உயர்ந்தோ னேந்திய பிண்டமாகிய, எறும்பு மூசா இறும்பூது சான்ற மரபினையுடைய, நெய்த்தோர் கலந்த நிறைமகி ழிரும்பலியைக் காக்கையொடு பருந்திருந் தார, செருப்புகல் மறவர் குரலெடுத்துப்பாடும் இசைவிருந்தோடு பெருஞ்சோற்று விருந்துண்பித்தற்கு, வேந்தே, நின் தழங்கு குரல் முரசு எறியப்படுகிறது என்பதாம். இனிப் பழையவுரைகாரர், “மென்பால் முதலாகக் கடறீறாக எண்ணப்பட்ட ஐவகை நிலத்து மக்களும் பிறவும், அந்நிலத்து வேந்தரும் வேளிரும் தங்களிலே யொன்று மொழிந்து, அரண்வலியாதே நடுங்காநிற்கும்படி, கடுங்குரல் விசும்படைந் ததிரும்படி, கடுஞ்சினத்தைக் கடாவிப் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க, உயர்ந்தோ னேந்திய பிண்டத்தினையும், எறும்பு மூசா மரபின் நெய்த்தோர் தூஉய நிறைமகிழிரும்பலியினையும் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தாரா நிற்க, செருப்புகல் மறவரது குரலோடே கோட்பாடு பொருந்திப் பெருஞ்சோறு உகுத்தற்கு எறியப்படாநின்றது நின் முரசென வினைமுடிவு செய்க” வென்பர். இதனால் சேரனது வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. வேந்தரும் வேளிரும் அஞ்சி நடுங்க, முரசிற்குப் பலியிட்டு, பெருஞ்சமம் ததைந்த செருப்புகல் மறவர்க்குப் பெருஞ்சோறு வழங்குவது குறித்து நின் முரசு முழங்குகிறதெனப் பல்யானைச் செல்கெழு குட்டுவன், தன் வீரர்க்கு வழங்கும் பெருஞ்சோற்றுப் பெருவிருந்து இப்பாட்டின்கட் பொருளாக இருத்தலின், இது பெருஞ்சோற்று நிலை என்னும் துறையாயிற்று. மூன்றாம் பத்து மூலமும் உரையும் முற்றும். |