முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
78.



வலம்படு முரசி னிலங்குவன விழூஉம்
அவ்வெள் ளருவி யுவ்வரை யதுவே
சில்வளை விறலி செல்குவை யாயின்
வள்ளிதழ்த் தாமரை நெய்தலொ டரிந்து
 5




மெல்லியன் மகளி ரொய்குவன ரியலிக்
கிளிகடி மேவலர் புறவுதொறு நுவலப்
பல்பய னிலைஇய கடறுடை வைப்பின்
வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி
 10




பேஎ மன்ற பிறழநோக் கியவர்
ஓடுறு கடுமுரண் டுமியச் சென்று
வெம்முனை தபுத்த காலைத் தந்நாட்
டியாடுபரந் தன்ன மாவின்
ஆபரந் தன்ன யானையோன் குன்றே.

     துறை - விறலி யாற்றுப்படை. வண்ணமும் தூக்கும்
அது.பெயர் - பிறழநோக் கியவர்
(10)

     (ப - ரை) 2. அவ்வெள்ளருவி - அழகிய வெள்ளருவி.
உவ்வரை யென்றது உவ்வெல்லையென்றவாறு. அதுவென்பது
அம்மலை யென்னுஞ் சுட்டு. வெள்ளருவியையுடைய அதுவெனக்
கூட்டுக.

     மகளிர் இயலி (5) நெய்தலொடு தாமரையரிந்து (4) கிளிகடி
மேவலர் புறவுதொறும் நுவலப் (6) பல்பயன் நிலைஇய கடறு (7)
எனக்கூட்டி, கிளிகடி மகளிர் நில அணுமையானே மருதநிலத்திலே
சென்று நெய்தலொடு தாமரையரிந்து பின் கிளிகடி தொழிலை
மேவுதலையுடையராய்ப் புறவின் புனங்கள்தோறும் கிளிகடி பாடலை
நுவலப் பல்பயங்களும் நிலை பெற்ற முல்லை நிலமென உரைக்க.

     வைப்பிற் (7) றகடூர் (9) எனக் கூட்டுக.

     ஆடவர்காக்கும் (8) இறும்பு (9) எனக் கூட்டுக.

     9. வில்பயில் இறும்பு - படைநிலை.

     10. பிறழநோக்கியவரென்றது தம் சினமிகுதியானே மாற்றார்
படைத் தோற்றத்தினை நெறியால் நோக்காது எடுத்தும் படுத்தும்
1கோட்டியும் பலபடப் பிறழநோக்கும் பகைவராகிய பல்லியமுடைய
ரென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'பிறழநோக்கியவர்' என்று
பெயராயிற்று.

     மாவினொடு (13) வென ஒடு விரித்து, முனைதபுத்த காலை
மாவினொடு (12) ஆபரந்தன்ன யானையோன் (14) எனவுரைக்க.

     சில்வளைவிறலி, செல்குவையாயின், (3), யானையோன் குன்று
(14) உவ்வெல்லையில் வெள்ளருவியுடைய அது என மாறிக் கூட்டி
வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-3. சிலவாகிய வளையை அணிந்த விறலி, நீ
சேரன் பாற் செல்வாயாயின், வெற்றியுண்டாகின்ற முரசொலியைப்
போல ஓசை விளங்குவனவாகி மலையினின்றும் கீழே விழும் அழகிய
வெள்ளிய அருவிகளையுடைய உவ்வெல்லையிடத்தேயுள்ளது.

     சில்வளை விறலி: பதிற். 40 : 21, 57 : 6.

     4-5. மென்மையான இயல்பையுடைய மகளிர் அசைந்துசென்று
நடந்து மருதநிலத்தேயுள்ள வளவிய இதழ்களையுடைய தாமரைப்பூவை
நெய்தற்பூவோடு அறுத்து.

     மகளிர் இயலி அரிந்து என மாற்றிப் பொருள்கொள்க.

     6. காட்டிற் புனத்தினிடத்தே கிளியைக்கடிதலை
விரும்புதலையுடையராகி அதற்குரிய பாட்டைப்பாட. 4 - 6.
இவ்வடிகளால் மருதமும் முல்லையும் கலந்திருத்தல் கூறப்பட்டது.

     7. பல பயன்களும் நிலைபெற்ற முல்லைநிலத்தின்
ஊர்களையுடைய.

     8-9. வெல்லும் போரைச் செய்யும் வீரர் மறத்தை விரும்பிப்
பாதுகாக்கும், விற்படைகள் நிலைபெற்ற காவற்காட்டையுடைய
தகடூரை அழித்து. ஆடவர் காக்கும் இறும்பு: பு. வெ.. 63.

     10. தெளிவாக, தம்பகைவர் படைத்தோற்றத்தை நேரே
நோக்காமல் எடுத்தும் படுத்தும் வளைத்தும் பலபட மாறுபட
நோக்கும் அச்சத்தையுடைய பார்வையையும் வாத்தியங்களையும்
உடைய பகைவரது.

     11. தம்மோடு எதிர்த்தார் ஓடுதற்குக் காரணமான மிக்க
மாறுபாடு அழியும்படி படையெடுத்துச் சென்று.

     12. கொடிய போரிலே கெடுத்த காலத்தில் தம்முடைய நாட்டில்.

     13-4. ஆடுகள் பரந்தாலொத்த குதிரைகளோடு, பசுக்கள்
பரந்தாலொத்த யானைகளையுடையோனது குன்று; மாவினொடு
என உருபுவிரிக்க.

     குன்று (14) உவ்வரையது (2) என முடிக்க.

     (பி - ம்.) 4. இதட்டாமரை. 9. உறுப்பிற்றகடூர். 10. பேயமன்ற.
(8)


     1கோட்டி - வளைத்து; தடங்கண் கோட்டித், தோண்முதற்
பசலை தீரத்தோன்றலைப் பருகு வார்போல்" (
சீவக. 470)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

8. பிறழ நோக்கியவர்
 
78.வலம்படு முரசி னிலங்குவன விழூஉம்
அவ்வெள் ளருவி யுவ்வரை யதுவே
சில்வளை விறலி செல்குவை யாயின்
வள்ளிதழ்த் தாமரை நெய்தலொ டரிந்து
 
5மெல்லியன் மகளி ரொல்குவன ரியலிக்
கிளிகடி மேவலர் புறவுதொறு நுவலப்
பல்பய னிலைஇய கடறுடை வைப்பின்
வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி
 
10பேஎ மமன்ற பிறழ நோக்கியவர்
ஓடுறு கடுமுரண் டுமியச் சென்று
வெம்முனை தபுத்த காலைத் தந்நாட்
டியாடுபரந் தன்ன மாவின்
ஆபரந் தன்ன யானையோன் குன்றே .
 

துறை  : விறலியாற்றுப்படை
பெயர்  : பிறழ நோக்கியவர்.

 3. சில்வளை..............யாயின்.

உரை : சில்ளை விறலி-சிலவாகிய வளைகளை யணிந்த விறலியே;
செல்குவையாயின்  -  பெருஞ் சேரல்  இரும்பொறை  பால்  செல்ல
விரும்பினையாயின்;
 

விறலியைச் சேரமானிடத்தே ஆற்றுப்படுக்கின்றாராதலின், சில்வளை
விறலியெனச்  சிறப்பித்தார் . விறல்படப்    பாடியாடு   மகளாதலின்,
ஆடுமிடத்து         வளை     பலவாயவழி       ஒன்றினொன்று
தாக்கியுடையுமாதலால் சிலவே யணிதல் அவட்கு  இயல்பு என அறிக.
இனி,  பல்வளையிடும்  பருவத்தாளல்லளென்பது  தோன்ற  இவ்வாறு
கூறினாரென்றுமாம்.  சேரமான்  பால் செல்லும் கருத்துடையளாதலைச்
சொல்லாலும்  குறிப்பாலும்  தெரிவித்தாளாதலால் “செல்குவையாயின்”
என்றார் .

4 - 14. வள்ளிதழ்.......................குன்றே .

உரை :  மெல்லியல்   மகளிர்   ஒல்குவனர் இயலி -  மெல்லிய
இயல்பினையுடைய  மகளிர் அசைந்து நடந்து மருத வயற்குச் சென்று
;    வள்இதழ்த்   தாமரை  நெய்தலொடு   அரிந்து   -   வளவிய
இதழ்களையுடைய    தாமரைப்    பூவையும்   நெய்தற்   பூவையும்
கொய்துகொண்டு  ; புறவுதொறும் கிளி கடி மேவலர் நுவல முல்லைப்
புலத்துக்குச்   சென்று   ஆண்டுள்ள  புனந்தோறும்  வந்து  படியும்
கிளிகளை  யோப்பும்  விருப்புடையராய்க்  கிளி கடி பாட்டைப்பாட ;
பல்பயன்   நிலைஇய   கடறுடை  வைப்பின்  பல்வகைப்பயன்களும்
நிலைபெற்றகாட்டிடத்து  ஊர்களையும்;வெல்போர்   ஆடவர்   மறம்
புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின் - வெல்லுகின்ற போரையுடைய
வீரர்  மறமே  விரும்பிக்  காத்தற்  றொழிலைச்  செய்யும்  விற்படை
நிரம்பிய  காவற்காட்டையுமுடைய;  தகடூர்  நூறி  - தகடூரை யழித்து;
பேஎம்  அமன்ற  பிறழ  நோக்கு  இயவர் - கண்டார்க்கு அச்சத்தை
யுண்டுபண்ணும்  பகைவரைப்  பிறழ்ந்து  நோக்கும் பார்வையினையும்
பல  இயங்களையுமுடைய  பகை வீரருடைய; ஓடுறு கடுமுரண் துமியச்
சென்று  -  தம்மோடு எதிர்த்தார் தோற்றோடுதற்குக் காரணமான வலி
கெடுமாறு  மேற்  சென்று;  வெம்முனை  தபுத்த  காலை  -  அவரது
கொடிய  போர் முனையைப் பொருதழித்த காலத்து ; தம் நாட்டு யாடு
பரந்தன்ன   மாவின்   -   அப்   பகைவர்   நாட்டிலே   ஆடுகள்
பரந்தாற்போலப்  பரந்து  தோன்றும் குதிரைகளையும் ; ஆபரந்தன்ன
யானையோன்  குன்று-ஆக்கள்  பரந்தாற்  போலப் பரந்து தோன்றும்
யானைகளையு முடையனாகிய சேரமானது குன்று.

இயல்பாகவே   மென்மைத்தன்மையும் அதனால் அசைந்த நடைய
முடையவராதலின் மகளிரை,  “மெல்லியல்  மகளிர் ஒல்குவன ரியலி”
யென்றார்.  தாமரையும்  நெய்தலும்  அரிந்தமை  கூறியதனால், மருத
வயல் பெறப்பட்டது. ஒடு, எண்ணொடு, அண்மையிலே முல்லைப்புறவு
மிருத்தலின், மருதநிலஞ்  சென்ற  மகளிர்,  உடனே  முல்லைப்புறவு
சேறலையும் கூறினார் . புறவு சேறற்குக் காரணம் இஃதென்பார், “கிளி
கடி.  மேவலர்”  என்றார் . முல்லை முதலிய நானிலப்பயனும் ஒருங்கு
பெறுமாறு   தோன்ற,   “பல்பயன்  நிலைஇய  கடறுடை  வைப்பின்”
என்றார்.  இனிப்  பழையவுரைகாரர்,  “மகளிர்  இயலி  நெய்தலொடு
தாமரை  யரிந்து  கிளிகடி  மேவலர்  புறவுதொறும் நுவலப் பல்பயன்
நிலைஇய கடறு எனக் கூட்டிக் கிளிகடி   மகளிர் நிலவணுமை யானே
மருதநிலத்திலே  சென்று    நெய்தலொடு  தாமரை   யரிந்து,  பின்
கிளிகடி  தொழிலை மேவுதலை யுடையராய்ப் புறவின் புனங்கடோறும்
கிளிகடி  பாடலை  நுவலப்  பல்பயங்களும்   நிலைபெற்ற  முல்லை
நிலமென  வுரைக்க” என்றார் 
 

வைப்பினையும்      இறும்பினையுமுடைய  தகடூரென  இயையும்.
“வைப்பின்  தகடூர்  எனக்  கூட்டுக”,  என்றும்,”  ஆடவர்  காக்கும்
இறும்பெனக்   கூட்டுக”,   வென்றும்   பழையவுரைகாரர்   கூறுவர்.
வில்பயில்  இறும்பு  .  வில்லேந்திய  வீரர்படை  யிருக்கும்  இறும்பு
பேஎம்,    அச்சம்.    கண்டார்க்கு    அச்சத்தை   யுண்டுபண்ணும்
பார்வையினையுடைய  வீரர்,  பகைவரை  நேரே நோக்காது எடுத்தும்
படுத்தும்  கோட்டியும்  பார்க்கும்  இயல்புபற்றி,  “பிறழ  நோக்கியவ”
ரென்றார்  ;  பழையவுரைகாரரும்,  “பிறழ  நோக்கியவரென்றது,  தம்
சினமிகுதியானே  மாற்றார் படைத்தோற்றத்தினை நெறியால் நோக்காது
எடுத்தும் படுத்தும் கோட்டியும் பலபடப் பிறழ நோக்கும் பகைவராகிய
பல்லிய  முடையாரென்றவா”,  றென்றும்  “இச்  சிறப்பானே இதற்குப்
பிறழ  நோக்கியவரென்று  பெயராயிற்”, றென்றும் கூறுவர் . நெறியால்
நோக்கிய   வழி,   படையிலுள்ளாரிற்  பலர்  இனியரும்  நெருங்கிய
முறையினருமாய்க்    காணப்படுவரென்றும்,   அக்காலை   யவர்பால்
கண்ணோடுமாயின்  மறம்  வாடுமென்றும்  கருதிப்  பிறழ நோக்குவது
வீரர்க்கு   இயல்பாகலினாலும்;   அப்பிறழ்ச்சி   நோக்கிற்கு  ஆண்டு
இயம்பும்   இயங்கள்   துணையாகலினாலும்   படைவீரரைப்  “பிறழ
நோக்கியவர்”  என்றார் . இச் சிறப்பாலே இத் தொடர் இப்பாட்டிற்குப்
பெயராயிற்றெனக்   கோடல்  சீரிதென  வறிக  .  பிறழ்ச்சி  நோக்கம்
கண்டார்க்கு  அச்சம்  பயக்கும்  தன்மைகள் நிறைந்திருத்தல்  பற்றிப்
“பேஎம்   அமன்ற”   என்றாரென்க.  இனி  இவ்வியவரது வலிநிலை
கூறுவார்.   “ஓடுறு   கடுமுரண்”   என்றார்.   இவ்வியவர் தகடூரைக்
காத்துநின்ற  பகைவீரர்  .  அப்பகைவர்  கொங்கராதலால்; அவர்பால்
உள்ள யாடுகளின் பன்மையும் ஆக்களின் பன்மையும்  உணர்த்துவார்,
“தந்நாட்டு   யாடு   பரந்தன்ன  மாவின்”  என்றும்,  “ஆபரந்தன்ன
யானை”  யென்றும் கூறினார் . பழையவுரைகாரர், “மாவினொடு வென
ஒடுவிரித்து   முனை   தபுத்தகாலை   மாவினொடு  ஆ  பரந்தன்ன
யானையோஎ என வினைமுடிவு செய்க”, என்றார்.

1 - 2. வலம்படு..............................யதுவே .

உரை : உவ்வரை - உவ்வெல்லையில், உள்ள ; வலம்படு முரசின் -
வெற்றியிடத்து  முழங்கும்  முரசுபோல  ;  இலங்குவன விழூஉம் அவ்
வெள்ளருவி  அது  -  முழக்கமும் விளக்கமு முடையவாய் வீழ்கின்ற
அழகிய வெள்ளிய அருவிகளையுடைய அதுவாகும் எ - று.

வரை,     எல்லை.   தோன்றுகின்ற   குன்றுகளில்    உயர்ந்து
அருவிகளையுடைத்தாய்த் தோன்றும் குன்றினை “அது” எனச் சுட்டிக்
காட்டுகின்றாராதலின், “உவ்வரை அவ் வெள்ளருவி யதுவே” என்றார்.
பெருமுழக்கம்   எழுதலின்,   வெற்றி முரசினை  யுவமம்  கூறினார்.
“வலம்படு  முரசு”  எனவே,  வெற்றி முரசாதல்  பெற்றாம். விளக்கம்
கூறவே முழக்க முண்மை பெறப்பட்டது.
 

இதுகாறும்  கூறியவாற்றால், “சில்வளை விறலி, செல்குவையாயின்
யானையோன் குன்று  உவ்வெல்லையில் வெள்ளருவியையுடைய அது
என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க”.

இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பு கூறியவாறாயிற்று.


 மேல்மூலம்