வழங்கும் பெரும்பாழாகும்; அவை அளிய என்பதாம்; பழையவுரைகாரர், “உரவோ ரும்பல், தோன்றல், குட்டுவ, நீ சீறினையாதலின், நாடுகெழு தண்பணை அளிய தாம் பெரும்பாழாகும் எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று”. சீறினை யாதலின் நாடுகெழு தண்பணை பாழாகு மென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால் வஞ்சித்துறைப் பாடாண் பாட்டாயிற்று. உளைப் பொலிந்த மா வென்பது முதலாய நான்கடிகளும் கடிமிளை யென்பது முதலாய இரண்டடிகளும் வஞ்சியடியாகலின், வஞ்சித்தூக்கும், ஏனைய நேரடியாகலின் செந்தூக்கு மாகலின், இதற்குத் தூக்கு வகுத்தோர் செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் என்றார். புகலென அடியிடையும் ஓடுவென அடியின் இறுதியும் வந்தன கூன். 3. ததைந்த காஞ்சி |