முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
77.



எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்
என்றனி ராயி னாறுசெல் வம்பலிர்
மன்பதை பெயர வரசுகளத் தொழியக்
கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை
 5




மீபிணத் துருண்ட தேயா வாழியிற்
பண்ணமை தேரு மாவு மாக்களும்
எண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே
கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி
உகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச்
 10


சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்ன செலவிற்பல்
யானை காண்பலவன் றானை யானே.

     துறை - உழிஞை யரவம். வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - வென்றாடு துணங்கை
(4)

     (ப - ரை) 3. மன்பதை பெயரவென்றது படை கெட்டோட
வென்றவாறு.

     3-4. அரசு களத்தொழியக் கொன்னென்றது அரசரைக்
களத்திலே உடலொழிந்து கிடக்கக் கொன்றென்றவாறு.

     கொன்று தோளோச்சிய (4) பிணம் (5) எனக் கூட்டி, முன்பு
தம்முடன் பகைத்தவரைக் கொன்று தோளோச்சியாடி இப்பொழுது
இவன் களத்திற்பட்டுக் கிடக்கின்ற வீரர்பிணமென அவ்வீரர்
செய்தியை அவர் பிணத்தின் மேலேற்றிச் சொல்லியவாறாக உரைக்க.

     வென்றாடு துணங்கைப் (4) பிணம் (5) என்றது
ஊர்களிலேயாடும் துணங்கையன்றிக் 1களங்களிலே வென்றாடின
துணங்கையையுடைய பிணமென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'வென்றாடு துணங்கை' என்று
பெயராயிற்று.

     5. மீபிணத்தைப் பிணமீயெனக் கொள்க.
.எண்ணிற்றோவென்னும் ஒற்று மெலிந்தது.
8. கந்துகோளீயாதென்றது வினையெச்சவினைத் திரிசொல். 9.
சாடியென்னும் வினையெச்சத்தினைச் செலவு (11) என்னும்
தொழிற்பெயரோடு முடிக்க.

     10. ஈர்ம்படை.......................................................................

    வம்பலிர் (2), பொறையன் எனைப் பெரும்படையன் (1)
என்றனிராயின் (2), அவன் தானையிடத்துத் (12), தேரும் மாவும்
மாக்களும் (6) எண்ணற் கருமையின் எண்ணிற்றிலன்; ஆயின் (7),
தானையின் யானை தான் எண்ணினை யோவெனின், அதுவும்
எண்ணினேனல்லேன்; (கட்புலனுக்கு வரையறைப்பட்டது போல)
ஆபரந்தாலொத்த செலவிற் பல (11) யானையை அவன் தானையானே
காண்பல் (12) எனக் கூட்டி வினை. முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் படைபெருமைச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     இப்பாட்டிற் பொதுப்படப் படையெழுச்சி கூறியதனை
உழிஞையரவமென்றது ஆண்டு அப்படையெழுங்காலத்து
2நொச்சிமீதிற் போர் குறித் தெழுந்ததை ஒரு காரணத்தால்
அறிந்துபோலும்.

     (கு - ரை) 1-2. வழியிலே செல்கின்ற புதியோர்களே,
சினத்தாற் செய்யும் போரையுடைய சேரன் எவ்வளவு பெரிய
படையையுடையவனோ என்று கேட்பீராயின்.

     3-4. தம் பகைவரது படை கெட்டு ஓடவும், அரசர்கள்
போர்க்களத்தில் இறப்பவும் கொன்று கையைவீசி
ஆடியவென்றாடுகின்ற துணங்கைக் கூத்தையாடிய. துணங்கை
யாடியவர் இப்பொழுது பிணமான வீரர்.

     5-7. பிணத்தின்மேலே உருண்ட, வாய் தேயாத
சக்கரத்தையுடைய, செலுத்தற்கேற்பப் பண்ணுதலமைந்த தேரையும்
குதிரைகளையும், காலாட்களையும் எண்ணுதற்கு முடியாமையின்
எண்ணினேனல்லேன்.

     8-12. சேரனது யானைப் படையின் சிறப்பு.

     8-9. கட்டுத்தறியைக் கொள்ளாமல், குத்துக்கோல் பலவற்றை
முறித்து மேலே பறக்கும் பருந்தினது நிலத்தே விழும் நிழலைக்
கோபித்து

     10. உயர்ந்த பருக்கைக்கற்களையுடைய மேட்டுநிலத்தில்,
நீரை வெளிப்படுத்தற் பொருட்டுத் தோண்டும் குந்தாலி முதலிய
ஆயுதத்தையுடைய கொங்கு நாட்டிலுள்ளாரது (பதிற். 22 : 12 - 5);
"பரன்மட் சுவல முரணில முடைத்த, வல்வாய்க் கணிச்சிக் கூழார்
கோவலர்", "பயநிரை சேர்ந்த பாழ்நாட்டாங்கண், நெடுவிளிக்
கோவலர் கூவற்றோண்டிய, கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி"
(அகநா. 21 : 21 - 2. 155 : 7 - 9)

     11-2. பசுக்கள் பரந்தால் ஒத்த செல்லுதலையுடைய பல
யானைகளை அவன் சேனையிடத்தே காண்பேன்; பதிற். 78 : 14;
புறநா. 5 : 2.

     சாடி (9) என்னும் வினையெச்சம் செலவு (11) என்னும்
தொழிற்பெயரோடு இயையும்.

     சேரநாடு யானையில் மிக்கதென்பது, "வேழமுடைத்து
மலைநாடு" (தனிப்.) என்பதனாலும் அறியப்படும். மு. 'பகட்டினாலும்
மாவினாலும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கம்' (தொல். புறத்.
21, ந.)

     (பி - ம்) 5. தெய்வயாழின்.                (7)


     1"நிலம்பெறு திணிதோ ளுயர வோச்சிப், பிணம்பிறங்
கழுவத்துத் துணங்கை யாடி", "புலவுக்களத் தோனே, துணங்கை
யாடிய வலம் படு கோமான்" (
பதிற். 45 : 11 - 5, 57 : 3 - 4)
     2நொச்சி - மதில்.




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

7. வென்றாடு துணங்கை
 
77.எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்
என்றனி ராயி னாறுசொல் வம்பலிர்
மன்பதை பெயர வரசுகளத் தொழியக்
கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை
 
5மீபிணத் துருண்ட தேயா வாழியிற்
பண்ணமை தேரு மாவு மாக்களும்
எண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே
கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி
உகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச்
 
10சேண்பரண் முரம்பி னீர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்னபல் செலவின்
யானைகாண் பலவன் றானை யானே .
 

துறை : உழிஞை யரவம்.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்   : வென்றாடு துணங்கை.

1 - 2. எனைப்பெரும் படையனோ.......................வம்பலிர்.

உரை :  ஆறு   செல்   வம்பலிர்   -   இவ்வழியே   செல்லும்
புதுவோர்களே;   சினப்  போர்ப்  பொறையன் - சினத்துடன் போரை
வெற்றியுண்டாகச்     செய்யும் பெருஞ் சேரலிரும் பொறை ; எனைப்
பெரும்       படையனோ       என்றனிராயின்   -   எத்துணைப்
பெரியபடையையுடையவனோ   என்று   கேட்கின்றீராயின்,  கூறுவல்
கேண்மின் எ - று.
 

வம்பலர், புதுவோர் . “ஆரும் அருவும் ஈரொடு சிவணும்” (தொல்.
விளி.   21)  என்றதனால்,  வம்பலிர்  என  வந்தது.  இரந்தோர்க்கு
எண்ணிறந்த  களிறுகளையும் இரப்போர்க்கு அளவிறந்த மாக்களையும்
சிதறுதலைக்  காண்போர்க்கும், செல்லுமிடந்தோறும் வெற்றியே பெறக்
காண்போர்க்கும்  பொறையனது  படைப் பெருமை யறிதற்கு வேட்கை
நிகழுமாதலின்,   “எனைப்  பெரும்  படையனோ  என்றனி  ராயின்”
என்றார்.    ஏனைப்    பெரும்   படையனோ   என்றது   வம்பலர்
கூற்றினைக்கொண்டு  கூறியது.  சினத்தின்  விளைவு  போரும்,  அப்
போரின்  விளைவு  வென்றியுமாதலின்,  “சினப்போர்ப்  பொறையன்”
என்று சிறப்பித்தார். கூறுதல் கேண்மின் என்பது எஞ்சி நின்றது.

3 - 7. மன்பதை.......................இலனே.

உரை :   மன்பதை    பெயர  -   பகைப்படையிலுள்ள   வீரர்
அழிந்தோடவும்  ; அரசு களத் தொழிய - பகையரசர் போர்க்களத்தே
பட்டு  வீழவும்; கொன்று - அப் பகைவரைக் கொன்று; தோளோச்சிய
வென்றாடு  துணங்கை  -  தோளையுயர்த்திக்கை வீசியாடியவென்றாடு
துணங்கையினையுடையராய்ப்  பட்டு  வீழ்ந்த;  மீ  பிணத்து - அவர்
பிணத்தின்   மீது;   உருண்டதேயா  ஆழியின்  உருண்டோடியவாய்
தேயாத           சக்கரத்தையுடைய;     பண்ணமைதேரும்-கடுகிச்
செல்லுதற்கேற்பப்  பண்ணுதலமைந்ததேர்களும் ; மாவும் மாக்களும் -
குதிரைகளும்   காலாட்களும்  ;  எண்ணற்  கருமையின்  -  எண்ண
முடியாத   அளவிலமைந்திருத்தலால்   ;  எண்ணின்றோ  விலன்  -
எண்ணிற்றிலேன் எ - று.

பகைவர்     படைவீரரை மன்பதை (Mob) யென்றார், வீரர் எனப்
படற்குரிய  அழியாமை  அவர்பால்  இன்மையின் . உயிர் நீங்கியவழி
அரச போகமும் பிறவும்  ஒழிதலின், “அரசு களத்தொழிய” வென்றார்.
வீரர்  போரில் பகைவரை வென்று அப்போர்க்களத்தே கையை வீசித்
துணைங்கையாடித்  தம்  வென்றி  மகிழ்ச்சியால் இன்புறுவ ராதலின்,
அக் கூத்தினை “வென்றாடு துணங்கை” யென்றார் . பழையவுரைகாரர்,
“வென்றாடு   துணங்கைப்   பிணம்   என்றது,   ஊர்களிலே  யாடும்
துணங்கை  யன்றிக்  களங்களிலே  வென்றாடின துணங்கையையுடைய
பிணம்  என்றவா”  றென்றும்,  “இச்  சிறப்பானே  இதற்கு வென்றாடு
துணங்கை   யென்று   பெயராயிற்”   றென்றும்   கூறுவர்  .  அரசு
களத்தொழிய வென்றதற்குப் பழையவுரைகாரர், “அரசரைக் களத்திலே
உடலொழிந்து   கிடக்கக் கொன்றென்றவா”   றென்றும்,   “கொன்று
தோளோச்சிய  பிணம் எனக் கூட்டி, முன்பு தம்முடன் பகைத்தவரைக்
கொன்று  தோளோச்சி  யாடி இப்பொழுது  இவன்  களத்திற் பட்டுக்
கிடக்கின்ற  வீரர்  பிணமென அவ் வீரர் செய்தியை அப் பிணத்தின்
மேலேற்றிச்  சொல்லியவாறாக  வுரைக்க”  என்றும்,  “மீ பிணத்தைப்
பிணமீ யெனக்  கொள்க”    என்றும்     கூறுவர்  .  எண்ணிற்றோ
வெனற்பாலது மெலிந்து நின்றது.
 

8 - 12. கந்து.....................தானையானே.

உரை :  கந்து கோளீயாது - கட்டுத் தறியோடு  பிணிப்புண்டற்கு
இடந்தராது ; காழ்பல முருக்கி - குத்துக்கோல் பலவற்றையும் சிதைத்து
;  உகக்கும்  பருந்தின்  நிலத்து  நிழல்  சாடி  -  உயர்ந்து பறக்கும்
பருந்தினது  நிலத்திடத்தே  வீழும்  நிழலைச் சினந்து பாயும் ; சேண்
பரல் முரம்பின் - சேணிடமெங்கும் பரந்த பருக்கைக் கற்களையுடைய
முரம்பு  நிலத்திலே  ;  ஈர்ம்படைக்  கொங்கர் ஆபரந்தன்ன - கரிய
படையினை   யுடைய    கொங்கருடைய    ஆனிரைகள்    பரந்து
செல்வதுபோன்ற ; செலவின் பல்யானை செலவினையுடைய பலவாகிய
யானைகளை  ;  அவன்  தானை யான் - அவனுடைய தானையிலே ;
காண்பல்  -  காண்கின்றேனே  யன்றி  அவை  இத்துணை  யென்று
அறிந்திலேன் எ - று.

கந்தினிடத்தே      பிணித்தற்கு   அடங்காது    அக்  கந்தினை
முரித்தழித்தல்   பற்றி,  “கந்து  கோளீயாது”  என்றும்,  குத்தப்படும்
குத்துக்கோல்    அவ்    யானைகளின்    உடலிற்பட்டு   ஊடுருவும்
வலியின்மையின்  சிதைந்து  போவது  தோன்ற,  “காழ்பல  முருக்கி”
யென்றும்,  பொருளல்லாத  நிழலையும்  பகைப் பொருளாகக் கருதிச்
சினவுதற் கேற்ற மதக்களிப்புடைமைபற்றி, “உகக்கும் பருந்தின் நிலத்து
நிழல்  சாடி”  யென்றும்  கூறினார்  .  பிணிப்  புண்ணா  தென்னும்
பொருட்டாய     “கோளீயாது”    என்னும்    எதிர்மறை    வினை
யெச்சத்திரிசொல்   முருக்கி,   சாடியென்னும்  எச்ச  வினைகளுடன்
அடுக்கி நின்று “செலவின்” என்பதைக் கொண்டு முடிந்தன . உகத்தல்,
உயர்தல் .

கண்ணுக்    கெட்டிய.  வளவும்  பரல்  நிறைந்த முரம்பு நிலமே
காணப்படுதல்பற்றி, “சேண்  பரல்  முரம்பு”  என்றும், நீர் வேண்டிக்
கூவல்  முதலியன தோண்டுதற்குரிய  குந்தாலி  முதலிய  படைகளை
“ஈர்ம்  படை” யென்றும்  கூறினார்  . கொங்கர் ஆக்கள் பலவுடைய
ரென்பதை  “ஆ கெழு கொங்கர்” (பதிற். 22) என்று பிறரும் கூறுதல்
காண்க.  யானைக்  கூட்டத்தின்  மிகுதியினை ஆனிரைக் கூட்டத்தை
யுவமங்காட்டி யுரைத்தல் மரபு : “எருமை யன்ன கருங்கல் லிடைதோ,
றானிற்  பரக்கும்  யானைய”  (புறம். 5) என்று சான்றோர் உரைப்பது
காண்க.

“பல் யானை காண்பல்”  என்றதனால்  அவற்றை  இத்துணையென
வெண்ணற் கருமை பெறப்பட்டது.

இதுகாறும்     கூறியது :  ஆறு  செல்  வம்பலிர், சினப் போர்ப்
பொறையன்    எனைப்    பெரும்    படையனோ   என்றனிராயின்,
அவனுடைய  தேரு  மாக்களும் எண்ணற் கருமையின் எண்ணின்றோ
விலன்  ; அவன் தானையிலே கொங்கர் ஆ பரந்தன்ன செலவின் பல்
யானை    காண்பல்    ;    அவற்றையும்   இத்துணைய   வென்று
எண்ணிற்றிலேன்  என்பதாம்  .  இனி,  பழையவுரைகாரர், “வம்பலிர்,
பொறையன்   எனைப்  பெரும்  படையன்  என்றனிராயின்  அவன்
தானையிடத்துத்  தேரும்  மாவும்  மாக்களும்  எண்ணற் கருமையின்
எண்ணிற்றிலன் ; ஆயின்,  அவன்    தானையின்   யானை   தான்
எண்ணினையோ      வெனின்   அதுவும்   எண்ணினேனல்லேன் ;
கட்புலனுக்கு வரையறைப்பட்டதுபோல ஆபரந்தாலொத்த செலவிற் பல
யானையை  அவன்  தானையானே  காண்பல்  எனக்  கூட்டி வினை
முடிவு செய்க,” என்பர் .
 

“இதனாற் சொல்லியது  ;   அவன்  படைப்  பெருமைச்  சிறப்புக்
கூறியவாறாயிற்று”.

“இப்   பாட்டிற் பொதுப்படப் படையெழுச்சி கூறியதனை உழிஞை
யவர  மென்றது,  ஆண்டு  அப்படை யெழுங் காலத்து நொச்சி மீ்திற்
போர்  குறித்தெழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்து போலும்”, என்று
பழையவுரை கூறியது ஆராயத்தக்கது.


 மேல்மூலம்