52. |
கொடிநுடங்கு
நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
அருங்கலத் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கந் திசைதிரிந் தாங்கு |
5 |
மையணிந்
தெழுதரு மாயிரம் பஃறோல்
மெய்புதை யரண மெண்ணா தெஃகுசுமந்து
முன்சமத் தெழுதரும் வன்க ணாடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை யுலக மெய்தினர் பலர்பட |
10 |
நல்லமர்க்
கடந்தநின் செல்லுறழ் தடக்கை
இரப்போர்க்குக் கவித லல்லதை யிரைஇய
மலர்பறி யாவெனக் கேட்டிகு மினியே
சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து
முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச் |
15 |
சிலைப்புவல்
லேற்றிற் றலைக்கை தந்துநீ
நளிந்தனை வருத லுடன்றன ளாகி
உயவுங் கோதை யூரலந் தித்தி
ஈரிதழ் மழைக்கட் பேரிய லரிவை
ஒள்ளித ழவிழகங் கடுக்குஞ் சீறடிப் |
20 |
பல்சில கிண்கிணி
சிறுபர டலைப்பக்
கொல்புனற் றளிரி னடுங்குவன ணின்றுநின்
எறிய ரோக்கிய சிறுசெங் குவளை
ஈயென விரப்பவு மொல்லா ணீயெமக்
கியாரை யோவெனப் பெயர்வோள் கையதை |
25 |
கதுமென வுருத்த
நோக்கமோ டதுநீ
பாஅல் வல்லா யாயினை பாஅல்
யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணி
அகலிரு விசும்பிற் பகலிடந் தரீஇயர்
தெறுகதிர் திகழ்தரு முருகெழுழ ஞாயிற் |
30 |
றுருபுகிளர்
வண்ணங் கொண்ட
வான்றோய் வெண்குடை வேந்தர்தம் மெயிலே. |
துறை
- குரவை நிலை. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - சிறுசெங்
குவளை. (22)
(ப
- ரை)
வங்கம் திசைதிரிந் தாங்குக் (4)
கொல்களிறுமிடைந்து (1) என மாறிக் கூட்டுக.
3.
திருநாறு விளக்கென்றது செல்வமுடைமையெல்லாம்
தோன்றும் விளக்கு.
16. நளிதல் - தன்னைச் 1சேவிக்கும் மகளிரொடு
குரவையாடிச் செறிதல்.
17.
ஊரலந்தித்தி - ஊரலையுடைய தித்தி; அம்முச் சாரியை.
18. ஈரிதழ் - குளிர்ந்த இமை. 19. அவிழகமென்றது அவிழ்ந்த
பூவினை.
22.
தான் அவனை எறிதற்கு ஓக்கிய சிறியதொரு
செங்குவளையெனச் சிறுமையால் அவள்மென்மை கூறிய சிறப்பான்
இதற்கு, 'சிறுசெங்குவளை' என்று பெயராயிற்று.
இரப்ப
(23) என்னும் செயவெனெச்சத்தினைக் கையதை (24)
என்னும் முற்றுவினைக் குறிப்பொடு முடிக்க.
சிறுசெங்குவளை
(22) பெயர்வோள் கையதை (24) என
முற்றாக அறுத்து, அது (25) எனப் பின் சுட்டிற்றாக்குக.
28.
பகலிடம் - பகற்பொழுது.
30.
உருபு கிளர் வண்ணம் - நிறம் விளங்கின தன்மை.
வண்ணங்கொண்ட
(30) வேந்தர் (31) எனக்கூட்டி 2ஞாயிறு
போலக் கோபித்து எதிர்நின்ற வேந்தரென உரைக்க.
நல்லமர்க்கடந்த
நின்தடக்கை (10) இரப்போர்க்குக்
கவிதலல்லதை இரைஇய (11) மலர்பறியாவெனக் கேட்டிகும் (12); இனி
துணங்கைக்குத்(14) தலைக்கை தந்து நீ (15) அளிந்தனைவருதல்
உடன்றனளாகி (16) நின்னரிவை (18) நின் (21) எறியர் ஓக்கிய
சிறுசெங்குவளையானது (22) நீ (25) 3ஈயென்று இழிந்தோன் கூற்றான்
இரப்பவும் நினக்கு ஈந்துபோகாது நின் இரப்பிற்கு ஒல்லாளாய் நீ
எமக்கு (23) யாரென்று பெயர்வோள் கையதாயிருந்தது (24);
அவ்வாறு இரந்து நீ பெறாது அவளை உருத்த நோக்கமொடு அதை
அவள்பானின்றும் (25) பகுத்துக்கொள்ளமாட்டா யாயினை (26);
அவ்வாறு அது பகுக்கமாட்டாத நீ வேந்தர்களெயிலைப் (31)
பகுத்துக்கோடல் (26) யாங்கு வல்லையாயினாய்? நின் கண்ணி
வாழ்க (27) என மாறி வினைமுடிவு செய்க.
பாஅல்
(26) யாங்கு வல்லுநையோ (27) என்றதன்முன் எயில்
(31) என்பது கூட்டவேண்டுதலின் மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது அவன் கைவண்மையொடும்
வென்றியோடு படுத்து அவன் காமவின்பச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
இப்பாட்டு,
துணங்கையாடுதல் காரணமாகப் பிறந்த ஊடற்
பொருட்டாகையாற் குரவைநிலை யென்றாவாறாயிற்று.
(கு
- ரை) 1-2. சேரனுடைய
பகைவரது படைச்சிறப்ப.
1.
கொடிகள் அசைகின்ற நிலையையுடைய ஆண்யானைகள்
நெருங்கப் பெற்று. யானையின் மீது கொடி விளங்குதல்: நெடுநல்.
87; பதிற் 69 : 1 - 2. 88 :
17.
2. திருந்திய தொழிலையுடைய மணிகளைக்கட்டிய உயர்ந்த
தேர்களை வேறிடங்களிற் பரவச்செய்து.
3-4.
பிறநாடுகளிலுள்ள அரிய ஆபரணங்களைத் தரும்
பொருட்டுக் கடல்நீரில் உயர்ந்துசெல்லும் பெரிய
ஆரவாரத்தையுடைய கப்பல் திசைகளிலே திரிந்தாற்போல,
திரிந்தாங்கு (4) களிறு மிடைந்து (1) என இயைக்க; "விழுமிய
நாவாய் பெருநீ ரோச்சுநர், நனந்தலைத் தேஎத்து நன்கல னுய்ம்மார்,
புணர்ந்துடன் கொணர்ந்த புரவி" (மதுரைக்.
321-3). யானைக்குக்
கப்பல்: மதுரைக். 379 - 83;
நற். 74 : 3 - 4; புறநா.
26 : 1 - 3.
5.
மேகத்தை ஒத்து எழுகின்ற கரிய பெரிய
பரிசைப்படையினையும்; பரிசைக்கு மேகம் உவமை: பதிற்.
62 : 2;
"மழையென மருளும் பஃறோல்" (புறநா. 17 :
34). அணிந்து:
உவமஉருபு. மை அணிந்து - மை பூசப்பெற்று எனலுமாம்.
6-7.
உடலை மூடுகின்ற கவசத்தையும் வேண்டுமென்று
எண்ணாமல் வேலையும் தாங்கிப் போர்க்களத்தின் முன்னே
புறப்பட்டுச் செல்லும் அஞ்சாமையையுடைய வீரர்; இவர்
காலாட்படையிலுள்ள வேல்வீரர்.
8-9.
தோல்வியடையாமைக்கு காரணமான தும்பையானது
பகைவரிடத்தே விளங்கும்படி, உயர்ந்த நிலையையுடைய
வீரசுவர்க்கத்தை அடைந்தனராய்ப் பலர் இறக்கும்படி; பலர் இறந்து
வீரசுவர்க்கத்தையடைய என்பது கருத்தாகக் கொள்க. பகைவரிடத்தே
பொருங்கால் அதிரப் பொருது சிறத்தலின் அவர் அணிந்த தும்பை
விளங்குவதாயிற்று.
10-12.
சேரனது கொடைச் சிறப்பு.
நல்ல
போர்களை வஞ்சியாது எதிர்நின்று வென்ற நினது
இடியை ஒத்துப் பகைவரை அழிக்கின்ற பெரிய கைகள், நின்பால்
வந்து இரப்பவர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றைக்
கொடுத்தற்பொருட்டுக் கவிதல் அல்லாமல், பிறரிடம் சென்று
இரத்தற்கு விரிதலை அறியா எனக் கேட்டோம்; இப்பொழுதோ
எனின்; பதிற். 44 : 5-6. செல்லுறழ் தடக்கை;
முருகு 5, ந,
13-6.
சேரன் தன்னைச் சேவிக்குமகளிரோடு குரவையயர்தல்.
13.
ஒளிவிடும் காலையுடைய, செல்வமெல்லாம் விளங்கித்
தோன்றும் விளக்கின் ஒளியிலே.
14-6.
முழவு ஒலிக்கின்ற, மகளிர் ஆடுகின்ற துணங்கைக்
கூத்திற்குத் தழுவுதலையுடைய தெப்பமாக, முழங்குதலில் வல்ல
ஏற்றைப்போல முதற்கையைக் கொடுத்து நீ அவர்களோடு
செறிந்துவருதலை அறிந்து சினம் கொண்டவளாகி; "நிரைதொடி
நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக், கரையிடைக் கிழிந்தநின்
காழகம்வந் துரையாக்கால்" (கலித். 73
: 16 - 7); "மெல்லிணர்க்
கண்ணி மிலைந்த மைந்தர், எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து"
(புறநா. 24 : 8 - 9)
17-8.
வருந்துகின்ற மாலையைப்போன்ற தன்மையையும்,
பரவுதலையுடைய தேமலையும், குளிர்ந்த இமைகளையுடைய
மழைபோன்ற கண்களையும் உடைய பெரிய இயல்பையுடைய நின்
தேவி.
19-22.
சேரன் பெருந்தேவியின் ஊடல் கூறப்படும்.
19-20.
ஒள்ளிய இதழையுடைய பூவைப்போன்ற சிறிய அடியின்
கண் அணிந்த, பலவாகிய இரண்டு கிண்கிணிகள் சிறிய பரட்டை
வருத்த; "பைம்பொற் கிண்கிணி பரட்டுமிசை யார்க்கும், செந்தளிர்ச்
சீறடி" (பெருங். 2. 3 : 85 - 6). உறுப்பு
வகையினாற் பலவாகவும்,
எண்ணால் இரண்டாகவும் அமைதலின், 'பல்சில கிண்கிணி' என்றார்.
21.
கரையை இடிக்கின்ற நீரிலேயுள்ள தளிரைப்போல
நடுங்குகின்றவளாய் நின்று. கோபத்தாலும் கரணத்தாலும்
நடுங்கிற்றென ஊடலும் கூடலுமுணர்த்திற்று. (சீவக.
134, ந.)
21-2.
நின்மீது எறிதற் பொருடடுத் தூக்கிய சிறிய செங்குவளை
மலர்.
23-4.
இரப்போன் கூற்றால் அதனை எனக்கு ஈயென்று நீ
கேட்பவும் தான் அதற்கு மனம் பொருந்தாளாய், "நீ எமக்கு என்ன
முறையையுடையையோ? " என்று சினத்தால் கூறி நீங்குவோளாகிய
நின் தேவியின் கையிலுள்ளது; எமக்கு என்றது தன் பெருமிதந்
தோன்றக் கூறியது (சிலப். 20 : 12. அரும்பத.);
"தொடிய
வெமக்குநீயாரை" (கலித். 88 : 3). கையதை;
ஐகாரம்: அசைநிலை.
சிறுசெங்குவளை கையது என்க; கையது: குறிப்பு முற்று.
25-6.
கோபித்த பார்வையொடு அக் குவளைமலரை நீ
நின்பால் விரையப் பகுத்துக் கொள்ளுதலை மாட்டாயாயினாய்.
26-7.
பகுத்துக்கொள்ளுதலை எவ்வாறு வல்லையாயினாய்; நின்
கண்ணி வாழ்வதாக. கண்ணியை வாழ்த்தல்: பதிற்.
56 : 3; "வார்
கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி" (மணி.
5 : 28)
28-9.
மற்ற நான்கு பூதங்களும் விரிதற்குக் காரணமான பெரிய
ஆகாயத்தில் பகற்பொழுதைச் செய்யும்பொருட்டுச் சுடுகின்ற
கிரணங்கள் விளங்குகின்ற அச்சம் பொருந்திய சூரியனது.
30.
நிறம் விளங்கின தன்மையைக் கொண்ட: உருபு -
உருவமுமாம்.
31.
வான்றோய் வெண்குடை வேந்தர்தம் எயில் - வானைத்
தோயும் உயர்ந்த வெண்குடையையுடைய பகைவேந்தருடைய
மதில்களை.
வண்ணங்கொண்ட
(30) வேந்தர் (31) என்க.
எயிலைப்
(31) பாஅல் (26) யாங்குவல்லுநையோ (27) என
இயைக்க.
இச்செய்யுளில்
ஒன்றற்கு ஒன்று முரண்பாடாகத் தோற்றம்
இருவகைச் செய்திகள் சொல்லப்பட்டன. சேரன் பிறர்பால் இரக்கும்
இயல்பினன் அல்லனாயினும் ஊடிய தேவியின்பால் சிறு
செங்குவளையை இரப்பவனானான்; பகைவருடைய பெரிய
மதில்களைக் கைக்கொள்ளும் வன்மையை யுடையவனாயினும் தன்
தேவியினிடமிருந்து சிறு செங்குவளையையும் கொள்ளும்
வன்மையிலனானான்.
29-31.
சினங்கொண்ட அரசர்க்குச் சூரியன் உவமை: "ஊழியிற்
சினவும், பருதி மண்டில மெனப்பொலி முகத்தினன்" (கம்ப.
வருணனை வழி. 15). பி - ம்)
6. என்னாது. 17. உயலுங். 18.
பேரிலரிவை. 20. பல்செல், பல்செங். 22. எறியரோச்சிய.
27.வல்லினையோ (2)
1முருகு.
212, உரை.
2பொருந.
135 - 6.
3தொல்.
எச்ச.49.
|