   கொள்கையும்   வேட்கையும்
விதந்தோதினார்.  வெய்துறவைப்  பயக்கும்  பகை   யச்சம் வறுமைத்
துன்பங்கள்  எஞ்ஞான்றும்  இலவாதலின்,  அவர் அவற்றை யறிந்தில
ரென்பார்,  “வெய்துறவறியாது”  என்றும்,  எனவே  அவர் அறிந்தன
இம்மையிற்  புகழ்  பயக்கும்  மெய்ம்மையும்,   மறுமையில்  இன்பம்
பயக்கும்   அறவுணர்வுமே  யென்பார்,  “ஒன்று  மொழிந்  தடங்கிய
கொள்கை”   யென்றும்,   “நிரையம்  ஒரீஇய  வேட்கை”  யென்றும்
கூறினார். “பொய்யாமை யன்ன புகழில்லை” (குறள். 296)  என்றதனால்
ஒன்று     மொழிதல்     புகழ்      பயக்குமாறறிக.      அடங்கிய
கொள்கையுடையார்க்கு  இவ்வுலக  வின்பத்தில் வேட்கை யின்மையின்,
உயர்நிலையுலகத்து  இன்ப வேட்கையும், அதற்குரிய தவவொழுக்கமும்
அவர்பால்  உளவாதல்  கண்டு,  “அடங்கிய  கொள்கை”யும் “நிரைய
மொரீஇய  வேட்கை”யும்  உடையோ ரெனச் சிறப்பித்தார் என வறிக.
கொள்கை,  ஒழுக்கம்;  “குலஞ்சுடும்  கொள்கை  பிழைப்பின்” (குறள்.
1019)  என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, அவர் வாழும் இயல்பு
கூறுவார்  அவருடைய  சுற்றத்தார்  அவர்  செய்தவற்றையே  தாமும்
விரும்பிச்  செய்து,  அச் செய்வினைக்கண் சிறந்த  இன்பமும் புகழும்
எய்துதலால் அவர்பால் அயரா அன்புற்றுச்  சூழ்ந்திருந்தன ரென்றற்கு,
“செய்த மேவ லமர்ந்த சுற்றமொடு” என்றார். செய்தன என்பது செய்த
என  அன் பெறாது நின்றது. “செய்த மேலமர்ந்த சுற்றமோ” டென்றது,
“மாண்டவென்   மனைவியொடு   மக்களும்   நிரம்பினர்,  யான்கண்
டனையரென்  னிளையரும்”  என்பதையும், “ஒன்று மொழிந் தடங்கிய
கொள்கை”  யினையுடைய  பெரியோ ரென்றது, “ஆன்றவிந் தடங்கிய
கொள்கைச்  சான்றோர்”  என்பதையும், “பதிபிழைப் பறியாது மேயின
ருறையும்”  என்றது, “வேந்தனும் அல்லவை செய்யான்  காக்கும்” (புற.
191)  என்பதையும்  சுட்டிநிற்பது  காண்க.  பகை,  பசி, பிணி முதலிய
காரணங்களால்  மக்கள் தாம் வாழும் நாட்டைவிட்டு வேறு நாட்டுக்குச்
செல்லும்  பண்பு,  அவர்  தம் நாட்டிற்குக் குற்றமாதலின், அத்தகைய
குற்றம்   இச்   சேரலாத   னோம்பும்   நாட்டிடத்தே  யின்மையின்,
“பதிபிழைப்  பறியாது துய்த்த லெய்தி” யென்றார், “பதியெழு வறியாப்
பழங்குடி” (சிலப். 1: 15) என்று அடிகளும் கூறுதல் காண்க. “நாடென்ப
நாடா வளத்தன” என்றதும் இக்கருத்தே பற்றியதென அறிக. பதியெழு
வறியாமை   உயர்குடிக்குப்  பண்பாதலின்,  எழுதலைக்  குற்றமாக்கி,
ஈண்டு  ஆசிரியர்,  “பதி  பிழைப்பு”  என்றாரென  வறிக.  பதியெழு
வறியாமைக்கு     ஏது    துய்ப்பன    யாவையும்    குறைவின்றிப்
பெறுவதாதலின், அதனைத் “துய்த்த லெய்தி” யென்று குறித்தார்.
 

பகைவர்     நாட்டையும் நின்னுடைய  யாணர்  நன்னாட்டையும்
கண்டபோது, அப் பகைவர் அறியாமை காரணமாக அவர் நாடெய்திய
சிறுமையும்,  நீ  புறந்தருதலால்  நோயிகந்  தொரீஇய  நின்னாட்டின்
பெருமையும் ஆக்கமும் எனக்குப் பெருவியப்புப்  பயந்தன வென்பார்,
“மதிமருண்டனென்” என்றார். இஃது இருநாட்டிடத்தும் கண்ட சிறுமை
பெருமை  பொருளாகப்  பிறந்த மருட்கை. “புதுமை பெருமை சிறுமை
யாக்க  மொடு,  மதிமை  சாலா மருட்கை நான்கே” (தொல். மெய். 7.)
என்று   ஆசிரியர்   கூறுதல்   காண்க.   “நீ  வாழியர்  இவ்வுலகத்
தோர்க்கெனத் திருந்துதொடை வாழ்த்த என முடித்து, இவ்வுலகத்தோர்
ஓக்கத்தின்  பொருட்டு  நீ  வாழ்வாயாகவெனச்  சொல்லித் திருந்திய
நரப்புத்   தொடையினையுடைய  யாழொடு  வாழ்த்தவென  உரைக்க”
என்றும்,  “செய்த  மேவ  லமர்ந்த  சுற்ற மென்றது, சுற்றத் தலைவர்
செய்த    காரியங்களைப்    பின்    சிதையாது   தாம்   அவற்றை
மேவுதலையுடைய   அத்தலைவரொடு   மனம்   பொருந்தின   சுற்ற
மென்றவா” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.

35 - 40. மண்ணுடை...................நயந்தே.

உரை : மண்ணுடை   ஞாலத்து  மன்னுயிர்க்கு - மண்ணுலகத்தில்
வாழும் நிலைபெற்ற உயிர்கட்கு; எஞ்சாது ஈத்து - குறைவறக்கொடுத்து;
கை  தண்டா  -  கை  போய்தலில்லாத; கைகடுந்துப்பின் கொடையும்
மிக்க  வன்மையுமுடைமையால்;  புரைவயின்  புரைவயின்  -  அறிவு
ஒழுக்கங்களால்  உயர்ந்த  குடிகட்கு;  பெரிய  நல்கி பெருமையுடைய
பொருள்களை வழங்கி; ஏமமாகிய சீர்கெழு விழவின் - இன்பம்  தரும்
சிறப்போடு  பொருந்திய  விழாவினையுடைய;  நெடியோன் அன்ன -
திருமாலைப் போன்ற; நல்இசை ஒடியா - நல்ல புகழ் குன்றாத; மைந்த
-  வலியினையுடையோர்;  நின்  பண்பு  பல  நயந்து  - நின்னுடைய
பல்வகைப்    பண்புகளையும்    காண    விரும்பியே   மேற்கூறிய
இருநாடுகளையும் கண்டு மதிமருண்டேன் எ - று.

மண்,    மண்ணணு, மண்ணணு செறிந்திருத்தல் பற்றி “மண்ணுடை
ஞால”  மென்பது  வழக்கு;  “மண்டிணிந்த நிலனும்” (புறம். 2) என்று
பிறரும்  கூறுப.  எஞ்சாது  ஈத்து  என்பதற்குத்  தனக்கென ஒன்றும்
கருதாது  அனைத்தையும்  ஈத்து என்றும் கூறுவர். எப்போதும்  ஈதல்
தோன்றக்  “கைதண்டா”  என்றார்.  கை, கொடை,  கைக்கு ஈகையே
துப்பா மென்றற்குக் “கைகடுந் துப்பின்” என்றார். புரை, உயர் குடிகள்.
அறிவு     ஒழுக்கங்களால்    உயர்ந்த    குடிமக்களை    ஓம்புதல்
அரசியலாதலின்  அவரைப் பேணும் செயலை, ‘புரைவயிற் புரைவயிற்
பெரிய நல்கி” என்றார். “புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி யென்றது,
உயர்ந்த    தேவாலயமுள்ள   இடங்களிலே   உயர்ந்த   ஆபரணம்
உள்ளிட்டவற்றைக்  கொடுத்து”  என்றவா  றென்பர் பழையவுரைகாரர்.
நெடியோன்,  திருமால்.  “உரைசால்  சிறப்பின்  நெடியோன்”  (சிலப்.
22:60)   என   வருதல்  காண்க.  காத்தலால்  உண்டாகும்  புகழைக்
கட்டுரைத்தலின்,  திருமாலை  யுவமித்தார்.  “புகழொத்  தீயே இகழுந
ரடுநனை”  (புறம்.  56)  என்று  சான்றோர்  கூறுதல்  காண்க. பண்பு,
அவரவர் தகுதியறிந் தொழுகும் நலம்.
 

முடிபு,     நின் பகைவர் நாடும் கண்டு வந்தேன்;  அதுவேயன்றி,
வேந்தே,  வெறுக்கை, சேரலாத, நீ புறந்தருதலின் நோயிகந் தொரீஇய
நின்  நாடும் கண்டு மதிமருண்டேன்; இவையிரண்டும் காணவேண்டின
காரணம்  யாதெனின், மைந்த நின் பண்பு பலவற்றையும் காண நயந்த
நயப்பாகும்  என  முடிபு செய்க. இதனால் அவன் வென்றிச் சிறப்பும்
தன் நாடு காத்தற்சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று.
  


1. கழங்குவழி - பாடம
2. கவினிழந்த - பாடம்
3. பீர்வாய் பரந்த - பாடம் 
4. செய்தன மேவல் - பாடம்


 மேல்மூலம்