முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
72.



இகல்பெரு மையிற் படைகோ ளஞ்சார்
சூழாது துணித லல்லது வறிதுடன்
காவ லெதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து
 5




மன்பதை காப்ப வறிவுவலி யுறுத்து
நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின்
பண்புநன் கறியார் மடம்பெரு மையிற்
றுஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை யொராஅநீர் ஞெமரவந் தீண்டி
 10




உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம்
வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத்
தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துப்
பொங்கு பிசிர்நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
 15

மடங்கற் றீயி னனையை
சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - உருத்தெழு
வெள்ளம்.
(10)

     (ப - ரை) 1. இகல் பெருமையின் - இகலானது
பெரிதாகையானே; இகலென்னும் எழுவாய்க்குப் பெருமையை
நிலைப்பயனிலையாகக் கொள்க. அஞ்சாரென்றது வினையெச்சமுற்று.

     படைகோளைத் (1) துணிதல் (2) எனக் கூட்டுக.

     2-3. உடன் காவலெதிராரென்றது பலரும் தம்முட்கூடியும்
காக்க மாட்டாரென்றவாறு. 5. மன்பதை - மக்கட்பன்மை.

     அறிவுவலியுறுத்தும் (5) சான்றோர் (6) எனக் கூட்டுக.

     ஈண்டுச் சான்றோரென்றது மந்திரிகளை.

     மடம்பெருமையையும் (7) இகல்பெருமையைப் (1) போல
எழுவாயும் பயனிலையுமாகக் கொள்க.

     8. துஞ்சல் - எல்லாவுயிரும் இறந்துபடுதல். பகலென்றது
ஊழியை. மாலையென்றது ஊழிமுடிவினை.

     9. ஒராஅ என்றதனை ஒருவவெனத் திரித்து
ஈண்டியென்றதனையும் ஈண்டவெனத் திரிக்க.

     10. உருத்தெழு வெள்ளமென்றது பல்லுயிரையும் ஒருங்கு தான்
கொல்லுங் கருத்துடையது போலக் கோபித்தெழு வெள்ளமென்றவாறு.

      இச்சிறப்பானே இதற்கு, 'உருத்தெழு வெள்ளம்' என்று
பெயராயிற்று.

     வெள்ளம் (10) பரந்து (11) என்றதனைப் பாக்கவெனத் திரித்து
அதனை நுடக்கிய (14) என நின்ற செய்யியவென்னும்
வினையெச்சத்தொடு முடித்து அதனைச் சுடர்நிகழ்வு (14)
என்னும் தொழிற்பெயரோடு முடித்து, வெள்ளம் பரக்கையாலே
அவ்வெள்ளத்தை மாய்க்கவேண்டிச்

     14. பிசிரென்றது பிசிருடைய வெள்ளத்தை. நுடக்குதல் -
மாய்த்தல்.

     ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்து (12) மடங்கற்றீ (15)
என மாறிக் கூட்டி, அவ்வெள்ளத்தை மாய்த்தற்கு ஆதித்தர்
பன்னிருவரும் தோற்றின பெரிய கூட்டத்தையுடைய வடவைத்தீயென
உரைக்க. ஆதித்தர் கூட்டத்தை இவன் படைத்தலைவர்க்கு உவமமாக்
கொள்க.

     அம் சாறு புரையும் நின் தொழிலொழித்து (13) மடங்கற்றீயின்
அனையை (15) என மாறிக் கூட்டுக. அம் சாறுபுரையுந்
தொழிலென்றது. 1அழகிய விழாப்போல எல்லார்க்கும் இன்பத்தைச்
செய்யும் தொழிலென்றவாறு.

     நின்னொடு கறுத்தோர் (3) தம் மடம் பெருமையால் (7) நின்
(3) முன் குடிமுதல்வர்க்கு (4) அறிவுவலியுறுத்தும் (5)
சான்றோரையொத்த நின் (6) சூழ்ச்சிப்பண்புடைமை அறிகின்றிலர்;
நீ தான் சூழ்ச்சியுடையையேயன்றிக் (7) குருசிலே, நின்
உடற்றிசினோர்க்குப் போர்செய்யுமிடத்து (16) மடங்கற்றீயின்
அனையை (15); அதனையும் அறிகின்றிலராதலால், அவர் தம் இகல்
பெருமையானே அஞ்சாராய்ப் படை கோளைத் (1) துணிதலல்லது (2)
நாட்டைச் (3) சிறிதும் உடன் (2) காவலெதிர் கொள்ளார் (3) எனக்
கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் சூழ்ச்சியுடைமையும் வென்றிச்
சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. பகைமை பெரிதாகையினாலே அஞ்சாராகிப்
படை கொள்ளுதலை ஆராயாமல் நிச்சயித்தலை அல்லாமல்.

     2-3. தம்முட் கூடியும் நின்னொடு புகைகொண்டோர் சிறிது
நேரமும் தம் தம் நாட்டைக் காத்துக் கொள்ளுதலை
மாட்டாராயினார். வறிது - சிறிது; உரிச்சொல்.

     3-7. நின் குடியில் நினக்கு முன்பு இருந்த அரசர்களுக்குப்
பாதுகாவலைச் செய்தனராகி வாழ்ந்து, மக்களின் தொகுதியைக்
காப்பதற்கு அறிவுரையை வற்புறுத்திக் கூறும், தருமத்தை அறிந்த
உள்ளத்தையுடைய மந்திரிகளைப் போன்ற நின்னுடைய
சூழ்ச்சிப்பண்பைத் தம்முடைய அறியாமை பெரிதாகையால்
அப்பகைவர் நன்றாக அறியமாட்டாராயினார்.

     8-9. எல்லாவுயிர்களும் இறக்கும் ஊழிபுகுகின்ற முடிவில், நிலம்
பாரம் நீங்க நீரானது பரக்கும்படி வந்து நெருங்க; ஒரா - ஒருவ;
ஈண்டி - ஈண்ட; எச்சத்திரிபுகள். இது நீரின் ஊழியைக் கூறியது;
"பனியொடு தண்பெய றலைஇய வூழியும்" (பதிற். 2 - 8 : 9)

     10. உலாவுதலையுடைய அலை விரைந்து சென்ற உயிர்களைக்
கொல்லுதற்குக் கோபித்து எழுகின்ற வெள்ளம்: "உருத்துவரு
மலிர்நிறை" (பதிற். 28 : 12)

     11. எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத
திசைகளில் இருளொடு சேர்ந்து பரக்க. இருளொடு என ஒடு
வருவிக்க.

     12. அதனைப் போக்கச் சூரியர் பன்னிருவரும் தோன்றிய,
சேர்ந்து வரும் கூட்டத்தையுடைய.

     கூட்டத்து (12) மடங்கற்றீ (15) என இயையும்.

     13. அழகிய விழாவைப்போல எல்லார்க்கும் இன்பத்தைச்
செய்யும் நினது தொழிலை ஒழித்து.

     14-5. பொங்குகின்ற பிசிரையுடைய வெள்ளத்தை வற்றச்
செய்யும்பொருட்டுச் சிவந்த ஒளி நிகழ்தலையுடைய வரவை
என்னும் ஊழித்தீயைப் போன்றனை; நுடக்கிய: செய்யியவென்னும்
வினையெச்சம்.

     12-5. சூரியரோடு கூடிய வடவைத்தீ: பதிற். 62 : 6 - 8;
சூரியர் படைத்தலைவர்க்கும், வடவைத்தீ சேரனுக்கும் உவமைகள்.

     16. சினம் பொருந்திய குருசிலே, நின்னொடு மாறுபட்ட
பகைவருக்கு.

     உடற்றிசினோர்க்கு (16) மடங்கற்றீயின் அனையை (15) என
மாறி இயைக்க.

     (பி - ம்.) 3. நாடென. 4. முதல்வரோம்பினர். 8. துஞ்சலூறும்.
14. பிசிருடக்கிய. (2)


     1"விழவுமேம் பட்டவென் னலனே" (குறுந். 125: 4)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

2. உருத்தெழு வெள்ளம்
 
72.இகல்பெரு மையிற் படைகோ ளஞ்சார்
சூழாது துணித லல்லது வறிதுடன்
காவ லெதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்றிணை முதல்வர்க் கோம்பி் ருறைந்து
 
5மன்பதை காப்ப வறிவு வலியுறுத்து
நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின்
பண்புநன் கறியார் மடம்பெரு மையின்
துஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை யொரா அநீர் ஞெமரவந் தீண்டி
 
10உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம்
வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத்
தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துச்
செஞ்சுடர் நிகழ்விற் பொங்குபிசிர் நுடக்கிய
 
15மடங்கற் றீயி னனையை
சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே.
 

துறை   : செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம்  : ஒழுகுவண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு.
பெயர்   : உருத்தெழுவெள்ளம்.
 

3 - 7. நின்முன்றிணை.......................பெருமையின்.

உரை : நின் முன்  திணை  முதல்வர்க்கு - நின் குடியில் நினக்கு
முன்னே   விளங்கிய  முன்னோர்களுக்கு  ;  ஓம்பினர்  உறைந்து  -
பாதுகாப்பா யிருந்து ; மன்பதை காப்ப அறிவு  வலியுறுத்தும் - மக்கட்
கூட்டத்தைப்  புரத்தற்கு  வேண்டும் நெறிமுறைகளை  அறிவுறுத்தும் ;
நன்று  அறி  உள்ளத்து  -  அறமே  காணும்  உள்ளத்தையுடைய  ;
சான்றோர்  அன்ன  - அமைச்சர் போன்ற  சூழ்ச்சிவன்மை படைத்த;
நின் பண்பு - நினது இயல்பினை ; மடம்  பெருமையின் - அறியாமை
மிக  வுடையராதல்  ;  நன்கு அறியார் - தெளிய அறியாராயினர் நின்
பகைவர் எ - று.

அரசர்க்கு “உற்றநோய் நீக்கி உறா அமை முற்காக்கும் பெற்றியார்”
(குறள்.442) என்றற்கு, “முதல்வர்க்கு ஓம்பின ருறைந்து”  என்றும், குடி
யோம்பல் இறைமாட்சி யாதலின், “மன்பதை காப்ப” என்றும்,  அதற்கு
வேண்டும்  நெறிமுறைகளை  உற்றவிடத்துக் கழறிக் கூறுதலும் அவர்க்
கியல்பாதல்பற்றி,  “அறிவு வலியுறுத்தும்” என்றும், அறம் வழுவியவழி
அரசியல்    நன்கு   நடவாதாகலின்,   அதனையே   தேர்ந்துணரும்
அவ்வமைச்சர்  மனப்பான்மையை,  “நன்றறி யுள்ளத்துச்  சான்றோர்”
என்றும்,    அவரது    சூழ்ச்சி    முற்றும்    இச்    சேரமான்பால்
செறிந்திருக்குமாறு தோன்ற அவரை  உவமமாக  நிறுத்தியும் கூறினார்.
பகைவேந்தரும்   சூழ்ச்சி  யுடையராயினும்  அறியாமை   மிகவுடைய
ரென்றற்கு  “மடம்  பெருமையின்”  என்றும், அதனால் நின்  பண்பும்
வலியும்  அறிந்திலர்  என்றற்கு  “நின்  பண்பு  நன்கறியார்” என்றும்
கூறினார்  .  அறிவு  வலியுறுத்தும் சான்றோர், உள்ளத்துச் சான்றோர்
என  இயையும்  பழையவுரைகாரரும்,  “மன்பதை  மக்கட்   பன்மை”
யென்றும்,  “அறிவு வலியுறுத்தும் சான்றோர் எனக் கூட்டுக” என்றும்,
“ஈண்டுச்  சான்றோரென்றது  மந்திரிகளை”  யென்றும்  கூறுவர். மட
மென்னும் எழுவாய் பெருமையின் என்னும் பயனிலை கொண்டது.

8 - 16. துஞ்சல்...................உடற்றிசி னோர்க்கே.

உரை : துஞ்சல்உறூஉம்  பகல் புகும் மாலை - எல்லாவுயிர்களும்
ஒருங்கு  அழிதற்குரிய ஊழிக்காலமானது புகுகின்ற பொழுதில் ; நிலம்
பொறை  ஒராஅ - நிலமகள் சுமை நீங்க ; நீர் ஞெமர வந்து ஈண்டி -
நீர்  பரந்து  வந்து பெருகுதலால் ; உரவுத்திரை கடுகிய - பரந்தெழும்
அலைகள்  விரையும்  ;  உருத்தெழு வெள்ளம் - நிலத் துயிர்களைக்
கோறற்குச்  சினந் தெழுவதுபோலும் வெள்ளம் ; வரையா மாதிரத்து -
எல்லை  வரையறுக்கப்படாத  திசை முழுதும்; இருள் சேர்பு பரந்து -
இருளொடு   சேர்ந்து   பரவுவதால்  ;  அகன்றுவரு  ஞாயிறு  பட்ட
கூட்டத்து  - இருளைப் போக்குதற்குப் பன்னிரண்டாய் விரிந்து வரும்
ஞாயிறுகள் தோன்றிய கூட்டத்தினது ; செஞ்சுடர் நிகழ்வின் - சிவந்த
வெயில்  நிகழ்ச்சியினையும்  ;  பொங்கு  பிசிர் நுடக்கிய - மிகுகின்ற
பிசிரினையுடைய   அவ்  வெள்ளத்தை  வற்றச்   செய்த ; மடங்கல்  
தீயின் - வடவைத்  தீயினையும் ; சினம்   கெழு  குருசில்  - சினம்
பொருந்திய குருசிலே ; அம் சாறு புரையும் நின் தொழில் -  அழகிய
விழாவினைப்போல இன்பம் செய்யும் நின்னுடைய தொழிலை ; ஒழித்து
- விலக்கி ; நின் உடற்றிசினோர்க்கு அனையை - நின்னைப் பகைத்துப்
பொருவார்க்கு ஒத்திருக்கின்றாய் எ - று.
 

கூட்டத்துச் செஞ்சடர் நிகழ்வினையும் தீயினையும் அனையை என
இயையும். குருசில், நின் உடற்றிசினோர்க்கு மடங்கற்றீயின் அனையை
என  இயைத்து முடிக்க. ஒராஅ என்பதனை ஒருவ வென்றும், ஞெமர
வென்பதனை   ஞெமர்ந்தென்றும்,   ஈண்டி   யென்பதனை   ஈண்ட
வென்றும்   பரந்தென்பதனைப்   பரவவென்றும்  திரித்துக்  கொள்க.
பழையவுரைகாரரும்  “ஒராஅ  வென்றதனை  ஒருவ  வெனத் திரித்து
ஈண்டி  யென்றதனையும்  ஈண்டவெனத் திரிக்க” என்றும், “வெள்ளம்
பரந்தென்றதனை பரக்கவெனத் திரித்து அதனை நுடக்கியவென நின்ற
செய்யிய  வென்னும்  வினையெச்சத்தோடு  முடித்து, அதனைச் சுடர்
நிகழ்வு என்னும் தொழிற்பெயரொடு முடித்து, வெள்ளம் பரக்கையாலே
அவ்வெள்ளத்தை  மாய்க்க  வேண்டிச்  சுடர் நிகழ்தலை யுடைத்தான
தீயென வுரைக்க” என்றும் கூறுதல் காண்க.

எல்லா   வுயிர்களும் ஒருங்கு மடியும் ஊழிக்காலத்தைத், “துஞ்சல்
உறூஉம்   பகல்”   என்றார்.  இருள்படரும்  முடிவுக்கால  மாதலால்,
“மாலை”  யென்றார்.  இத்தகையதொரு  காலம்  வருதல், நிலமகட்குச்
சுமை  நீக்கம்  குறித்தென்றற்கு,  “நிலம் பொறை யொராஅ” என்றும்,
தன்னில்  மூழ்கி  மறையாத இடமும் பொருளும் இல்லையென்னுமாறு
நீர்  பரத்தலால்,  “நீர்  ஞெமர  வந்தீண்டி”  என்றும், அவ்வெள்ளம்
கடுகப்   பரந்தெழுதற்குச்   சூறைக்காற்று  மோதுதலால்  பேரலைகள்
தோன்றிக்  கடுகிவருவது  உயிர்கண்  மேற்  சினங் கொண்டு பொங்கி
வருவது  போறலின்,  “உரவுத்திரை  கடுகிய  வுருத்தெழு  வெள்ளம்”
என்றும்   கூறினார்.  “துஞ்சல்  எல்லா  வுயிரும்  படுத”  லென்றும்,
“பகலென்றது   ஊழியை”   யென்றும்,   “மாலை   யென்றது  ஊழி
முடிவினை”  யென்றும், “உருத்தெழு வெள்ளமென்றது பல்லுயிரையும்
ஒருங்கு   தான்   கொல்லும்  கருத்துடையது  போலக் கோபித்தெழு
வெள்ளமென்றவா”  றென்றும்,  “இச்சிறப்பானே  இதற்கு உருத்தெழு
வெள்ளமென்று    பெயராயிற்”    றென்றும்    பழைய  வுரைகாரர்
கூறுகின்றார்.

ஞாயிறு முதலிய கோள்களும் ஏனை விண்மீன்களும் தோன்றாவாறு
திணியிருள்   பரந்துவிடுதலால்   திசையறியலாகாமையின்,  “வரையா
மாதிரத்து”    என்றும்,   இருள்   பரவும்போதே   வெள்ளந்தானும்
உடன்பரந்துவிடுமாறு   தோன்ற,  “இருள்  சேர்பு  பரந்து”  என்றும்
கூறினார்  .  இருளென்புழி  உடனிகழ்ச்சிப்  பொருட்டாய ஒடு வுருபு
விகாரத்தாற்றொக்கது.

அகன்றுவரு     ஞாயிறு  பட்ட  கூட்டத்து என  மாறி இயைக்க.
இவ்வூழியிருளைப்  போக்கி  நீர்ப்பெருக்கினை  வற்றச்செய்தற்கு ஒரு
ஞாயிறு  அமையாமைபற்றிப்  பன்னிரு ஞாயிறுகள் பல்வேறிடங்களில்
கூட்டமாய்த்  தோன்றிப்  பேரொளியும்  பெருவெப்பமும் செய்தலால்,
“அகன்றுவரு   ஞாயிறு   பட்ட  கூட்டத்துச்  செஞ்சுடர்  நிகழ்வின்”
என்றார். படுதல், தோன்றுதல், அகலுதல்,  விரிதல்;  “அஃகி  யகன்ற
வறிவென்னாம்”  (குறள். 175) என்றாற்போல.
 

பொங்கு     பிசிர் என  வெள்ளத்தைச் சுட்டிக் கூறினார் . பிசிர்
வற்றுவதுபோல  இவ்வூழி  வெள்ளம்  வடவைத்  தீயால்  வற்றுமாறு
தோன்ற,     நுடக்கிய    வென்பதனைச்    செய்யிய    வென்னும்
வினையெச்சமாகக்  கொண்டு  “நிகழ்வின்”  என்பதனோடு  முடிப்பர்,
பழையவுரைகாரர்.

“ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்” வினால்,
திணியிருள்    கெடுவதுபோல,   சேரனது   கொற்ற   வொளியினால்
பகையிருள்  கெடுதல் பற்றியும் மடங்கற் றீயால் உருத்தெழு வெள்ளம்
வற்றுவதுபோல,   பகைவரது  கடல்மருள்  பெரும்படை  கெட்டழிதல்
பற்றியும் “செஞ்சுடர் நிகழ்வின் மடங்கற் றீயின் அனையை”  என்றார்.
இனி,  “பொங்கு பிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்” என்ற பாடமே
கொண்டு,  உருத்தெழு வெள்ளத்தின் பொங்குகின்ற பிசிரைக் கெடுத்த
செஞ்சுடர் நிகழ்வினையும், மடங்கற் றீயினையும் அனையை  என்பதே
நேரிய  முறையாத  லறிக.  செஞ்சுடர் நிகழ்வு பேரிருளைப் போக்கிப்
பிசிர்ப்படலத்தைக்   கெடுக்க,   மடங்கற்றீ   வெள்ளத்தைச்  சுவறச்
செய்யுமென வறிக.

இக்  கூறியவாற்றால், சினங்கெழு குருசில், நின் உடற்றிசினோர்க்கு,
சாறுபுரையும்  நின்  தொழிலொழித்து, துஞ்சலுறூஉம் பகல்புகு மாலை,
ஞாயிறுபட்ட  அகன்றுவரு  கூட்டத்துச்  செஞ்சுடர்  நிகழ்வினையும்,
பொங்கு   பிசிர்  நுடக்கிய  மடங்கற்  றீயினையும்  அனையை  என
முடிக்க. விழாக்காலம் நணியார், சேயார், சிறியார் பெரியார், உடையார்
இல்லார், இளையார், முதியார் எல்லார்க்கும் இன்பம் செய்தல் போலச்
சேரமானும்  எல்லார்க்கும்  தன்  ஆட்சியால்  இன்பம்   செய்தலின்,
“அம்சாறு  புரையும்  நின்  தொழில்” என்றார். இன்பஞ் செய்வதைத்
தவிர்த்துப்   பகைவர்க்குத்  துன்பம்  செய்தல்  பற்றி,  “நின்தொழில்
ஒழித்து........அனையை”   யென்றார்.  ஒழித்தென்னும்  வினையெச்சம்
அனையையென்னும்  குறிப்புவினை  கொண்டது. ஆக்கம் வருவித்துக்
கொள்க.

1 - 3. இகல்..........நாடு.

உரை : கறுத்தோர் -  நின்னைப் பகைத்தவர் ; இகல்பெருமையின்
படை கோள்அஞ்சார் - கருத்தில் பகைமை பெரிதாயிருத்தல்  பற்றிப்
படையெடுத்தற்கு  அஞ்சாராய்  ;  சூழாது துணிதல் அல்லது - காலம்
இடம் வலிமுதலியவற்றை ஆராயாமல் போர்செய்யத் துணிவதேயன்றி ;
நாடு - தம் நாட்டை ; உடன் காவல் வறிது எதிரார் - பலராய்க் கூடித்
காத்தற்குச் சிறிதும் மாட்டாராவர் காண் எ - று.

இகல்,    மாறுபாடு. இஃது உள்ளத்தே மிக்க வழி, அறிவு தொழில்
செய்யாமையின்,   சினத்திற்  கிரையாகி  மேல்  விளைவும்  பயனும்
ஆராய்ந்திலர்  என்பார்,  “இகல் பெருமையின் படைகோள் அஞ்சார்”
என்றும்,  “சூழாது  துணித லல்லது” என்றும் கூறினார். சூழ்ந்த வழித்
தமது சிறுமையும் நின் பெருமையும் இனிது தெளிந்து விளையக் கடவ
துன்பத்துக்கும்  பழிக்கும்  அஞ்சுவ  ரென்பார்,  “அஞ்சா” ரென்றும்,
பலராய்க்      கூடிக்        காக்கினும்   காவல்        நிரம்பாது
என்றற்கு,     “உடன்    காவலெதிரார்” என்றும்  கூறினார்.   ஒரு
சிறிது    போதும் அவரால் எதிர்த்து நிற்க முடியாது என்பது “வறிது”
என்பதனால்    வற்புறுத்தப்படுகிறது.    பழையவுரைகாரர்,    “இகல்
பெருமையின்   என்பதற்கு  இகலானது  பெரிதாகையானே”  என்றும்,
“இகலென்னும்     எழுவாய்க்குப்     பெருமையை    வினைநிலைப்
பயனிலையாகக் கொள்க” என்றும், “அஞ்சாரென்பது வினையெச்சமுற்”
றென்றும்,   “படைகோளைத்   துணிதலெனக்   கூட்டுக,”  வென்றும்,
உடன்காவ  லெதிராரென்றது,  பலரும்  தம்முட் கூடியும் காக்கமாட்டா
ரென்றவா” றென்றும் கூறுவர்.
 

இதுகாறும்     கூறியது ; சினங்கெழுகுரிசில், நின்னைக் கறுத்தவர்,
இகல் பெருமையின் படைகோளஞ்சாராய்ச் சூழாது துணிதலல்லது நாடு
உடன் காவல் எதிரார் ; மடம் பெருமையின் நின் பண்பு நன்கறியார் ;
நின்  உடற்றிசினோர்க்கு,  நின்  தொழி  லொழித்து, நீ துஞ்சலுறூஉம்
பகல்    புகு மாலை,  உருத்தெழு  வெள்ளம்  பரவுதலால்,  அகன்று
வருகூட்டத்துச்    செஞ்சுடர்  நிகழ்வினையும்  மடங்கற்  றீயினையும்
அனையை  யாகின்றாய் என்று வினைமுடிவு செய்க. பழையவுரைகாரர்,
“நின்னொடு  கறுத்தோர்  தம்  மடம்  பெருமையால்  நின்  முன்குடி
முதல்வர்க்கு அறிவு வலியுறுத்தும் சான்றோரை யொத்த நின் சூழ்ச்சிப்
பண்புடைமை   யறிகின்றிலர்  ;  நீதான்  சூழ்ச்சியுடையையே யன்றிக்
குருசிலே,    நின்னுடற்றிசினோர்க்குப்     போர்     செய்யுமிடத்து
மடங்கற்றீயின்  அனையை ; அதனையும் அறிகின்றிலராதலால், அவர்
தம்    இகல்   பெருமையானே    அஞ்சாராய்ப்    படைகோளைத்
துணிதலல்லது  நாட்டைச் சிறிதும் உடன்காவலெதிர் கொள்ளார் எனக்
கூட்டி வினைமுடிவு செய்க”, என முடிப்பர்.

“இதனாற்   சொல்லியது,  அவன் சூழ்ச்சியுடைமையும்   வென்றிச்
சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று”, என்பது பழையவுரை.


 மேல்மூலம்