79.
|
உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைபோற் றலையே யிரவலர் நடுவட்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி
நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும் |
5
|
பிறர்நசை
யறியா வயங்குசெந் நாவிற்
படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய வளப்பருங் குரையை யதனால்
நின்னோடு வாரார் தந்நிலத் தொழிந்து |
10
|
கொல்களிற்
றியானை யெருத்தம் புல்லென
வில்குலை யறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர்
அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய
அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து |
15
|
தும்பை
சான்ற மெய்தயங் குயக்கத்து
நிறம்படு குருதி புறம்படி னல்லது
மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற்
கடவு ளயிரையி னிலைஇக்
கேடில வாக பெருமநின் புகழே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும்
தூக்கும் அது. பெயர் - நிறம்படு குருதி (16)
(ப
- ரை) 4.
பிரிந்த நின்வயின் நல்லிசையெனக் கூட்டுக;
பிரிதல் - தன்னைவிட்டுத் திக்கு 1விதிக்குக்களிலே போதல்.
இசை
(4) அறியா (5) என முற்றாக அறுத்துரைக்க.
9.
நின்னொடுவாரார் தந்நிலத்து ஒழிந்தென்றது நின்னை
வழிபட்டு நின்னொடு ஒழுகாதிருத்தலேயன்றித் தந்நிலத்திலே
வேறுபட்டு நின்றென்றவாறு.
யானையெருத்தம்
புல்லென (10) வில்குலையறுத்துக்
கோலின்வாரா (11) வேந்தர் (12) என்றது முன்பு நின்வழி ஒழுகாது
ஒழிந்திருந்தவழிப் பின்பு தாம் களத்து நின்போர் வலிகொண்டு இனி
நின்வழி ஒழுகுதுமெனச் சொல்லித் தாம் ஏறிய யானையெருத்தம்
புல்லென வில்லின் நாணியை அறுத்து நின்செங்கோல் வழி ஒழுகாத
வேந்தரென்றவாறு.
13.
2அழைத்தல் - வருத்தத்தாற் கதறுதல்.
தும்பை
சான்ற மெய் தயங்கு உயக்கத்து (15) நிறம்படு குருதி
(16) என்றது வீரருடைய, தும்பை சூடியதற்கேற்ப நின்று
பொருதலாற்றலையுடைய உடலானது அசையும்படி வந்த
ஓய்வினையுடைய நிறங்களைத் திறந்து விட்ட குருதியென்றவாறு.
அல்லாத
இடங்களிற் குருதிகொள்ளாமையின், 3நிறங்களைத்
திறக்க ஆண்டு உண்டான குருதியென்பதாயிற்று.
இச்சிறப்பானே
இதற்கு, 'நிறம்படுகுருதி' என்று பெயராயிற்று.
4கோடறுத்து
இயற்றிய (13) கட்டின்மேலிருந்து (14) நிறம்படு
குருதி புறம்படினல்லது (16) மடை எதிர்கொள்ளாக் (17) கடவுள் (18)
எனக் கூட்டி, அவ்வாறு செய்ததொருகட்டில் கொடுவந்திட்டதன்
மேலிருந்து அவ்வாறு கொடுப்பதொரு பலியுண்டாயினல்லது பலி
கொள்ளாக் கடவுளென உரைக்க.
கட்டின்மேலிருந்தலல்லது
(14) குருதிபுறம்படினல்லது (16) என
அல்ல தென்பதனை இரண்டிடத்தும் கூட்டிக் கொள்க.
18.
கடவுளென்றது அவனால் இவ்வாறு வழிபடும்
கொற்றவையை; அயிரை - அக்கொற்றவை உறைவதொரு மலை.
கோதைமார்ப
(7), செருவத்துஉயிர்போற்றலை (1); இரவலர்
நடுவண் கொடை போற்றலை (2); பெரியோரைப் பேணிச்சிறியோரை
அளித்தி (3), அனைய நின்குணங்கள் அளப்பரியை; நீ அவ்வாறு
ஒழுகுதலாற் (8) பிரிந்த நின்வயின் நல்லிசை இனிக் கனவிலும் (4)
பிறர் நச்சுதலறியா; அவ்வாறு அறியாமையின் (5), பெரும,
அவ்வாறாகிய நின்புகழ் (19) நிலைஇ நின்னிடத்துக் கேடிலவாக (18)
என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க.
'அனையவளப்பருங்குரையை'
(8) என்றது 'சிறியோரையளித்தி'
(3) என்றதன் பின்னே நிற்கவேண்டுதலின், மாறாயிற்று.
இதனாற்
சொல்லியது, அவன் பலகுணங்களும் ஒருங்கு
புகழ்ந்து வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. போரில் உயிரைப் பொருளாக எண்ணமாட்டாய்.
2.
இரப்பாராகிய பரிசிலர்நடுவே கொடையைப் பாதுகாக்க
மாட்டாய்; என்றது அளவிறந்து கொடுப்பாயென்றபடி.
3.
நின்னைக் காட்டிலும் பெரியோர்களைப் பாதுகாத்துச்
சிறியோர்களுக்கு அருள் செய்வாய்.
4-5.
நின்பால் நின்றும் பிரிந்து பல திசைகளிற் சென்ற
நின் நல்லிசைகள் கனவினிடத்தாயினும் பிறரை விரும்புதலையறியா;
அறியா: முற்று. கல்வி, வீரம், கொடை முதலிய காரணங்களால் இசை
பலவகைப் படுதலிற் பன்மையாற் கூறினார்; பதிற்.
12 : 8, உரை.
6.
படியோர்த் தேய்த்த ஆண்மை: மலைபடு. 423.
6-7.
மகளிர் தோளிடைக்குழைந்த தார்: புறநா.
73 : 13-4,
குறிப்புரை.
5-7.
விளங்கிய பொய்கூறாத நாவினையும், பகைவரை
அழித்த ஆண்மையையும் உடைய வளையை யணிந்த மகளிருடைய
தோளினிடத்தே குழைந்த மாலையை யணிந்த மார்பை உடையோய்.
படியோர்-பிரதியோரென்னும் வடமொழித்திரிவு (அகநா.
22 : 5,
உரை). நாவினையும் ஆண்மையையும் உடைய மார்ப என இயையும்.
8.
அப்படிப்பட்ட நின்குணங்கள் அளத்தற்கரியை; அதனால்,
குரை: அசைச்சொல்.
9-10.
நின்னொடு இணங்கி வருதலிலராகித் தம்முடைய
நாடுகளில் தங்கியிருந்து, பின்பு போர்க்களத்தே நின்வன்மைகண்டும்,
கொல்லுகின்ற களிறாகிய பட்டத்து யானையின் பிடரிக்கழுத்துப்
பொலி வழிய; "யானை யெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச்,
சேனைத் தலைவராய்ச் சென்றோரும்" (நாலடி.
3) என்பதற்கு மாறான
நிலையைக் கூறியபடி.
11-2.
வில்லின் நாணையறுத்து நினது செங்கோலின்கீழ் அடங்கி
வாராத, முன்புவெல்லும் போரைச்செய்த அரசருடைய முரசின்
கண்ணைக் கிழித்து. குலை - நாண்; "குலையிழி பறியாச் சாபத்து
வயவர்" (பதிற். 24 : 12)
12-4.
அவருடைய பட்டத்து யானை வருத்தத்தாற் கதறும்படி
அதனுடைய கொம்பை வெட்டி அதனால் இயற்றப்பட்ட
தெய்வத்தன்மையுடைய இயல்பைப்பெற்ற கட்டிலின்மேலிருந்தல்லது;
புறம்படினல்ல தென்பதிலுள்ள அல்லதென்பதை இருந்தென்பதனோடும்
கூட்டுக.
15.
தாம் தும்பைப் பூவைச் சூடியதற்கேற்ப நின்று பொருகின்ற
ஆற்றலையுடைய உடலானது அசையும்படி வந்த ஓய்வினையுடைய.
16.
உயிர்நிலையினின்றும் உண்டான இரத்தம் பலியாக
அளிக்கப்படும் பொருள்மேற் பட்டாலல்லாமல். "அருநிறந் திறந்த
புண்ணுமிழ் குருதி" (பதிற். 11 : 8)
17-8.
நிவேதனமாக அளிக்கப்படும் பொருளை ஏற்றுக்
கொள்ளாத அச்சம் வருகின்ற முறைமையையுடைய துர்க்கை வாழும்
அயிரை மலையைப் போல நிலைபெற்று. அயிரைமலையிலுள்ள
துர்க்கை சேரர்களால் வழிபடப் பெற்றமை; பதிற்.
3-ஆம்
பத்துப்பதிகம், 8, உரை: "கண்ணுதலோன் காப்பக் கடன்மேனி
மால்காப்ப, எண்ணிருதோ ளேந்திழையாடான் காப்ப" (தொல்.
புறத்.
35, ந. மேற்.) என்னும் புறநிலைவாழ்த்துச் செய்யுளிலும் துர்க்கை
வழிபடப் பெற்றமை காண்க.
19.
பெருமானே, நின்னுடைய புகழ்கள் அழிவில்லாமல்
விளங்குக.
18-9. நின்புகழ் அயிரையின் விளங்குக என்றாராயினும்
சேரனை வாழ்த்துதலே கருத்தாகக் கொள்க. (பதிற்.
70 : 26 - 7)
மலைபோல்
நிலைபெறுக வென்றல்: "பூமலி நாவற்
பொழிலகத்துப் போய்நின்ற, மாமலைபோன் மன்னுக நீ"
(பு. வெ. 226)
(பி
- ம்) 4. பிறந்த. 8. அனையையளப் 9. வாரார்நின்னிலத்
தெளிந்து. (9)
1விதிக்கு
- கோணத்திசை.
2அழைப்பு
- பொருள்புணரா ஓசை (திருச்சிற்.
102, பேர்.)
3நிறம்
- உயிர்நிலை; "அறந்திறந்த வாயி லடைத்ததா லண்ணல்,
நிறந்திறந்த நீளிலை வேல்" (பு. வெ.
80).
4"உலமரு
நெஞ்சி னொட்டா மன்னவ ரூர்ந்த யானை, வலமருப்
பீர்ந்து செய்த மணிகிளர் கட்டில்" (சீவக.
2566) |