துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : அடுநெய் யாவுதி. 1 - 7. சொல்....................ஆவுதி. உரை : எவ்வம்சூ ழாது விளங்கிய கொள்கை - பிற வுயிர்கட்குத் தீங்கு நினையாமல் விளக்கமுற்ற கொள்கையாலும்; காலை யன்ன சீர்சால் வாய்மொழி - ஞாயிறு போலத் தப்பாத வாய்மை யுரையாலும்; உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - உட்குப் பொருந்திய முறைமையினையுடைய முனிவர்களைப்பரவுதற்காக; சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்ற ஐந்துடன் போற்றி - சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமும் சோதிடமும் வேதமும் ஆகமமும் என்ற ஐந்தினையும் ஒருங்கே கற்று; அவை துணையாக - அவற்றா லெய்திய புலமையைத் துணையாகக்கொண்டு; கொண்ட தீயின் சுடர் எழு தோறும் - எடுத்த வேள்வித் தீயின்கண் சுடர் எழுந்தோறும்; விரும்பு மெய் பரந்த - உள்ளத்தெழுந்த விருப்பம் மெய்யின்கண் பரந்து வெளிப்படுதற்குக் காரணமான; பெரும் பெயர் ஆவுதி - பெரிய பொருளைப் பயக்கும் ஆவுதிப் புகையும் எ - று. உறுநோய் தாங்கல், பிற உயிர்கட்குத் தீங்கு நினையாமை எனத் தவத்திற் குருவென்று கூறிய இரண்டனுள், பிறவுயிர்க்குத் தீங்கு நினையாமை யுளதாகியவழி உறு நோய் தாங்கலாகிய ஏனையது தானே கைகூடுதலின், “எவ்வஞ் சூழாமை” யொன்றையே எடுத்தோதினார். எவ்வுயிர்க்கும் எவ்வம் நினையாதாரை, மன்னுயிரெல்லாம் கைகூப்பித்தொழு மென்ப வாகலின், அத் தொழுதகு ஒழுக்கத்தை “விளங்கிய கொள்கை” யென்றார். “குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின்” (குறள். 1019) என்பதனால் கொள்கை ஒழுக்கமாதல் காண்க. ஞாயிறு, நாட்காலையில் தோன்றி இருணீக்கி யொளி நல்குவது பற்றிக் காலை யெனப்பட்டது. ஞாயிற்றின் வாய்மை யுணர்த்துவது அது செய்யும் காலமாதல் பற்றிக் காலையை வாய்மைக்கு உவமையாக்கி, “காலையன்ன சீர்சால் வாய்மொழி” யென்றார். “வாய்மை யன்ன வைகல்” (கலி. 35) என்று பிறரும் கூறுப. “பொய்யாமை யன்ன புகழில்லை” (குறள். 296) என்பதுபற்றி வாய்மொழி, “சீர்சால் வாய்மொழி” யெனப்பட்டது. சொல்லும் செயலும் வாய்மை தெளிதற்குக் கருவியாமாயினும், சொல் சிறந்தமைபற்றி, வாய்மை யென்னாது “வாய்மொழி” யெனல் வேண்டிற்று. காலை யன்ன வாய்மொழி யென்றதற்குப் பழையவுரைகாரர், “ஆதித்தனைப்போல எஞ்ஞான்றும் தப்பாதாகிய மெய்ம்மொழி” யென்றும், “மொழியா னென ஆனுருபு விரிக்க; ஒடு விரிப்பினு மமையும்” என்றும் கூறுவர். எவ்வம் சூழாக் கொள்கையும் காலை யன்ன வாய்மையும் உடையராதலின், ஏனையோ ருள்ளத்தே அவரைக் கண்டவழி உட்குத் தோன்றுதலால் முனிவரை, “உருகெழு மரபின் கடவுள்” என்றார். பொறி புலன்களின் செயலெல்லையைக் கடந்தமைபற்றி மக்கட் பிறப்பினராகிய முனிவர் கடவுளெனப் பட்டனர் என்றுமாம் ; “முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கால், இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக்கூறிய, அக் கடவுள் மற்றக் கடவுள்” (கலி. 93) என முனிவர் கடவுளாகக் கூறப்படுமாறு காண்க. பேணியரென்னும் வினையெச்சம் கொண்ட வென்னும் வினைகொண்டது. சொல், சொல்லிலக்கணம், பெயர் - பொருள்; எனவே பொருளிலக்கணமாயிற்று. பழையவுரைகாரரும், “பெயர், பொருளிலக்கணம் சொல்லும் நூல்; ‘பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய’ (பதிற். 90) என இத் தொகையுண் மேலே வந்தமையால் பெயரென்பது பொருளாம்” என்பர். நாட்டம், சோதிடம். கேள்வி - வேதம்; வேதம் எழுதப்படாது வழிவழியாய்க் கேட்கப்படும் முறைமை யுடையதாகலின், கேள்வி யெனப்பட்டது. நெஞ்சம், ஆகமம்; சொல் முதலிய நான்கையும் முற்றக் கற்றுணர்வதால் உளதாகும் பயன் இறைவன் றாளை வணங்குத லென்பவாதலானும், அந்நெறிக்கண் நெஞ்சினை நிறுத்திப் பெறுதற்குரிய ஞானமும் வீடுபேறும் பெறுவிக்கும் சிறப்புடைய அருணூலாதல்பற்றி, ஆகமத்தை “நெஞ்ச” மென்றார். செவி முதலிய அறிகருவிகளால் உணரப்படும் உலகியற் பொருள்களின் பொய்ம்மையுணர்ந்து கழித்தவழி யுளதாய் நிற்கும் ஞானப்பொருள் நெஞ்சால் உய்த்துணரப்படுவதன்றிப் பிறிதோராற்றால் அறியப்படுவ தன்மையின், நெஞ்சினை அந் நெறிக்கட் செலுத்தி ஞானக்காட்சி பெறுவிக்கும் சிறப்புடைமைபற்றி, ஆகமத்தை நெஞ்சமென்றா ரென்றுமாம். இனிப் பழையவுரைகாரர், “நெஞ்ச மென்றது இந்திரியங்களின் வழியோடாது உடங்கிய தூய நெஞ்சினை” யென்பர்; ஏனைச் சொல் பெயர் முதலியன போல நெஞ்சம் நூற்காகாது வேறாயின், ஐந்தென்னும் தொகை பெறுதல் பொருந்தாதாதலால் அது பொருளன்மை யுணர்க. அவை, சொல் முதலிய ஐந்தன் அறிவு, வேதம் முதலியவற்றின் அறிவு பொது அறிவும், ஆகம அறிவு உண்மை யறிவுமாம் எனத் தேர்ந்து கொள்க. “ஆகம மாகிநின் றண்ணிப்பான்றாள் வாழ்க” (திருவா. சிவபு. 4) என மணிவாசகர் கூறுதல் காண்க. முனிவர் கடன் கேள்வியொடு பயின்ற வேள்வியால் இறுக்கப்படுமென்ப வாகலி்ன், கடவுட் பேணியர்கொண்ட தீ யென்றும், இத் தீயினை யோம்புதற்கு மேலே கூறிய சொல்முதலிய வைந்தன் கேள்வியும் துணையாமென்பது பற்றி அவை துணையாகக் கொண்ட தீயென்றும் கூறினார்; “வேள்வியால் கடவுளருத்தினை கேள்வியின், உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை” (பதிற். 70) என்று பிறரும் கூறுதல் காண்க. வேள்வித்தீ சுடர்விட்டெழுங்கால், அதனைக் கடவுளர் விரும்பி யேற்று வேட்கும் தம் கருத்து நிறைவிப்ப ரென்ற விருப்பந் தோன்றி உள்ளத்தே உவகை மிகுவிப்ப, அது மெய்யின்கண் வெளிப்பட்டு நிற்குமாறு தோன்ற, “விரும்பு மெய் பரந்த” என்றார். விருப்பு, விரும்பென மெலிந்தது; பழையவுரைகாரர், “விருப்பு மெய்யென்னும் ஒற்று மெலிந்தது” என்றார். ஆவுதியால் வேள்வி செய்வோர் தாம் கருதும் பொருள் கருதியவாறு பெறுப வென்னும் நூற்றுணிபு பற்றி ,“பெரும்பெயராவுதி” யென்றார். ஆவுதி, வடசொற் சிதைவு. 8 - 13. வருநர்...........ஆவுதி. உரை : வருநர் வரையார் வார வேண்டி - தம்பால் வருவோர் வரைவின்றி யுண்ண வேண்டி; விருந்து கண் மாறாது உணீஇய பாசவர் - விருந்தோம்பற் கின்றியமையாத அன்பு மாறாதே உண்பித்த ஆட்டு வாணிகர்; ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங்குறை - ஊனை வெட்டும் மணைமேல் வைத்துக் கொத்தித் துண்டித்த நல்ல நிணம் பொருந்திய இறைச்சி; குய்யிடு தோறும் கடலொலி கொண்டு ஆனாது ஆர்ப்ப - வேக வைத்துத் தாளிதம் செய்யுந்தோறும் கடலொலிபோல அமையாது ஒலிக்க; செழு நகர் நாப்பண் - செழுமையுடைய மனையின்கண்ணே; அடும் மை எழுந்த அடு நெய் ஆவுதி - அடுதலாற் புகையெழுந்த அடிசிலின்கண் பெய்த நெய்யாகிய ஆவுதிப் புகையும். எ - று. என்றது, விருந்தாய் வந்தார் உண்ணுங்கால் அவர்க்குப் புகையெழ இட்ட அடிசிற் சோற்றி்ல் பெய்யப்படும் நெய்யாகிய ஆவுதி என்றவாறாம். அடு நெய், அடிசில் நெய். இஃது உருக்கிப் பெய்யப்படுதலின் அடு, நெய்யெனப்பட்டது. பாசவராவார்ஆட்டு வாணிகர். இவர்பால் வாணிபம் குறித்துப் பலர் நெடுந் தொலைவிலிருந்தும் வருதலின், அவரை விருந்தேற்றோம்பலும் இவர்க்குக் கடனாதலால், விருந் துண்பிக்குமிடத்து அவர்கள் தாம் இடுவனவற்றை நிரம்ப வுண்டல் வேண்டி விருந்தோம்பற் கின்றியமையாத அன்பு மிக வுடைய ரென்பது தோன்ற, “வருநர் வரையார் வார வேண்டி, விருந்து கண் மாறாது” என்றார். வார்தல், சேரக் கொள்ளுதல். அகத்தெழும் அன்பு அவ்வளவில் அமையாது முகத்தினும் சொல்லினும் இனிது விளங்கித் திகழ வேண்டுதலின், “விருந்துகண் மாறாது” என்றார். தம்மை நோக்கி வரும் விருந்தினர் குழைந்து வேறிடம் பெயர்ந்து செல்லாதபடி முகத்தால் இனியராய் வரவேற்கும் சிறப்புத் தோன்றக் “கண்மாறாது” என்றா ரென்றும், விருந்துகண் மாறாது உணீஇய வென்பதைக் கண் மாறாது விருந்தினர் உணீஇய வென வியைத்து, வேறிடம் மாறிச் செல்லாது தம்மிடமே நின்று தமது விருந்துணவை யுண்டற்பொருட்டு என்றும் உரைப்பினுமமையும். உணீஇய வென்பது பிறவினைப் பொருளில் வந்த பெயரெச்சம் ஊனம், இறைச்சி கொத்தும் குறடு என்பது பழையவுரை. ஊனை வைத்துக் கொத்தித் துண்டிப்பதற்கு அடிக்கட்டையாய்ப் பயன்படும் மர மணையை “ஊனம்” என்று வழங்குப. “ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை” யென்றதனால், இக் குறைகள் சோற்றோடு ஒருங்கு பெய்து சமைக்கப்படு மென்பது விளங்கும். துவையும் கறியும் பலவகையவாதலின், “குய்யிடு தோறும்” என்றார். மை, புகை; அடிசிற்கண் அடு நெய்யைப் பெய்தவுடன் புகை யெழும் விரைவு தோன்ற, எழுந்தவென இறந்தகாலத்தாற் கூறினார். கொழுங் குறை குய்யிடு தோறும் கடலொலி கொண்டு ஆனா தார்ப்ப, அடும் மையெழுந்த ஆவுதியென வியையும். பழையவுரைகாரர், ‘கடலொலி கொண்டு ஆர்ப்ப’ வெனக் கூட்டி, “ஆர்ப்ப வெழுந்த வென முடிக்க” என்று கூறி, “கடலொலி கொண்ட வென்பது பாடமாயின், கடலொலி கொண்ட நகர் என்க” என்பர். விருந்தோம்பலும் வேள்வியெனப்படு மாதலின், அதுகுறித்து அடும் நெய்யும் ஆவுதி யெனப்பட்டது; “இனைத் துணைத் தென்பதொன் றில்லை விருந்தின், துணைத் துணை வேள்விப் பயன்” (குறள். 87) என்று சான்றோர் கூறுதல் காண்க. விருந்தினரை யுண்பித்தற்குச் சமைக்கப்படும் உணவின்கட் பெய்யப்படும் நெய்யை அடுநெய் யாவுதி யெனச் சிறப்பித்த நலத்தால் இப்பாட்டும் இத் தொடராற் பெயர் பெறுவதாயிற்று. இனி, பழையவுரைகாரர், “அடு நெய்யை யாவுதி என்றது விருந்துபுறந் தருதலையும் ஒரு வேள்வியாக்கி, ஆள்வினை வேள்வி யென்று ஒரு துறையாக நூலுட் கூறலான் என்பது” என்றும், “ இச் சிறப்பானே இதற்கு அடுநெய் யாவுதி யென்று பெயராயிற்” றென்றும் கூறுவர். 14 - 19. இரண்டுடன்..............மார்ப. உரை : இரண்டுடன் கமழும் நாற்றமொடு - பெரும் பெயராவுதி அடு நெய் யாவுதி யென்ற இருவகை ஆவுதிப் புகை கமழும் நறிய புகை மணத்தால்; வானத்து நிலைபெறு கடவுளும் விழைதக - வானுலகத்தில் நிலைபெற்ற கடவுளர்தாமும் விருப்பம் கொள்ள; ஆர் வளம் பழுநிய ஐயந்தீர் சிறப்பின் - குறையாத வளம் நிறைந்த சிறப்பினையும்; மாரியங் கள்ளின் - மழை போல் சொரியப்படும் கள்ளினையும்; போர் வல் யானை - போரிலே வல்ல யானையினையும்; போர்ப்புறு முரசம் கறங்க - ஏற்றுரிவை போர்த்த போர் முரசம் முழங்க; ஆர்ப்புச் சிறந்து - ஆரவாரம் மிக்குச் சென்று; நன் கலம் பேணித் தரூஉம் மண் படு மார்ப பகைவர் திறையாகத் தரும் நன் கலங்களைப் பேணிக் கொணரும் மண்பட்ட மார்பையும் உடையவனே எ - று. இரண்டும் உடன்கமழும் நாற்றத்தால் கடவுளும் விழைதக, வளம் பழுநிய சிறப்பினையும், கள்ளினையும், யானையினையும் மண்படு மார்பினையுமுடையோய் என இயையும் நாற்றமொடுஎன்பதில், ஒடு ஆனுருபின் பொருட்டு, நாற்றம், நறுமணம். “ஆவுதி யென்ற விரண்டனையும் அவற்றானாய புகைமேற் கொள்க. கடவுளும் விழைதக வென்றது, கடவுளரும் இவ்வாறு நாம் அறஞ்செய்யப் பெறின், அழகிது என்று அது விரும்ப வென்றவா” றென்று பழையவுரைகாரர் கூறுவர். பேணி யென்பதனை, நன்கலம் பேணித் தரூஉம் எனக் கூட்டிக் கொள்க. இனி, பழையவுரைகாரர்,“பேணி யென்றது முன் சொன்ன வேள்வியால் தேவர்களையும், பின்பு அதனோடு ஒப்பித்துச் சொன்ன ஆள்வினை வேள்வியால் விருந்தாய் வரும் மக்களையும் பேணியென்றவாறு” என்றும், “அதனைத் திரித்துப் பேணப் பழுநிய வென முடிக்க” வென்றும் கூறுவர். வேள்விக்கண்ணெழும் நாற்றத்தை வானுலகத்துத் தேவர் விரும்புவ ரென்ப வாதலின், “இரண்டுடன் கமழும் நாற்றமொடு வானத்து நிலைபெறு கடவுளும் விழைதக” என்றார்; பிறரும், “வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவி னோரும்” (புறம். 62) என்பது காண்க. ஆர்வளம் பழுநிய சிறப்பாவது, “கொடுக்கக் கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வத்திலே நின்று பழுத்த சிறப்பு” என்பது பழையவுரை. ஆர்வளம் நிறைந்தவழி அதனாற் பிறக்கும் சிறப்பின்கண் ஐயம் பிறவாமையின், “ஐயந்தீர் சிறப்பு” என்றார். கள்ளிற் போர்வல் யானை எனற்பாலது ஒற்று மெலிந்து “கள்ளின் போர்வல் யானை” என நின்றது. மண்படு மார்பம் - நறுஞ் சாந்தால் புனையப்பட்ட மார்பு; ‘மகளிராய்ந்த, மோட்டுவெண் முத்தமின்னு முகிழ்முலை யுழுது சாந்தம், கோட்டுமண் கொண்ட மார்பம்” (சீவக. 2303) என்று பிறரும் கூறுதல் காண்க. இனிப் பழையவுரைகாரர், “மண்படு மார்ப வென்றது பகைவர் மண்ணெல்லாம் படுகின்ற மார்ப” என்பர். 20 - 24. முல்லை..............மெய்ம்மறை. உரை : முல்லைக் கண்ணி - முல்லைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணி யணிந்த; பல்லான் கோவலர் - பலவாகிய ஆனிரைகளையுடைய கோவலர்; புல்லுடை வியன் புலம் பல்லா பரப்பி - புல்லை நிறையவுடைய விரிந்த புலத்தில் அந் நிரை பலவற்றையும் மேயவிட்டு; கல் உயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம் - கற்கள் உயர்ந்த காட்டிடத்தே ஒளி திகழும் மணியைப் பெறுகின்ற; மிதியற் செருப்பின் பூழியர் கோவே - மிதியாகிய செருப்பல்லாத செருப்பென்னும் மலையையுடைய பூழி நாட்டவர்க்கு வேந்தே; குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை - பலவகைப் போர்க்கண்ணி யெல்லாம் குவியச் சூடிய மழவர்க்குக் கவசம் போன்றவனே எ - று. ஆயர் முல்லைக்கண்ணி சூடுப வாதலின், “முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்” என்றார்; “புல்லினத் தாய மகன்சூடி வந்ததோர், முல்லையொருகாழும் கண்ணியும்” (கலி. 115) என்று பிறரும் கூறுவர். ஆயரினத்திற் புல்லினத்தாயர், கோவினத்தாயர், கோட்டினத்தாயர் எனப் பல ருண்மையின். ஈண்டு இவர் கோவினத்தாய ரென்பது படப் “பல்லான் கோவலர்” என்றார். ஆ பலவாதலின், அவை நன்கு மேய்தற்குரிய புலம் என்றற்குப் “புல்லுடை வியன்புலம்” என்றார். ஆக்கள் தமக்கு வேண்டிய புல்லை நிரம்பப் பெறுமெனவே, அவற்றையுடைய ஆயர் பெறுவன கதிர்மணி யென்றும், அம்மணிகளும் கடத்திடைப் பெறப்படுகின்றனவென்றும் கூறினார். “கல்லிற் பிறக்கும் கதிர்மணி” (எ) என்பது நான்மணிக்கடிகை. மிதியல் செருப்பு, மிதியாகிய செருப்பல்லாத மலையாகிய செருப்பு; எனவே, செருப்பென்னும் மலையென்றவாறாம். “செருப்பென்பது ஒரு மலை; மிதிய லென்பது அடை; மிதி யென்று செருப்பிற்குப் பேராக்கிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிப்படுத்தானாக வுரைக்க” என்றும், “குவியற்கண்ணி யென்னும் தொடை நோக்கி மிதியற் செருப்பென வலிந்த” தென்றும், “மிதியற் செருப்பென்பதற்குப் பிறவாறு சொல்லுவாரு முள” ரென்றும் கூறுவர் பழையவுரைகாரர். பூழியர், பூழி நாட்டவர். இப் பூழி நாடும் சேரர்க்குரித் தென்பது “பூழியர் கோவே பொலந்தார்ப் பொறைய” (பதிற். 84) என்று பிறரும் கூறுமாற்றாலறியலாம். வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை எனப் போர்க்கண்ணி பலவாதலால், அவற்றை யணியும் மழவரை, “குவியற் கண்ணி மழவர்” என்றார். பழையவுரைகாரர், “குவியற் கண்ணி யென்றதற்கு வெட்சி முதல் வாகை யீறாய போர்க்கண்ணி யெல்லாம் குவிதலையுடைய கண்ணி யென்க” என்பர். மழவர் ஒருவகை வீரர். இவர் குதிரைப்படைக் குரியராய்ப் போருடற்றும் சிறப்புடையரென மாமூலனார், “வண்டுபடத்ததைந்த கண்ணி யொண்கழல், உருவக் குதிரை மழவர்” (அகம். 2) என்றும், “கறுத்தோர், தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி, வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்” (அகம். 187) என்றும் கூறுகின்றார். 25 - 29. பல்பயம்.................பொருந. உரை : பல் பயந் தழீஇய - பல்வகைப் பயன்களை நல்கும் காடு பொருந்திய; பயங்கெழு நெடுங் கோட்டு - தானும் நல்ல பயன் தருவதாகிய நெடிய உச்சியையுடைய; நீர் அறல் மருங்கு வழிப்படா - நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்லுதலில்லாத; பாகுடிப் பார்வல் கொக்கின் பரி வேட்பு அஞ்சா - சேய்மையிலிருந்தே நுனித்து நோக்கும் கொக்கின் பரிவேட்டத்துக்கு அஞ்சுத லில்லாத; சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய - புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போருடற்றாவாறு குறுக்கிட்டுக் கிடக்கும்; அயிரை - அயிரை யென்னும்; நேருயர் நெடு வரைப் பொருந - நேரிதாய் உயர்ந்த நெடிய மலைக்குத் தலைவனே எ - று. பல் பய மென்றது, மலையைத் தழுவிக் கிடக்கும் காடுபடு பொருள் பயங்கெழு வெனப் பின்னர்க் கூறியது மலைபடு பொருள். நீரறல் இருபெயரொட்டு. நெடுங்கோட்டு, நேருயர் நெடுவரை அயிரை, நீர் அறல் மருங்கு வழிப்படா, பரிவேட் பஞ்சா அயிரை, முனைகெட விலங்கிய அயிரை என இயையும். அறல் மருங்கு வழிப்படா அயிரை யெனவும், கொக்கின் பரிவேட் பஞ்சா அயிரை எனவும் நின்று மீனன்மை காட்டி நிற்கும் இத்தொடர்கள், அயிரை மலைக்கு வெளிப்படை. நீரோடுங்கால் அயிரை மீன் அதனை எதிர்த் தேறிச் செல்லும் இயல்பிற் றாகலின் அதனை விலக்கற்கு, “நீரறல் மருங்கு வழிப்படா” வென்றும், அம்மீன் கூர்த்த பார்வை யினையுடைய கொக்கிற்கு அஞ்சுவது குறித்துப் “பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா” என்றும் கூறினார். பரிவேட்பு - விரைந்து குத்தும் கடுமை இம் மீனைப் பரதவர் அசரை யென்பர். இது பெரும்பான்மையும் நீர் மட்டத்துக்குச் சிறிது உள்ளேயே உலவுவது. அந்நிலையிற் சிறிது பிறழ்ந்தவழி இம்மீன் கொக்கின் பார்வையிற் படுதலின், அது ஞெரேலெனப் பாய்ந்து கவர்தலின், கொக்கின் பரிவேட்புக் கஞ்சுவதாயிற்று. பிறரும், “தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை, நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்” (குறுந். 166) என்பது காண்க. கடலிடத்தே யன்றிச் சிறு சிறு நீர்நிலைகளிலும் பழனங்களிலும் இது வாழ்வதுண்டு; “அயிரை பரந்த வந்தண் பழனம்” (குறுந். 178) என வருமாறு காண்க. பிறாண்டும், “அயிரைக் கொழுமீ னார்கைய................வெண்குருகு” (பதிற். 29) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. பாகுடிப் பார்வல், சேய்மையி னின்றே நுனித்துக் காணும் பார்வை “பரிவேட் பஞ்சா வயிரை யென்று வெளிப்படை கூறுகின்றா னாதலின், அதற்கேற்ப நீரறல் மருங்கு வழிப்படா வென்ற பெயரெச்ச மறையே பாடமாகல் வேண்டும்; இனிப் படாதென்று வினையெச்ச மறையாகிய பாடத்துக்கு நீரற்ற விடத்தில் தான் படாத படியாலே கொக்கி்ன் பரிவேட்புக் கஞ்சா அயிரை யென வுரைக்க” என்பர் பழையவுரைகாரர். பாகுடி யென்பது நாட்டு மக்கள் செலுத்திய வரி வகைகளுள் ஒன்றாக விக்கிரம சிங்கபுரக் கல்வெட்டால் (A.R.No. 297- 1916) தெரிகிறது; கூர்மை போலும் என்றார் உ. வே. சாமிநாதையர். பல் பயந் தழீஇய நாடாதலின் இதனைத் தம் வயமாக்கிக் கோடலை விரும்பிப் போதரும் பகை வேந்தர் போர் செய்து எளிதில் மேல் வாராவாறு குறுக்கே அரண்போல நின்று விலக்கிய நெடுமலை யென்றற்கு “முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை” யென்றார். 30 - 39. யாண்டு...............பலவே. உரை : பிழைப் பறியாது யாண்டு பய மழை சுரந்து - பெய்யாது பொய்த்தலின்றி யாண்டு தோறும் மழைபெய்து பயன் விளைத்தலால்; மாந்தர்க்கு நோயில் ஊழி யாக-மாந்தர்க்கு யாண்டுகள் நோயில்லாத காலமாய்க் கழிய; மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு - மண்ணுதல் செய்யாவிடத்தும் நறுமணமே கொண்டு; கார் மலர் கமழும் தாழிருங் கூந்தல் - மண்ணிய வழி முல்லை மலரின் நறுமணங் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும்; ஒரீஇயின போல - பொய்கையில் நாளத்தின் நீங்கியன போல; இரவு மலர் நின்று - இரவுப்போதிலும் மலர்ந்து நின்று; திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண் - அழகிய முகத்திடத்தே சுழலும் பூப்போன்ற பெரிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும்; அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து - அசைந்த காந்தள் பூத்து விளங்கும் கரையையுடைய நீர்யாற்றின் கரையிடத்தே நின்ற; வேயுறழ் பணைத்தோள் இவளோடு - மூங்கிலை நிகர்க்கும் பெரிய தோளையுமுடைய இவளுடன் கூடிநின்று; பல ஆயிர வெள்ளம் வாழிய - பல்லாயிரவெள்ளம் வாழ்வாயாக எ - று. மழை பிழைப் பறியாது பயன் சுரத்தலால் நாடு வசியும் வளனும் சிறந்து பசியும் பிணியும் முற்றவும் இல்லையாதல் ஒரு தலையாகலின், “பயமலை சுரந்து நோயில் மாந்தர்க் கூழியாக” என்றார். மாந்தர்க்கு நோயில் ஊழியாக வென மாறிக் கூட்டுக. மண்ணாக் காலத்தும் தேவியின் கூந்தல் நறுமணமே கமழ்வ தென்றற்கு “மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு” என்றார். “அரிவை கூந்தலின் நறியவு முளவோ”(குறுந். 2) என்று பிறரும் கூறுதல் காண்க. காவலன், நாடு காவற்கும் வினை செய்தற்கும் பிரிந்தவழிக் கற்புடை மகளிர் தம்மை யொப்பனை செய்துகொள்ளா ராகலின் , “மண்ணா வாயின்” என்றார். மண்ணா வாயினும் என்னும் உம்மை தொக்கது. மண்ணுதல் ஒப்பனை செய்தல். கார்மல ரென்றார், முல்லை கார்காலத்து மலரும் இயல்பிற்றாதலால், மண்ணிய கூந்தல் அகிலும் ஆரமும் முதலிய பல விரைப்பொருளின் மணம் கொண்டு கமழு மாயினும், தேவியின் கூந்தல் சிறப்புடைய முல்லையணிந்து அதன் நறுமணமே சிறக்கு மென்பது தோன்ற, “கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்” என்றார்; “கமழகில் ஆர நாறு மறல் போற் கூந்தல்” (குறுந். 286) என்பது காண்க. மண்ணாக்கால் நறுமணமும் மண்ணியக்கால் முல்லை மணமும் என்றது, தேவியின் கற்புச் சிறப்புணர்த்தி நின்றது. பொய்கையி லென்பது அவாய் நிலை; எனவே, இது தாமரையாயிற்று. பொய்கையில் இரவுப்போதிலும் கூம்புதலின்றி விரிந்து திகழ்வதொரு தாமரைப்பூ வுளதேல் அது நிகர்க்கும் கண்ணென்றதனால், இஃது இல்பொரு ளுவமை. இனிப் பழையவுரைகாரரும், “ஒரீஇயனபோல வென்பதற்குப் பொய்கை யென வருவித்துப் பொய்கையை யொருவினபோல என வுரைக்க; இனி மேற்சொன்ன கூந்தலை ஒரீஇயின போல வென்பாருமுளர். இரவு மலர் நின்றென்பது, பொய்கைப் பூப்போலன்றி இரவுக் காலத்தும் மலர்ச்சி நிலைபெற்றென்றவா” றென்பர். பொய்கையில் நீங்கியன போல முகத்தே அலமரும் என்றது, பொய்கைக்கண்ணே நாளத்தின் நீங்கி நீர்மேல் அலமரும் பூப்போல முகத்திடத்தே கண் அலமரும் என்க. பெருமை, கண்ணிற் கிலக்கணமாகலின், “பெருமதர் மழைக்கண்” என்று சிறப்பித்தார். நீரழுவம், ஆழ்ந்த நீருள்ள யாறு. காந்தள் இலங்கும் யாறு எனவே, யாற்றின் இரு கரையும் எய்தும்; அவ்விடத்தே நின்ற வேய் என்றது, அதன் குளிர்ச்சியைச் சிறப்பித்தவாறு. “நீரழுவத்துவே யென்றது, ஒருநாளும் உடல் வெம்மையாற் கொதியாது குளிர்ந்தேயிருக்கும் தோள் என்றற்கென்க” என்பர் பழையவுரைகாரர். காந்தளை யுடன் கூறியது, தோளிற்க வேய்போலக் கைக்குக் காந்தள் உவம நலஞ் சிறந்த தென்றற்கு. வாழ்க்கைத் துணையாதலால், அரசற்கு வாழ்வு வேண்டி வாழ்த்தலுற்ற ஆசிரியர். “இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே” என்றார். பல வென்பதை ஆயிரத்தோடு மாறிக் கூட்டுக. வெள்ளம், ஒரு பேரெண். விளங்கிய கொள்கையும் வாய்மொழியுமுடைய கடவுளரைப் பேணற் கெடுத்த ஆவுதிப் புகையும், பாசவர் விருந்து கண்மாறா துண்பித்தற் கெடுத்த அடு நெய் யாவுதிப் புகையுமாகிய இரண்டுடன் கமழும் நாற்றத்தால், வானத்துக் கடவுளரும் விழைதக, வளம் பழுனிய சிறப்பினையும் கள்ளினையும் யானையினையுமுடைய, நன்கலம் பேணித் தரூஉம் மண்படு மார்பினையு முடையோய், கோவலர் பல்லாக்களை வியன்புலம் பரப்பிக் கடத்திடை யுயர்மணி பெறூஉம் செருப்புமலை நிற்கும் பூழி நாட்டவர் கோவே, மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருந, மழை பிழைப் பறியாது பயம் சுரந்து, மாந்தர்க்கு நோயி லூழியாக, கூந்தலையும் மழைக்கண்ணையும் பணைத்தோளையுமுடைய இவளோடு கூடிப் பல ஆயிர வெள்ளம் வாழ்வாயாக வென வாழ்த்தியவாறாம். இனிப் பழையவுரைகாரர், “பூழியர்கோவே, மழவா மெய்ம்மறை, அயிரைப் பொருந, பய பழை சுரந்து, மாந்தர்க்கு நோயில் ஊழி யுண்டாக, இவளோட பல ஆயிர வெள்ளம் வாழிய ரெனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். இனி, “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தொல். பொ. 75) என்ற சூத்திரத்து, “ஐவகை மரபின் அரசர் பக்கமும்” என்பதற்கு இப் பாட்டினைக் காட்டி, இதன்கண் அரசன் “ஓதியவாறும் வேட்டவாறும் காண்க” என்றும், “வடக்கொடு சிவணிய வகைமையான” (பொ. 86) என்ற சூத்திரவுரையில், “மிதியற் செருப்பிற் பூழியர் கோவே.....அயிரைப் பொருந” என்ற இது, “மலை யடுத்தது” என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மண்படு மார்பன், மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருநன் என அரசன் சிறப்பும், “மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு, கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்” என்பது முதலாகத் தேவியின் சிறப்பும் பாடி “ஆயிர வெள்ளம் வாழிய பலவே” யென வாழ்த்தலின், இது செந்துறைப் பாடாண் பாட்டாயிற்று |